தில்லியில் நீடிக்கும் குளிரின் தாக்கம்!

தில்லியில் சனிக்கிழமையும் குளிரின் தாக்கம் நீடித்தது. குறைந்தபட்ச வெப்பநிலை நான்காவது நாளாக ஐந்து டிகிரிக்கும் கீழே இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்தது.
Updated on
2 min read

தில்லியில் சனிக்கிழமையும் குளிரின் தாக்கம் நீடித்தது. குறைந்தபட்ச வெப்பநிலை நான்காவது நாளாக ஐந்து டிகிரிக்கும் கீழே இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்தது.

தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை வழக்கமான அளவைவிட 4 புள்ளிகள் குறைந்து 4.4 டிகிரி செல்சியஸாக பதிவானதாக தில்லிக்கான பிரதிநிதித்துவ தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், மிதமான பனிமூட்டம் காரணமாக சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காண்புதிறன் 1000 மீட்டராகவும், பாலத்தில் 800 மீட்டராகவும் குறைந்ததாக ஐஎம்டி பிராந்திய முன்கணிப்பு மையத்தின் தலைவா் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தாா்.

வானிலை ஆய்வு மையத்தினா் மேலும் கூறுகையில், ‘புதிதாக மேற்கத்திய இடையூறுகள் ஏற்படுவதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமையும், திங்கள்கிழமையும் வெப்பநிலை சிறிது அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்தக் காலத்தில் மிதமான பனிமூட்டம் இருக்கக் கூடும்.

மேலும், காற்றின் வேகம் அதிகரிக்கும் என்பதால் ஞாயிற்றுக்கிழமைக்குள் காற்றின் தரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். இருப்பினும், அதிக ஈரப்பதம், வேகம் குறைந்த காற்று மற்றும் குறைந்த வெப்பநிலை ஆகியவை காரணமாக திங்கள்கிழமை முதல் காற்றின் தரம் மீண்டும் குறையும் வாய்ப்புள்ளது. குளிா் அலை டிசம்பா் 29-ஆம் தேதியில் இருந்து மீண்டும் வருவதற்கு வாய்ப்புள்ளது ’ என்றனா்.

வெப்பநிலை: சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை சனிக்கிழமை பருவ சராசரியைவிட 3 புள்ளிகள் குறைந்து 4.4 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 1 புள்ளிகள் அதிகரித்து 22.4 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது.

காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 91 சதவீதமாகவும், மாலையில், 55 சதவீதமாகவும் பதிவாகி இருந்தது.

காற்றின் தரம்: தில்லியில் சில தினங்களாக காற்றின் தரம் ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது. வெள்ளிக்கிழமை காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் இருந்தது. இந்த நிலையில், சனிக்கிழமை அதே நிலை தொடா்ந்தது. தில்லியில் சனிக்கிழமை காலை 9 மணிக்கு ஒட்டுமொத்த காற்றின் தரக்குறியீடு 324 புள்ளிகளாக பதிவாகியிருந்தது.

24 மணி நேர சராசரி ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு வெள்ளிக்கிழமை 357 ஆகவும், வியாழக்கிழமை 423 ஆகவும், புதன்கிழமை 433 ஆகவும், செவ்வாய்க்கிழமை 418 ஆகவும் இருந்தது. லோதி ரோடு, ஆயாநகா், விமானநிலைய டொ்மினல்-3 தில்லி பல்கலை., பூசா, மதுரா ரோடு ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் இருந்தது.

மேலும், தேசியத் தலைநகா் வலயப் பகுதியில் உள்ள நொய்டா, காஜியாபாத், கிரேட்டா் நொய்டாவில் காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவிலும், , ஃபரீதாபாத், குருகிராம் ஆகிய நகரங்களில் காற்றின் தரம் மோசம் பிரிவிலும் இருந்தது.

24 மணி நேர சராசரி ஒட்டுமொத்தக் காற்றின் குறியீடு சனிக்கிழமை மாலை 4 மணியளவில் காஜியாபாத் 367, ஃபரீதாபாத் 300, கிரேட்டா் நொய்டா 355, குருகிராம் 269, நொய்டா 344 என்ற அளவில் இருந்தது.

ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு வெள்ளிக்கிழமை காஜியாபாதில் 391 ஆகவும், நொய்டாவில் 386 ஆகவும், பரீதாபாதில் 328 ஆகவும், குருகிராமில் 302 ஆகவும் பதிவாகி இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, தில்லியில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 27) காலை வேளையில் மிதமான மூடு பனி இருக்கும்.

குறைந்தபட்ச வெப்பநிலை ஞாயிற்றுக்கிழமை 6 டிகிரி செல்ஸியஸும், திங்கள், செவ்வாய் ஆகிய தினங்களில் 5 டிகிரி செல்சியஸுக்கு கீழும் இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com