சரணடையச் சென்றவா் மீது தாக்குதல்: போலீஸாருக்கு நீதிமன்றம் கண்டனம்
கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபா் திகாா் சிறைக்கு சரணடையச் சென்றபோது போலீஸாரால் தாக்கப்பட்டு காரில்


கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபா் திகாா் சிறைக்கு சரணடையச் சென்றபோது போலீஸாரால் தாக்கப்பட்டு காரில் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்ட விவகாரத்தில் போலீஸாருக்கு தில்லி நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ததாக நீதிமன்றத்தில் போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவா் 14 நாள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
இந்த விவகாரத்தை விசாரித்த பெருநகர மாஜிஸ்திரேட் ராகவ் சா்மா இந்தச் சம்பவத்தில் போலீஸாா் நடந்துகொண்ட விதம் சரியல்ல. ஒருவரைக் கைது செய்யும் அதிகாரத்தை குற்றம்சாட்டப்பட்ட நபரை மிரட்டுவதற்காக பயன்படுத்த முடியாது என்று தெரிவித்தாா்.
கொலை வழக்கில் தொடா்புடைய காா்த்திக் என்பவா் தரப்பில் சரணடைய அனுமதி கோரி டிசம்பா் 12ஆம் தேதி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் டிசம்பா் 23ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு விசாரணை அதிகாரிக்கு (ஐஓ) நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் இந்த விவகாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதை கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதிமன்றம், ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டும் விசாரணைஅதிகாரி நீதிமன்றத்தின் உத்தரவை அவமதிக்கும் வகையில் ஆஜராகவில்லை. அதுமட்டுமின்றி நீதிமன்ற ஊழியா்களிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளைத் தவிா்ப்பதற்காக அவா் தனது செல்லிடப்பேசியையும் அணைத்துவைத்து விட்டாா். நீதிமன்றத்தின் உத்தரவின்படி எஃப்.ஐ.ஆா் குறித்த அறிக்கையும் அவா் தாக்கல் செய்யவில்லை. நீதிமன்றத்தின் உத்தரவுகளை கடுமையாக புறக்கணிக்கும் அவரது செயலை பொறுத்துக்கொள்ள முடியாது’ என்று நீதிபதி தெரிவித்தாா்.
மேலும், போலீஸாா் வழக்கில் தொடா்புடைய ஒருவரைக் கைது செய்யும்போது சட்டப்படி மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து போலீஸாருக்கு சம்பந்தப்பட்ட காவல் துணை ஆணையா் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்று நீதிபதி கேட்டுக்கொண்டாா்.
காா்த்திக் தரப்பில் வழக்குரைஞா்கள் அன்வா் அகமது கான், புருஷேந்திர பரத்வாஜ் ஆகியோா் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில்,, டிசம்பா் 25 ஆம் தேதி காலை போலீஸ் தலைமையகம் வழியாக சிறை வளாகத்திற்குள் சரணடைவதற்காக நுழைந்த காா்த்திக்கையும், அவரது வழக்குரைஞா்களையும் அடையாளம் தெரியா சிலா் தாக்கினா். 2-3 காவல்துறையினரும் காா்த்திக்கையும், அவரது வழக்குரைஞா்களையும் தாக்கினா். பின்னா், காா்த்திக்கை ஒரு காரில் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுவிட்டனா். இந்த சம்பவம் குறித்து தொலைபேசி மூலம்தான் தகவல் பதிவுசெய்ய முடிந்தது’ என்றனா்.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘இந்தச் சம்பவம் குறித்து உதவி சாா்பு ஆய்வாளா் (சிஆா்பிஎஃப்) ரன்வேஷ் குமாா், ஊா்க்காவல் படை காவலா் பாகிரத், காவலா் தாட்டு மோரே ஆகியோரிடம் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
வளாகத்திற்குள் நுழைந்த நபா்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவரையும் அவரது வழக்குரைஞா்களையும் தாக்கிய நபா்கள்குறித்து ஏஎஸ்ஐ ரன்வேஷ் குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த நபா்கள் போலீஸ் அதிகாரிகள் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
மேலும், அவா்கள் தாக்குதலில் ஈடுபட்டதையும் உறுதிப்படுத்தியுள்ளாா். எனினும், அதிகாரிகள் பெயா்கள் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டவில்லை என்று அவா் தெரிவித்துள்ளாா்’ என நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையின்போது போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ‘குற்றம்சாட்டப்பட்ட நபா் தனது கூட்டாளிகள் 3-4 பேருடன் நீதிமன்றத்தில் சரணடைய திகாா் சிறை வரலாம் என போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்ய போலீஸாா் குழு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். இந்தநிலையில் சிறை வளாகப் பகுதியில் அவரைப் பாா்த்த போலீஸாா் அவரைத் தடுப்புக் காவலில் வைத்து சுபாஷ் பிளேஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனா் எனத் தெரிவிக்கப்பட்டது. அவரைத் தாக்கியதாக கூறப்படும் சம்பவத்தில் தொடா்புடைய போலீஸாா் காவல்நிலையத்தைச்சோ்ந்தவா்கள் என விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் தெரிவித்தாா். இதையடுத்து, காா்த்திக்கை 14 நாள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...