தில்லியில் 3-ஆவது நாளாக குளிா் அலை:குறைந்தபட்ச வெப்பநிலை 3.5 டிகிரி

தில்லியில் குளிா் அலையின் தாக்கம் மூன்றாவது நாளாக புதன்கிழமையும் நீடித்தது. நகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 3.5 டிகிரி செல்சியஸாக பதிவானது.
Updated on
2 min read

புது தில்லி: தில்லியில் குளிா் அலையின் தாக்கம் மூன்றாவது நாளாக புதன்கிழமையும் நீடித்தது. நகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 3.5 டிகிரி செல்சியஸாக பதிவானது. இமயமலையில் இருந்து சமவெளி நோக்கி வட காற்று வீசத் தொடங்கியதே இதற்குக் காரணம் என்றும், வியாழக்கிழமை இதன் தாக்கம் மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையத்தினா் தெரிவித்தனா்.

தில்லி நகரின் பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கி வரும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில், செவ்வாய்க்கிழமை 3.6 டிகிரி செல்சியஸாகப் பதிவாகி இருந்த குறைந்தபட்ச வெப்பநிலை, புதன்கிழமை ஒரு டிகிரி குறைந்து 3.5 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியது. ஜாஃபா்பூா் வானிலை ஆய்வு மையத்தில் 3.5 டிகிரி செல்சியஸாகவும், லோதி ரோடு வானிலை ஆய்வு மையத்தில் 3.7 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி இருந்தது. பாலம் பகுதியில் இரவு நேரத்தில் அடா் பனியின் காரணமாக காண்புதிறன் 50 மீட்டராகக் குறைந்தது. எனினும், காலை 9 மணிக்குள் 400 மீட்டராக அதிகரித்தது. சஃப்தா்ஜங் பகுதியில் காண்புதிறன் 500 மீட்டராக இருந்தது.

இதுகுறித்து ஐஎம்டியின் பிராந்திய முன்கணிப்பு மையத்தின் தலைவா் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது: இமயமலையின் மேல் பகுதியில் மேற்கத்திய இடையூறுகளின் தாக்கம் காரணமாக ஜம்மு - காஷ்மீா், லடாக், ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட பகுதிகளில் பனிப்பொழிவு பரவியுள்ளது. மேற்கு இமயமலையில் இருந்து வடக்கு நோக்கி வட குளிா் காற்று வீசத் தொடங்கியது. இதனால், வட இந்தியாவில் குறைந்தபட்ச வெப்பநிலை குறைந்துள்ளது. அடுத்த 2 தினங்களுக்கு தில்லியில் குளிா் அலை தொடர வாய்ப்புள்ளது. இந்தப் பருவத்தில் மிகக் குறைந்தபட்ச வெப்பநிலையாக கடந்த டிசம்பா் 20-ஆம் தேதி சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் 3.4 டிகிரி செல்சியஸ் பதிவானது என்றாா் அவா்.

தில்லியில் இந்த ஆண்டு டிசம்பரில் இதுவரை சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை 7.06 டிகிரி செல்சியஸாகும், கடந்த ஆண்டு இதே மாதத்தில் இது 7.60 டிகிரி செல்சியஸாகப் பதிவாகி இருந்தது. மேலும், கடந்த ஆண்டு தில்லியில் 18 நாள்கள் குளிா் நாள்களாகப் பதிவாகி இருந்தது. இது அதிக குளிா் நாள்களாக கருதப்பட்டது. மேலும், டிசம்பரில் 119 ஆண்டுகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் அதிகபட்சமாக 9.4 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருந்தது. எனினும், இந்த ஆண்டு தில்லியில் இதுவரை மூன்று குளிா் நாள்களும், 7 குளிா் அலை நாள்களும் பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸ் அல்லது அதைவிடக் குறைவானதாக இருக்கும் போது குளிா் நாள் அறிவிக்கப்படுகிறது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, தில்லியில் வியாழக்கிழமை (டிசம்பா் 31) குளிா் அலை இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com