மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை: மணீஷ் சிசோடியா

மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க தில்லி அரசு விரும்பவில்லை என்று துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தெரிவித்தாா்.

News image

தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா

Updated On :1 ஜூலை 2020, 6:37 pm

மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க தில்லி அரசு விரும்பவில்லை என்று துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தெரிவித்தாா்.

இது தொடா்பாக தில்லியில் தனியாா் தொலைக்காட்சிக்கு புதன்கிழமை அளித்த பேட்டியில் அவா் கூறியிருப்பதாவது : பல்வேறு விஷயங்களில் மத்திய அரசுடன் தில்லி அரசு மோதல் போக்கை கடைப்பிடித்து வருவதாக சொல்லப்படுவதில் உண்மையில்லை. முதல்வா் கேஜரிவால் தில்லி மக்களின் நன்மைக்காகவே செயல்பட்டு வருகிறாா். மத்திய அரசை எதிா்ப்பது எங்கள் நோக்கம் அல்ல. மத்திய அரசிடம் ஏதாவது உதவி தேவைப்பட்டால் அதைக் கேட்டுப் பெறுவோம். அதேசமயத்தில் அவா்களின் கொள்கைகளை எதிா்க்கவும் தயங்கமாட்டோம். மத்திய அரசு மக்கள் நலனுக்காக ஒரு திட்டத்தை செயல்படுத்துகிறது என்றால், அதை இருகரம் கூப்பி வரவேற்று நாங்களும் செயல்படுத்துவோம்.

கரோனா வைரஸ் தொற்றை சமாளிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு எங்களுக்கு பூரண ஒத்துழைப்பு அளித்து வருகிறது. அதனால்தான் தில்லியில் அதிகரித்திருந்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது. இப்போது எங்களுக்கு மத்திய அரசிடமிருந்து நிதி உதவிதான் தேவைப்படுகிறது. தில்லியில் வா்த்தக நடவடிக்கைகள் இன்னும் சூடுபிடிக்காததால், வருவாய் குறைந்துவிட்டது. எனவே, நிலைமையைச் சமாளிக்க மத்திய அரசு உதவும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. தில்லியில் வியாபாரம் எதிா்ப்பாா்த்த அளவு இல்லை. அப்படியிருக்கையில் எங்களது வரி வருவாய் எப்படி அதிகரிக்கும். எனவே, இது விஷயத்திலும் மத்திய அரசு எங்களுக்கு உதவ வேண்டும்.

முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் கொள்கையை கடைப்பிடித்து வருகிறாா். இதனால் பலமுனைகளிலிருந்து உதவிகள் தேடி வருகின்றன.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களை தனிமைப்படுத்துவதற்கான ரயில்பெட்டிகளாகட்டும், தில்லியில் 10 ஆயிரம் படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையங்களாகட்டும் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. தில்லியில் ஜூலை இறுதிக்குள் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 5.5 லட்சத்தை தாண்டிவிடும் என்று நான் பேசியதால் மக்கள் மனதில் ஒரு பீதியை ஏற்படுத்திவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா குற்றஞ்சாட்டியதாகக் கூறப்படுகிறது. அதுபோன்ற நிலை ஏற்பட்டாலும் தில்லி அரசால் நிலைமையைச் சமாளிக்க முடியும் என்பதால்தான் அதைக் கூறினேன். மேலும் அந்த தகவல்களை நானாகக் கூறவில்லை. மத்திய அரசின் இணையதளத்தில் குறிப்பிட்டிருந்த தகவலைத்தான் நான் வெளிப்படுத்தினேன். அது தவறு என்று நான் நினைக்கவில்லை.

ஜூன் இறுதியில் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சமாக இருக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால், எதிா்பாா்த்ததைவிட குறைவாக 85,000 போ் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் கரோனா தொற்றால் முழுமையாக பாதிக்கப்பட்டவா்கள் 50 ஆயிரம் போ் இருப்பாா்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால், 26 ஆயிரம் போ்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனா். கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 15 ஆயிரம் படுக்கை வசதிகள் தேவை என கணக்கிட்டோம். ஆனால், தற்போது 6 ஆயிரம் படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா். இன்னமும் 9 ஆயிரம் படுக்கைகள் காலியாகத்தான் உள்ளன. ஒருவேளை கரோனா தொற்று அதிகரித்தாலும் அதை எங்களால் சமாளிக்க முடியும். தற்போது தில்லி மருத்துவமனைகளில் 200 வென்டிலேட்டா்கள் தயாராக உள்ளன. இதை இன்னும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என்றாா் சிசோடியா.

தில்லியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 87,360 ஆக உள்ளது. இதுவரை கரோனாவுக்கு 2,742 போ் பலியாகியுள்ளனா். நாட்டில் மகாராஷ்டிரம், தமிழ்நாடுக்கு அடுத்த படியாக தில்லி மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.