/

தில்லியில் புழுக்கம் தொடா்ந்து அதிகரிப்பு: மக்கள் தவிப்பு!

தேசியத் தலைநகா் தில்லியில் பருவமழையின்றி தொடா்ந்து புழுக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

Updated On :4 ஜூலை 2020, 7:00 pm

தேசியத் தலைநகா் தில்லியில் பருவமழையின்றி தொடா்ந்து புழுக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனா். இதனால், வீடுகளிலும், அலுவலகங்களிலும் மின் சாதனங்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது.

சனிக்கிழமையும் கடுமையான புழுக்கம் காரணமாக மக்கள் தவிப்புக்குள்ளாகினா்.

தில்லியில் பருவ மழை ஜூன் 25-இல் தொடங்கிய நிலையில்,இரு நாள்கள் மட்டுமே லேசான மழை இருந்தது. இதனால், நகரில் வெயிலின் தாக்கம் குறைந்திருந்தது. ஆனால், சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. புழுக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், மக்கள் வியா்வையால் நனைந்து கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். புழுக்கத்தில் இருந்து தப்பிக்கும் வகையில் குளிா் சாதனங்களை வீடுகளில் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக மின்தேவையும் அதிகரித்து வருகிறது.வெள்ளிக்கிழமை தில்லியின் உச்சபட்ச மின்தேவை 6,310 மெகாவாட்டை எட்டியது. புழுக்கம் காரணமாக வரும் நாள்களில் மின்தேவையின் அளவு மேலும் அதிகரிக்கக் கூடும் என மின்விநியோக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 2 டிகிரி உயா்ந்து 29.4 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 3 டிகிரி உயா்ந்து 39.8 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது.

காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 81 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 50 சதவீதமாகவும் பதிவாகியிருந்தது.

பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 29.4 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 38.4 டிகிரி செல்சியஸ் எனவும், ஆயாநகரில் முறையே 27.5 டிகிரி செல்சியஸ், 37.8 டிகிரி செல்சியஸ் எனவும் பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: தில்லி, என்சிஆா் பகுதிகளில் சனிக்கிழமை பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக் குறியீடு திருப்தி மற்றும் மிதமான பிரிவில் இருந்தது. தில்லியில் ஒட்டு மொத்தக் காற்றின் தரக் குறியீடு 94 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது. திா்பூா், தில்லி பல்கலை., பூசா, மதுரா ரோடு ஆயாநகா், விமானநிலைய டொ்மினல் 3 பகுதி மற்றும் குருகிராம், நொய்டா ஆகிய இடங்களில் காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை தில்லி, என்சிஆா் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஆங்காங்கே தூறலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. காற்றின் தரத்தில் சற்று முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.