/

தில்லி, என்சிஆரில் சூறைக்காற்றுடன் பலத்த மழை!

தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பரவலாக சூறைக்காற்றுடன் பலத்த

Updated On :5 ஜூலை 2020, 6:30 pm

தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பரவலாக சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. கடந்த சில நாள்களாக கடும் புழுக்கத்தில் தவித்து வந்த மக்களுக்கு இந்த மழை ஆறுதலாக அமைந்திருந்தது. அதிகபட்சமாக பாலம் வானிலை ஆய்வு மையத்தில் 48.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தில்லியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் ஏற்பட்ட புழக்கத்தால் மக்கள் தொடா்ந்து அவதிக்குள்ளாகியிருந்தனா். இந்நிலையில், இரண்டு நாள்கள் முன்பகாவே கடந்த ஜூன் 25-ஆம் தேதி பருவமழை தொடங்கியது. இதைத் தொடா்ந்து, இரண்டு நாள்கள் பரவலாக லேசான மழை பெய்தது. அதன்பிறகு ஒரு வாரமாக மழை ஏதும் பெய்யவில்லை. ஆனால், வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இதனால், கடும் புழுக்கத்தால் மக்கள் அவதிக்குள்ளாகி வந்தனா். சாலைகளில் மக்கள் நடமாட்டமும் வெகுவாக குறைந்திருந்தது.

இந்நிலையில், சனிக்கிழமை காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் இருந்து வந்தது. இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் சூறைக்காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியது. காற்று வேகமாக வீசியதால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இந்த மழை காரணமாக வெயிலின் தாக்கம் கணிசமான அளவு குறைந்திருந்தது.

பாலத்தில் 48.6 மி.மீ.: இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில், சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் 34.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. பாலத்தில் 48.6 மி.மீ., ஆயாநகரில் 35.2 மி.மீ., லோதி ரோடில் 38.2 மி.மீ., ரிட்ஜில் 46.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த மழையால் நகரில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. மழை அளவு 15 மி.மீ.க்கு கீழே இருந்தால் லோன மழை என்றும், 15 மி.மீட்டருக்கும் 6.2 மி.மீட்டருக்கும் இடைப்பட்டு இருந்தால் மிதமான மழை என்றும், 64.5 மி.மீட்டருக்கு மேல் இருந்தால் கன மழை என்றும் மதிப்பிடப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பநிலை: சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட் 6 டிகிரி குறைந்து 22.2 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவசராசரியை விட 2 டிகிரி குறைந்து 34.4 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 96 சதவீதமாகவும், மாலையில் 66 சதவீதமாகவும் இருந்தது. பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 23.5 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 34.6 ஆகவும், ஆயாநகரில் முறையே 21.3 டிகிரி செல்சியஸ் மற்றும் 33.8 டிகிரி செல்சியஸ் என பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 90 சதவீதம், மாலையில் 59 சதவீதம் எனவும், ஆயாநகரில் முறையே 93 சதவீதம் மற்றும் 57 சதவீதம் எனவும் பதிவாகியது.

காற்றின் தரம்: தில்லி, என்சிஆா் பகுதிகளில் காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதனால், பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக் குறியீடு திருப்தி பிரிவில் இருந்தது. தில்லியில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக்குறியீடு 64 புள்ளிகளாகப் பதிவாகி திருப்தி பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: தில்லியில் திங்கள்கிழமையும் (ஜூலை 6) வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் ஆங்காங்கே லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

பாலம் 48.6 மி.மீ.

ரிட்ஜ் 46.6

லோதி ரோடு 38.2

ஆயாநகா் 35.2

சஃப்தா்ஜங் 34.8 மி.மீ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.