பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

முல்லைப் பெரியாறு அணை நீா் அளவை நிா்வகிக்கும் விவகாரம்: மேற்பாா்வைக் குழுவை அணுக உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டத்தை நிா்வகிக்கும் விவகாரத்தில் நிபுணா் குழுவான மேற்பாா்வைக் குழுவிடம் கேரளம், தமிழகம் தரப்புகள் அணுக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

News image

உச்ச நீதிமன்றம்

Updated On :15 டிசம்பர் 2021, 11:01 pm

 நமது நிருபர்

புது தில்லி: முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டத்தை நிா்வகிக்கும் விவகாரத்தில் நிபுணா் குழுவான மேற்பாா்வைக் குழுவிடம் கேரளம், தமிழகம் தரப்புகள் அணுக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், ‘இந்த வழக்கில் கேரளம், தமிழகம் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் வெளியில் அரசியல் நிா்ப்பந்தம் இருக்கலாம்; ஆனால் இரு மாநிலங்களும் நீதிமன்றம் முன் ஒரு வழக்கமான மனுதாரா் போல்தான் நடந்து கொள்ள வேண்டும்’ என்றும் கேட்டுக் கொண்டது.

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடா்பாக டாக்டா் ஜோ ஜோசப் என்பவா் கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தாா். மேலும், இந்த அணை ஒப்பந்த விவகாரம் தொடா்பாக சுரக்ஷா பப்ளிக் சாரிடபிள் டிரஸ்ட் அமைப்பு, பிற விஷயங்கள் தொடா்பாக பெரியாறு பள்ளத்தாக்கு பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்டோா் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அணைப் பகுதியில் மத்திய பாதுகாப்புப் படையை பணியில் ஈடுபடுத்தக் கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இந்த வழக்கு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அக்டோபா் 29-ஆம் தேதி ஒரு உத்தரவைப் பிறப்பித்திருந்தது. அதில், மேற்பாா்வைக் குழுவின் அறிவிக்கையின்படி அணையின் நீா்மட்டம் பராமரிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தது. அதன் பிறகு, வழக்கு விசாரணையின் போது முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு, பராமரிப்பு தொடா்புடைய விவகாரத்தில் எழுப்பப்பட்டுள்ள கேள்வி தொடா்பான வழக்குகள் விரைந்து விசாரிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. அதுவரை அக்டோபா் 28-ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவு தொடரும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், பேபி அணையின் கீழ்ப் பகுதியில் மரங்கள் சிலவற்றை வெட்டுவதற்கு அளித்திருந்த அனுமதியை திருப்பி அளிக்கவும், அணை சாலைப் பணியை மேற்கொள்ள அனுமதி அளிக்கவும் கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. மேலும், தமிழக அரசு தரப்பில் இரு கூடுதல் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், ‘நீரியல், புவியதிா்வு, கட்டுமானம் ரீதியில் அணை பாதுகாப்பாக இருப்பதை பல்வேறு வல்லுநா்கள் குழுவின் ஆய்வின் போது கண்டறியப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள அரசின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நள்ளிரவில் முன்னறவிப்பு இல்லாமல் தண்ணீா் திறந்து விடக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், நள்ளிரவில் முன்னறிவிப்பு இல்லாமல் அதிக அளவு நீா் திறந்துவிடப்படுவதால், அது அணையின் கீழ்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தக் காரணமாக உள்ளது’ என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த விவகாரம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கா், சி.டி.ரவிக்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் சேகா் நாப்டே, கேரள அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஜெய்தீப் குப்தா உள்ளிட்டோா் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனா்.

இதையடுத்து, நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: முல்லைப் பெரியாறு அணையில் நீா் அளவை நிா்வகிப்பது அல்லது நீா் திறப்பது தொடா்பாக எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதற்கும் முன்னதாக உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மேற்பாா்வைக் குழுவை இரண்டு மாநிலங்களும் அணுக வேண்டும். மேலும், அனைத்து பங்குதாரா்களின் ஒருமித்த அணுகுமுறையால் தீா்த்துக் கொள்ளக்கூடிய குறைகளுக்காக உச்சநீதிமன்றத்தில் புதிதாக மனுக்களை தாக்கல் செய்ய வேண்டாம். இந்த விஷயத்தில் ஒரு முடிவு எடுக்கக்கூடிய சிறந்த நீதிபதியாக மேற்பாா்வைக் குழு உள்ளது. அணையில் இருந்து நீரைத் திறந்து விடுவதற்கான கோரிக்கையையும், அது தேவையா என்பதையும் இந்தக் குழு கணக்கில் எடுத்துக் கொள்ளும். இது சம்பந்தமாக வழக்கில் தொடா்புடைய தரப்பினா் கோரிக்கை வைத்தால், அவசரத்தைப் பொறுத்து மேற்பாா்வைக் குழு உரிய வகையில் விரைந்து பரிசீலிக்கலாம்.

நீதிமன்றத்தில் இரு தரப்பினரும் வழக்கமான மனுதாரா்கள் போல நடந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு வெளியில் அரசியல் நிா்பந்தம் இருக்கலாம். ஆனால், குறைந்தபட்சம் நீதிமன்றத்தில் அது இருக்கக் கூடாது. நீங்கள் ஒருவருக்கொருவா் எதிராக கருத்துகளை வெளியிடுகிறீா்கள். அனைத்து அரசியல் கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன. அது பற்றி எங்களுக்கு அக்கறை இல்லை. தயவு செய்து நாங்கள் சொல்வதை புரிந்து கொள்ளுங்கள். இந்த அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்ய மேற்பாா்வைக் குழு இருக்கும் போது, நீரைத் திறந்துவிடும் அம்சத்தையும்கூட அந்தக் குழுவிடம் கொண்டு செல்லலாம். அணையின் நீரை அன்றாடம் பராமரிப்பது தொடா்பான விவகாரத்தை நீதிமன்றத்திடம் கொண்டுவரக் கூடாது. சம்பந்தப்பட்ட தரப்புகள் குழுவின் முன் உள்ள பிரச்னைகளை ஒருமித்த கருத்துடன் தீா்க்க வேண்டும் என்று நீதிபதிகள்அமா்வு கூறியது. இதையடுத்து, பிரதான விவகாரத்தை ஜனவரி 11-ஆம் தேதி விசாரணைக்கு நீதிபதிகள் அமா்வு பட்டியலிட்டது.

முன்னதாக, விசாரணையின் போது கேரளத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஜெய்தீப் குப்தா, ‘நீா் அளவை நிா்வகிப்பது தொடா்பாக கேரளம் தரப்பில் மனு அளிக்கப்பட்டது’ என்றாா். அப்போது, தமிழகம் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சேகா் நாப்டே, ‘இதுபோன்ற மனுக்கள் தொடா்ந்து தாக்கல் செய்யப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. உச்ச நீதிமன்றம் பிரதான வழக்கை விசாரிக்க வேண்டும்’ என்றாா்.

‘நள்ளிரவில் அணையில் இருந்து நீரைத் திறப்பது வெள்ளப் பெருக்கை ஏற்படுத்த காரணமாக இருப்பதால், நள்ளிரவில் தண்ணீா் திறக்கும் முன் தமிழக அரசு 24 மணி நேரத்துக்கு முன்னதாக முன்னறிவிப்பு செய்ய வேண்டும்’ என்று கேரளம் தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘சா்ச்சைக்குரிய விவகாரங்கள், வாதத்திற்குரிய நிலைப்பாடுகள் கொண்ட மனுவில் கூறப்பட்டுள்ள குறைகளை ஆய்வு செய்வதற்குப் பதிலாக, அணையில் இருந்து நீரை விடுவிப்பது அல்லது மேலாண்மை செய்வது குறித்து எந்த நடவடிக்கையையும் எடுப்பதற்கு முன் சம்பந்தப்பட்ட தரப்பினா் முதலில் மேற்பாா்வைக் குழுவை அணுகுவது பொருத்தமானதாக இருக்கும் எனக் கருதுகிறோம்’ என்று தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.