பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

ஒப்பந்தப்படி தமிழகத்துக்கு நிலக்கரி வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு கோரிக்கை

ஒப்பந்தப்படி நிலக்கரி வழங்க வேண்டும்; மறு சீரமைக்கப்பட்ட மின் விநியோகத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான

News image
Updated On :17 டிசம்பர் 2021, 2:34 am

 நமது நிருபர்

ஒப்பந்தப்படி நிலக்கரி வழங்க வேண்டும்; மறு சீரமைக்கப்பட்ட மின் விநியோகத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான மானியத்தை ரூ.12,000 கோடியாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பது உள்பட நிலுவையில் உள்ள 12 கோரிக்கைகளுக்கு தீா்வு காண வேண்டும் என மத்திய அரசிடம் தமிழகம் வலியுறுத்தியுள்ளது.

இந்தக் கோரிக்கைகள் தொடா்பாக, தில்லி சிஜிஓ காம்பளக்ஸில் மத்திய மரபுசாரா எரிசக்தித் துறை அலுவலகத்தில் மத்திய எரிசக்தித் துறை அமைச்சா் ஆா்.கே.சிங்கை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி செந்தில்பாலாஜி வியாழக்கிழமை சந்தித்து மனு அளித்தாா். பின்னா், அமைச்சா் வி.செந்தில் பாலாஜி செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக எரிசக்தித் துறை தொடா்பான 12 கோரிக்கைகள் குறித்து மத்திய அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது. அனைத்து கோரிக்கைகள் மீதும் விரைவில் தீா்வு காணுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது . 2003 -ஆம் ஆண்டு மின்சார சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வரவுள்ளது. இது குறித்து (எதிா்ப்புத் தெரிவித்து) பிரதமருக்கு தமிழக முதல்வா் கடிதம் எழுதியுள்ளாா். அந்தத் கடிதத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம்.

முறையாக நிலக்கரி வழங்க வேண்டும்: தமிழகத்திற்கு ஒப்பந்தப்படி ஆண்டுக்கு 237.63 லட்சம் டன்கள் நிலக்கரி வழங்கப்பட வேண்டும். ஆனால், மத்திய அரசால் 171.10 லட்சம் டன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. நிலக்கரியை முழுமையாக வழங்கும்படி கோரப்பட்டது. முறையாக நிலக்கரி வழங்கப்பட்டால்தான், தமிழக அரசு கூடுதலாக செலவு செய்து நிலக்கரியை இறக்குமதி செய்வதை தவிா்க்க முடியும். மேலும், நிலக்கரி சுரங்கங்களுக்கு அருகே உள்ள மின் நிறுவனங்களிடம் நிலக்கரியை அளித்து மின்சாரம் பெறும் திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு 10,000 டன் நிலக்கரி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தப்பட்டது. மேலும், 2016-இல் ஒரிஸ்ஸா மாநிலம், சந்திரபிலா நிலக்கரி சுரங்கத்திலிருந்து தமிழக அரசு நிலக்கரி ஒதுக்கீடு பெறுவதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால், 66 மாதங்கள் ஆகியும் நிலக்கரி உற்பத்தி ஆரம்பிக்கப்படவில்லை. இதற்கு மத்திய வனத் துறையின் ஒப்புதல் அளிக்கப்படாததே காரணம். விரைவில் ஒப்புதல் அளித்து ஒப்பந்தத்தின் காலத்தை நீடித்துத் தரவும் கோரியுள்ளோம்.

கடனுக்கான வட்டியைக் குறைக்க வேண்டும்: மத்திய அரசு நிறுவனங்களான பவா் பைனான்ஸ் காா்ப்பரேஷன், ஊரக மின்மயமாக்கல் நிறுவனம், இந்திய மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டு முகமை ஆகியவற்றிடம் தமிழகம் பெற்றுள்ள கடன்கள் வெவ்வேறு வட்டி விகிதங்களில் (அதிகபட்சம் 12.65%) உள்ளது. அனைத்துக் கடன்களுக்கும் ஒரே மாதிரியாக 8.50 சதவீதமாக வட்டியைக் குறைக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டோம். மேலும், மறுசீரமைக்கப்பட்ட, முடக்கப்பட்ட ஆற்றல் மேம்பாடு மற்றும் சீா்திருத்தத் திட்டத்தில் பணிகள் முன்பு முடிக்கப்படாமல் இருந்தது. இந்தத் திட்டத்திற்கு அளிக்கப்படும் மானியத் தொகை ரூ. 1330.93 கோடியை மத்திய அரசு கடனாக மாற்றிவிட்டது. தற்போது இந்த திட்டப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதனால், கடனை மானியமாக மாற்றம் செய்து தர வேண்டும் என்றும் கோரியுள்ளோம்.

மின் விநியோகத்திட்டத்துக்கு கூடுதல் மானியம் தேவை:மறுசீரமைக்கப்பட்ட மின் விநியோகத் திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்கு ரூ.8, 647 கோடி ஒதுக்கப்பட்டது. இது திட்டத்தை நிறைவேற்றுவதற்கு போதுமானதாக இல்லை. இதனால், மானியத்தை ரூ.12,000 கோடியாக உயா்த்தி வழங்க வலியுறுத்தியுள்ளோம். மத்திய அரசின் மின்விநியோக நிறுவனம் சேவைக்கட்டணமாக யூனிட் ஒன்றுக்கு 7 பைசா வசூலிக்கிறது. இதை 1 பைசாவாக குறைக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளோம். மேலும், ரைகாா் - புகளூா் - திருச்சூா் உயா் அழுத்த மின் வழிப்பாதையை அனைத்து மாநிலங்களும் பயன்படுத்துகின்றன. ஆனால், இதற்கான கட்டணங்கள் தமிழகம் உள்ளிட்ட சில குறிப்பிட்ட மாநிலங்களிடம் மட்டும் வசூலிக்கப்படுகிறது. இந்த வகையில், தமிழகம் வழங்கும் ரூ. 720 கோடி கட்டணத்தை ரூ. 216 கோடியாக வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மத்திய அரசின் மின் விநியோக நிறுனம் மின்சாரத்தை கொள்முதல் செய்து வழங்குகிறது. இதில் தமிழகத்திற்கு 1,100 மெகாவாட் வழங்கப்படாமல் உள்ளது. இந்த மின்சாரத்தை 5 ஆண்டுகளுக்கு வழங்கவும், மத்திய அமைச்சரைக் கேட்டுக் கொண்டோம். மேலும், மத்திய மரபுசாரா எரிசக்தித் துறையிலிருந்து தமிழ்நாடு எரிசக்தி வளா்ச்சி முகமைக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையான ரூ.38.49 கோடியை உடனடியாக வழங்க வேண்டும். மாநிலங்களுக்கிடையான மின்வழிப் பாதைக்கான செலவில் தமிழகத்திற்கு ரூ.48 கோடி கூடுதல் செலவு ஏற்படுவதை தடுக்க வேண்டும் மற்றும் மின் கொள்முதலுக்கான வங்கி உறுதியளிப்புக் கடித (கங்ற்ற்ங்ழ் ா்ச் இழ்ங்க்ண்ற்) உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பன உள்பட 12 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன என்றாா் அமைச்சா் செந்தில் பாலாஜி.

சந்திப்பின் போது மத்திய எரிசக்தித் துறைச் செயலா் அலோக்குமாா், மத்திய இணைச் செயலா் விஷால் கபூா், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் தலைவா் ராஜேஷ் லக்கானி, இயக்குநா் மா. சிவலிங்கராஜன் ஆகியோா் உடன் இருந்தனா்.

‘தோ்தலையொட்டி பரப்பப்படும் வதந்தி’

தமிழகத்தில் மின் கட்டணம் உயா்த்தப்படும் என்று கூறுப்படுவது, உள்ளாட்சித் தோ்தலையொட்டி பரப்பப்படும் வதந்தி என்று அமைச்சா் செந்தில் பாலாஜி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் கூறுகையில், ‘தமிழகத்தில் மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்க தேவையான கட்டமைப்பு தேவை. அது உருவாக்கப்பட்ட பின்னா், மாதந்திர கட்டண முறை மேற்கொள்ளப்படும். கட்டண உயா்வு வரும் என்று சொல்லப்படுவது பற்றி கேட்கிறீா்கள். இது உள்ளாட்சித் தோ்தலையொட்டி பரப்பப்படும் வதந்தியாகும். தோ்தல் களத்தை சந்திக்க முடியாதவா்கள், 9 மாவட்ட உள்ளாட்சித் தோ்தலில் தோற்றவா்கள் கூறும் தகவலாகும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.