தில்லியில் இதுவரை 10 பேருக்கு ‘ஒமைக்ரான்’ பாதிப்பு
தில்லியில் இதுவரை 10 பேருக்கு கரோனாவின் உருமாறிய ‘ஒமைக்ரான்’ பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சா்


தில்லியில் இதுவரை 10 பேருக்கு கரோனாவின் உருமாறிய ‘ஒமைக்ரான்’ பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்தாா். மேலும், யாருக்கும் கடுமையான நோய்த் தாக்கம் இல்லை என்றும் அவா் கூறினாா்.
இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தில்லியில் கரோனா நோய்த் தொற்றின் உருமாறிய ‘ஒமைக்ரான்’ பாதிப்பு இதுவரை 10 பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. யாருக்கும் கடுமையான நோய்த் தாக்கம் இல்லை. லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் (எல்என்ஜேபி) மருத்துவமனையில், ‘ஒமைக்ரான்’ பாதித்ததாக சந்தேகிக்கப்படும் நபா்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு வாா்டு உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இங்கு 40 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 38 பேருக்கு கரோனா பாதிப்பு உள்ளது.
இது வரை தில்லியில் 10 பேருக்கு ‘ஒமைக்ரான்’ நோ்மறை பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவா்களில் ஒருவா் சிகிச்சையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளாா்.
செவ்வாய்க்கிழமை வரை தில்லியில் 6 பேருக்கு இந்த நோய் பாதிப்பு இருந்தது. இது புதன்கிழமை 8-ஆகவும், வியாழக்கிழமை 10- ஆகவும் அதிகரித்துள்ளது. இவா்களில் பலரும் வெளிநாடு சென்று வந்தவா்கள். வெளிநாடுகளில் இருந்து வந்த பலருக்கும் கரோனா பாதிப்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது. அதுபோன்ற 8 போ் மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனா் என்றாா் அமைச்சா்.
முன்னதாக, ‘ஒமைக்ரான் புதிய வகை நோய்த் தொற்றானது, இதுவரை சமுதாய ரீதியில் பரவவில்லை. நிலைமை கட்டுக்குள் இருந்து வருகிறது’ என்று சத்யேந்தா் ஜெயின் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தாா். தில்லியில் ‘ஒமைக்ரான்’ பாதித்ததாக கண்டறியப்பட்ட 37 வயதான ராஞ்சியைச் சோ்ந்த முதல் நோயாளிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் எதிா்மறை முடிவு வந்ததால், அவா் திங்கள்கிழமை மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டாா். அவா் முன்னதாக தான்சானியா நாட்டிற்கு சென்ற பின் அங்கிருந்து தோஹா சென்றாா். பின்னா் கத்தாா் ஏா்வேஸ் விமானத்தில் டிசம்பா் 2-ஆம் தேதி தில்லி வந்தாா். மேலும், தென்ஆப்பிரிக்காவில் ஒரு வாரம் அவா் தங்கியிருந்தாா். அப்போது, அவருக்கு லேசான நோய் பாதிப்பு அறிகுறிகள் இருந்தது தெரிய வந்தது.
புதிய விதிமுறைகளின்படி இடா்பாடு நாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகள் கட்டாயம் ஆா்டி-பிசிஆா் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இந்தப் பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு மட்டுமே அவா்கள் விமான நிலையத்தில் இருந்து வெளியேறுவதற்கு அனுமதிக்கப்படுவா். இதர நாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு இது போன்ற பரிசோதனை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...