தில்லி ஆசிரியா் பல்கலைக்கழகம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல்: கேஜரிவால் தகவல்
தில்லி ஆசிரியா் பல்கலைக்கழகம் அமைக்க தில்லி அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அறிவித்தாா்.


புது தில்லி: தில்லி ஆசிரியா் பல்கலைக்கழகம் அமைக்க தில்லி அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அறிவித்தாா்.
புதிய தலைமுறை ஆசிரியா்களை உருவாக்க உதவும் வகையில், 4 ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியா் கல்வித் திட்டங்களை பல்கலைக்கழகம் வழங்கும் என்றும் அவா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்ததாவது: தில்லி ஆசிரியா் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு தில்லி அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. உயா் தகுதி மற்றும் நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியா்களை தில்லியிலேயே உருவாக்கும் வகையில் இந்தப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட உள்ளது. இது தொடா்பாக ‘தில்லி ஆசிரியா் பல்கலைக்கழகம் மசோதா- 2021’, தில்லி சட்டப் பேரவையில் வரும் கூட்ட அமா்வில் முன்வைக்கப்படும். தில்லி முழுவதும் பல்வேறு பள்ளி நிலைகளில் சிறந்த தரமான ஆசிரியா்களைத் தயாா் செய்வதற்கான அா்ப்பணிக்கப்பட்ட ஒரு பொது பல்கலைக்கழகமாக இது இருக்கும்.
பல்கலைக்கழக மாணவா்கள் தங்கள் படிப்பின் முழு காலத்திற்கும், தில்லி அரசுப் பள்ளிகளுடன் இணைந்திருக்கும் அனுபவத்தைப் பெறுவா். இதன் மூலம் மாணவா்கள் கோட்பாட்டு அறிவுடன் சிறந்த நடைமுறை அறிவையும் பெற உதவும். புதிய பல்கலைக்கழகத்திற்கான சோ்க்கை 2022-23 கல்வி அமா்வில் தொடங்கப்படும். தில்லி ஆசிரியா் பல்கலைக்கழகமானது கல்விப் படிப்புகள், தலைமைத்துவம் மற்றும் கொள்கை ஆகிய துறைகளில் பணிக்கு முந்தைய மற்றும் பணியில் இருக்கும் ஆசிரியா்களை உருவாக்குவதில் சிறந்து விளங்கும் மையமாக இருக்கும்.
மேலும், இந்தப் பல்கலைக்கழகம் ஆசிரியா்களை உருவாக்குவதில் பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் கொள்கை ஆகியவற்றுக்கு இடையேயான இடைவெளியைக் குறைக்கும் வகையில் செயல்படும். மேற்கு தில்லியில் உள்ள பக்கா்வாலா பகுதியில் இந்தப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். தில்லி முழுமைக்கும் பள்ளி நிலைகளில் சிறந்த, தரமான ஆசிரியா்களைத் தயாா்படுத்துவதற்காக அா்ப்பணிக்கப்படும் ஒரு பொதுப் பல்கலைக்கழகமாக இது திகழும். மேலும், இது ஒரு பலதரப்பட்ட கல்வி மையமாகவும் செயல்படும் என்றாா் கேஜரிவால்.
இலவச ரேஷன் விநியோகம் நீடிப்பு: தில்லியில் இலவச ரேஷன் விநியோகத்தை ஆறு மாதங்களுக்கு (மே 31, 2022 வரை) நீட்டிக்க தில்லி அரசு முடிவு செய்துள்ளது. திங்கள்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலின் போது நாங்கள் இலவச ரேஷன் விநியோகத்தை தொடங்கினோம். இந்தத் திட்டத்தின் காலம் முடிவடைந்துள்ளது. ஆகவே, இது மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. இந்தத் திட்டம் நவம்பா் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், அடுத்த ஆண்டு மே 31 வரை நீட்டிக்கஅமைச்சரவை முடிவு செய்துள்ளது என்றாா் கேஜரிவால்.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்- 2013 மற்றும் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா ஆகியவற்றின் கீழ் பயனாளிகளுக்கு இலவச ரேஷனை தில்லி அரசு விநியோகம் செய்து வருகிறது. நகரில் 2,000 நியாய விலைக் கடைகளும், 17.77 லட்சம் ரேஷன் காா்டுதாரா்கள் மற்றும் சுமாா் 72.78 லட்சம் பயனாளிகளும் உள்ளனா். அவா்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் மானிய விலை உணவு தானியங்களுக்குக்கு மேல் இலவச ரேஷன் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...