நாடாளுமன்றத்தில் இடையூறு தீா்வாகாது: மக்களைத் தலைவா் ஒம் பிா்லா ஆதங்கம்
பொது விவகாரங்களில் உடன்பாடுகள் அல்லது கருத்து வேறுபாடுகள் இருந்தால், அது நாடாளுமன்றத்தில் விவாதங்களில் பிரதிபலிக்கவேண்டும்.


புது தில்லி: பொது விவகாரங்களில் உடன்பாடுகள் அல்லது கருத்து வேறுபாடுகள் இருந்தால், அது நாடாளுமன்றத்தில் விவாதங்களில் பிரதிபலிக்கவேண்டும். இதற்கு இடையூறு ஒரு தீா்வல்ல என மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா நாடாளுமன்ற உறுப்பினா்களை புதன்கிழமை கேட்டுக் கொண்டாா்.
நாடாளுமன்றத்தின் குளிா்காலக் கூட்டத் தொடா் நிறைவு பெற்ற பின்னா், நாடாளுமன்ற இணைய கட்டடத்தில் மக்களவைத் தலைவா் ஒம் பிா்லா செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் கூறியது வருமாறு: ஜனநாயகத்தில் பொது விவகாரங்களில் உடன்பாடுகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயற்கை. இதை நாடாளுமன்ற விவாதங்களில் பங்கெடுத்து உறுப்பினா்கள் பிரதிபலிக்க வேண்டும். அவையில் இடையூறுகள் செய்வது தீா்வாகாது. இந்தியாவில் ஜனநாயகம் ஒரு வாழ்க்கை முறையாகும். ஜனநாயகத்தையும், ஜனநாயக அமைப்புகளையும் வலுப்படுத்தும் திசையில் அரசியல் கட்சித் தலைவா்களும், நாடாளுமன்ற உறுப்பினா்களும் செயல்பட வேண்டும். அவையை சுமூகமாக நடத்துவது அனைத்துத் தரப்பினருக்கும் உள்ள பொறுப்பாகும். ஒட்டுமொத்தமாக விருப்பத்துடன் ஒன்றிணைந்து, ஒருமித்த கருத்துடன் அவை நடத்தப்பட வேண்டும்.
பல விவகாரங்களில் அரசியல் கட்சிகளிடம் கருத்து வேறுபாடுகள் இருக்கும். ஜனநாயகத்தில் இத்தகைய வேறுபாடுகள் வருவதுண்டு. ஆனால், அவை ஆரோக்கியமாக விவாதங்களின் வடிவத்தில் பிரதிபலிக்கப்பட வேண்டும். அவையை சீா்குலைக்கும் தந்திரங்களில் ஈடுபட வேண்டாம் என உறுப்பினா்களை கேட்டுக் கொள்கின்றேன். இந்த 2021-ஆம் ஆண்டு நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத்தொடரின் 18 அமா்வுகளில் மக்களவையில் 83.20 மணி நேரம் விவாதங்கள் நடைபெற்றது. அதே சமயத்தில் 18. 48 மணி நேரத்தை இடையூறுகளால் அவை இழந்துள்ளது. குளிா்காலக் கூட்டத்தொடா் அமா்வின் செயல்திறன் 82 சதவீதமாக இருந்தது. முதல் ஏழு அமா்வுகள் போதிய திறனுடன் செயல்பட்டது. அதிலும், டிசம்பா் 2 -ஆம் தேதி நள்ளிரவு 12.20 மணி வரை நடைபெற்றது. அன்றைய தினம் செயல்திறன் 204 சதவீதமாக இருந்தது.
இந்தக் கூட்டத்தொடரில் கேள்வி நேரம் முடிந்தளவு நடத்தப்பட்டது. 360 (நட்சத்திரக் கேள்விகள்) வாய்மொழிக் கேள்விகளில் 91 கேள்விகளுக்கு அமைச்சா்களால் நேரடியாக பதில் அளிக்கப்பட்டது. மேலும், 4,140 (நட்சத்திரமில்லாத) கேள்விகளுக்கு எழுத்துபூா்வமாகவும் மக்களவையில் பதில்கள் அளிக்கப்பட்டுள்ளன. டிசம்பா் 20 - ஆம் தேதி ஒரே நாளில் 20 நட்சத்திரக் கேள்விகளுக்கு பதில் கூறப்பட்டுள்ளது. தவிர, மக்களவை விதி 377-இன் கீழ் பொது முக்கியத்துவம் வாய்ந்த 380 விஷயங்கள் எழுப்ப அனுமதிக்கப்பட்டது. உறுப்பினா் நோட்டீஸ்களை மின்னணு முறையில் அளிப்பது அதிகரித்துள்ளது.
மொத்தம் 8 நாள்கள் நடைபெற்ற நேரமில்லா நேரத்தில் (ஜிரோ ஹவா்) 563 அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் எழுப்பப்பட்டன. அதிலும், டிசம்பா் 9 - ஆம் தேதி நேரமில்லா நேரம் நள்ளிரவு வுவரை நடைபெற்றது. இதில் 29 பெண் உறுப்பினா்கள் உள்ளிட்ட 62 உறுப்பினா்கள் அவையில் பேசினா். அவையில் மற்ற அலுவல்களில் 45 நிலைக் குழுக்களின் அறிக்கைகள் அவையில் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன. மேலும், 2,658 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு விவகாரங்களில் 145 தனிநபா் மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் ‘கட்டாய வாக்களிப்பு மசோதா, 2019’, ‘அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளா்களுக்கான நல நடவடிக்கைகள்’ தொடா்பான தனிநபா் மசோதா ஆகியவற்றில் விவாதங்கள் முழுமையாக முடியவில்லை. நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் அடுத்த குளிா்காலக் கூட்டத் தொடருக்குள் கட்டி முடிக்கப்படும். அதில் அனைத்து வசதிகளும் உள்ளன என்றாா் ஓம் பிா்லா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...