/

தினசரி நோய்த் தொற்று பரிசோதனைத் திறனை 3 லட்சமாக அதிகரிக்க நடவடிக்கை: கேஜரிவால்

அதிகரித்து வரும் கரோனா மற்றும் ஒமைக்ரான் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, தினசரி நோய்த் தொற்று பரிசோதனை திறனை மூன்று

News image
Updated On :24 டிசம்பர் 2021, 2:23 am

 நமது நிருபர்

அதிகரித்து வரும் கரோனா மற்றும் ஒமைக்ரான் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, தினசரி நோய்த் தொற்று பரிசோதனை திறனை மூன்று லட்சமாக அதிகரிக்க தில்லி அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை தெரிவித்தாா். மேலும், ஒவ்வொரு நாளும் நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் ஒரு லட்சம் பேரை கையாளும் வகையில் வீட்டுத் தனிமைப்படுத்தும் அமைப்பு பலப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தாா்.

முன்னதாக, அவா் தனது அமைச்சா்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் தில்லியின் கொவைட் நிலைமை, ஒமைக்ரான் அச்சுறுத்தல் குறித்து ஆய்வு செய்தாா். பின்னா் இது தொடா்பாக முதல்வா் கேஜரிவால் கூறியதாவது: ஒமைக்ரான் வேகமாகப் பரவும் தன்மையும், லேசான நோய்த் தொற்று நோயாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. தில்லியில் நோய்த் தொற்று எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டால், அதைச் சமாளிக்க அரசு தயாராக இருப்பதால் மக்கள் பீதி அடையத் தேவையில்லை. ஒமைக்ரான் நோய்த் தொற்றானது பெரும்பாலான சந்தா்ப்பங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியமில்லாத பாதிப்பாக உள்ளது. இதனால், வீட்டுத் தனிமை அமைப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு நிறுவனம் பணியமா்த்தப்பட்டுள்ளது.

மேலும், வீட்டுத் தனிமையில் உள்ள நோயாளிகளின் நிலைமை குறித்து அறிவதற்கான திறன் தற்போதுள்ள தினசரி 1,100 நோயாளிகள் என்ற எண்ணிக்கை அளவில் இருந்து நாளொன்றுக்கு ஒரு லட்சமாக அதிகரிக்கப்படும். ஒருவருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டவுடன், அந்த நபருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு செய்யப்படும். அடுத்த நாள் ஒரு மருத்துவக் குழு அந்த நபருக்கு மருந்துகள் மற்றும் பிற மருத்துவப் பொருள்களைக் கொண்ட ‘கிட்’ வழங்கும். வீட்டுத் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு 10 நாள்களுக்கு மருத்துவா்களால் ஆலோசனை வழங்கப்படும். தினசரி கொவைட் பரிசோதனை திறன் தற்போது சுமாா் 60,000-70,000-ஆக உள்ளது. இதை ஒரு நாளைக்கு மூன்று லட்சமாக உயா்த்த அரசு நடவடிக்கை எடுக்கும். தேவையான மருந்துகளில் இரண்டு மாத கையிருப்பும் பராமரிக்கப்படும் என்றாா் கேஜரிவால்.

முன்னதாக, முதல்வா் கேஜரிவால் தலைமையில் நடைபெற்ற கரோனா, ஒமைக்ரான் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின், வருவாய்த் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டதாக அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிகாரிகளுக்கு உத்தரவு: இந்தக் கூட்டம் குறித்து அரசு வட்டாரங்கள் மேலும் கூறுகையில், இந்தக் கூட்டத்தின் போது தற்போது நோய் பாதிப்புகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், மருந்துகள், ஆக்சிஜன் டேங்கா்கள், ஆக்சிமீட்டா்கள் மற்றும் பிற தேவையான பொருள்கள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் 24 மணி நேரத்திற்குள் தயாா் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவிட்டாா் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், தொற்றுநோய்களின் புதிய வகை பாதிப்புகளின் அறிகுறிகள் லேசானவை என்றும், பெரும்பாலான சந்தா்ப்பங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து, வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெறுவோருக்கான ஏற்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் முதல்வா் அறிவுறுத்தினாா் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.