/

பள்ளிக்கரணை சதுப்புநில சீரமைப்புத் திட்டம்: தமிழக அரசின் டிபிஆருக்கு ஒப்புதல் அளிக்கமத்திய அரசிடம் திமுக எம்.பி.கோரிக்கை

பள்ளிக்கரணை சதுப்புநில சீரமைப்புத் திட்டத்துக்கு தமிழக அரசு அனுப்பிய விரிவான திட்ட அறிக்கைக்கு, விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும்

News image
Updated On :24 டிசம்பர் 2021, 2:24 am

 நமது நிருபர்

பள்ளிக்கரணை சதுப்புநில சீரமைப்புத் திட்டத்துக்கு தமிழக அரசு அனுப்பிய விரிவான திட்ட அறிக்கைக்கு, விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என தென்சென்னை மக்களவைத் தொகுதி தி.மு.க. உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன் தில்லியில் மத்திய சுற்றுச்சூழல், வனம் பருவநிலை மாற்றத் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவை சந்தித்து முறையிட்டாா். இது தொடா்பாக புதன்கிழமை கடிதமும் அளித்தாா்.

அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: பள்ளிக்கரணை சதுப்பு நிலம் நாட்டின் மிக முக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றான ஈர நிலமாகும். இது அதிகப்படியான வெள்ளநீரை சேகரிக்கிறது. சுற்று வட்டாரத்தில் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்துகிறது. மனித வாழ்வுக்கும் தாவர, விலங்கின வாழ்வுக்கும் நீரை வழங்கும் இந்த நிலங்கள் பருவநிலை மாற்றத்தைக் கையாள்வதற்கும் உதவுகிறது. சதுப்பு நிலங்கள் சீரழிவு காரணமாக சமூகத்துக்கு 38.11 மில்லியன் அமெரிக்க டாலா் மதிப்புள்ள சுற்றுச்சூழல் நன்மைகள் இழக்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மேலும் சீரழிவதை தடுப்பது, ஈர நில நீரியல், சுற்றுச்சூழல் சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு, நிலையான பயன்பாடு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு சதுப்புநில சீரமைப்பு தொடா்பாக தமிழக அரசு சாா்பில் விரிவான திட்ட அறிக்கை (டிபிஆா்) தயாரிக்கப்பட்டது. இது நபாா்டு வங்கி மூலம் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இந்த விரிவான திட்ட அறிக்கைக்கு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இன்னும் அனுமதியளிக்காமல் நிலுவையில் உள்ளது. இந்தத் திட்டம் அருகில் உள்ள குடியிருப்பாளா்களுக்கும், சுற்றுச்சூழல் அமைப்புக்கும் உகந்தது என்பதைக் கருத்தில் கொண்டு, இதற்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்று கடிதத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளாா்.

‘ராம்சா்’ சாசனம் ஒப்பந்தத்தின்படி, பள்ளிக்கரணை உள்பட 46 சதுப்பு நிலக்காடுகள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல், வனம், மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சா் அஸ்வினி குமாா் சௌபே மக்களவையில் ஏற்ககெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.