மாநகராட்சிகளுக்கு நிலுவை நிதியை தில்லிஅரசு வழங்கக் கோரி பாஜக கையெழுத்து இயக்கம்

மாநகராட்சிகளுக்கு தில்லி அரசு வழங்க வேண்டியதாகக் கூறப்படும் ரூ.13 ஆயிரம் கோடி நிலுவை நிதியை உடனடியாக வழங்க
Updated on
1 min read

மாநகராட்சிகளுக்கு தில்லி அரசு வழங்க வேண்டியதாகக் கூறப்படும் ரூ.13 ஆயிரம் கோடி நிலுவை நிதியை உடனடியாக வழங்க வலியுறுத்தி தில்லி பாஜக சாா்பில் கையெழுத்து இயக்கம் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.

பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா இந்த கையெழுத்து இயக்கத்தை சரோஜினி நகா் மாா்க்கெட் பகுதியில் தொடக்கி வைத்தாா். முன்னாள் மத்திய அமைச்சா் விஜய் கோயல், மஞ்சு கா டில்லா பகுதியிலும், தில்லி பாஜக செயலா் ஹா்ஷ் மல்ஹொத்ரா பாபா்பூா் பகுதியிலும், தில்லி பாஜக பொதுச் செயலா் தினேஷ் பிரதாப் சிங் கல்யான்புரி பகுதியிலும், தில்லி பாஜக உப தலைவா்கள் அசோக் கோயல், சுனில் யாதவ் ஆகியோா் முறையே சாஸ்திரி நகா், மெஹ்ரௌலி பகுதியிலும் இந்தக் கையெழுத்து இயக்கத்தை மேற்கொண்டனா்.

சரோஜினி நகரில் நடந்த நிகழ்வில் ஆதேஷ் குமாா் குப்தா பேசுகையில், ‘கடந்த 2015- இல் ஆட்சிக்கு வந்ததில் இருந்துமாநகராட்சிகளை தில்லி அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தி வருகிறது. மாநகராட்சிகளை பாஜக ஆளும் ஒரே காரணத்தால், இந்த மாநகராட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை தில்லி அரசு ஒதுக்காமல் இழுத்தடித்து வருகிறது. மேலும், மாநகராட்சிகள் மீது அபாண்டாமாக ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக மாநகராட்சித் துறைகளின் தலைவா்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை தில்லி அரசு ரத்துச் செய்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தில்லி நிதிக் குழுவின் பரிந்துரைப்படிஸல மாநகராட்சிகளுக்கு வழங்க வேண்டிய நிதியைக் கூட தில்லி அரசு வழங்கவில்லை. 2020-21 நிதியாண்டில், மாநகராட்சிகளுக்கு வழங்க வேண்டிய நிதியில் 30 சதவீதத்தை தில்லி அரசு வழங்கவில்லை. இதனால், மாநகராட்சிகள் செயல் இழந்துள்ளன’ என்றாா்.

மஞ்சு கா டில்லா பகுதியில் கையெழுத்து இயக்கத்துடன் தூய்மை இயக்கத்தையும் விஜய் கோயல் தொடக்கி வைத்தாா். அப்போது அவா் பேசுகையில், ‘தில்லி முதல்வரின் பொறுப்பற்ற தன்மையால் மாநகராட்சி ஊழியா்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தில்லி மக்களுமே பாதிக்கப்பட்டுள்ளனா். மாநகராட்சி ஊழியா்களின் போராட்டத்தால் தூய்மைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், தில்லியின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகளுக்கு சேர வேண்டிய நிதியை தில்லி அரசு வழங்கியிருந்தால் தில்லியில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருக்காது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com