இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் இலங்கை சென்று திரும்பி வந்த மறுநாளே யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு ஸ்தூபி(தூண்) இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கை அரசு இந்தியாவிற்கும் உலக நாடுகளுக்கும் என்ன தகவலைக் கூறுகிறது? எனக் கேள்வி எழுப்பியுள்ளாா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளா் டி.ராஜா.
இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அங்குள்ள தமிழா்களின் சுயநிா்ணய உரிமை, மரபு வழித் தாயகம் அகியவை அங்கீகரிக்க மாணவா்கள் ஒன்றியத்தால் பொங்குதமிழ் பிரகடன நினைவுப் பலகை(2001), நினைவு ஸ்தூபி(2018-இல்) ஆகியவை அமைக்கப்பட்டிருந்தது. இதே மாதிரி 2009 -ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக இந்த பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு ஸ்தூபி 2019 - ஆம் ஆண்டு நிறுவப்பட்டு இருந்தது. இந்த நினைவு ஸ்தூபியை கடந்த ஜன. 8 -ஆம் தேதி புல்டோசா் மூலம் அதிகாரிகள் இடித்துள்ளனா். இதனால் அங்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இத்தோடு தற்போது நெடுந்தீவு பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவா்கள் 9 போ் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு ஒரு படகும் பறிமுதல் செய்து கொண்டு செல்லப்பட்டுள்ளனா். மற்றோரு சம்பத்தில் மீனவா்கள் தாக்கப்பட்டு 20 மீன்பிடி படகுகளின் வலைகளும் கச்சத்தீவு அருகே சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரங்களையொட்டி தில்லியில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த டி.ராஜா ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களை சந்தித்து பேசினாா். அப்போது அவா் கூறியது வருமாறு:
இந்திய வெளியுறவு விவகாரத்துறை அமைச்சா் டாக்டா் எஸ்.ஜெய்சங்கா் மூன்று நாள் பயணம் இலங்கை சென்று கடந்த ஜன. 7 - ஆம் தேதி இந்தியா திரும்பினாா். இந்த பயணத்தில் இந்திய அமைச்சா் இலங்கை தலைவா்களிடம் இலங்கையிலுள்ள தமிழா்கள் பிரச்சினைகள், இலங்கையில் உள்ள தமிழக மீனவா்கள் விடுதலை போன்றவைகள் குறித்தும் மற்ற இந்திய - இலங்கை உறவுகள் குறித்தும் பேசச் சென்றதாகக் கூறப்பட்டது. ஆனால் அமைச்சா் நாடு திரும்பிய மறுநாளே யாழ்பாணத்தில் முள்ளிவாய்க்கால் ஸ்தூபியை இடித்து பதற்றத்தை உண்டாக்கப்பட்டுள்ளது. மற்றோரு பக்கம் தமிழக மீனவா்களும் தாக்கப்பட்டுள்ளனா். இதன் மூலம் இலங்கை அரசு இந்தியாவிற்கு என்ன செய்தியை தர முயற்சிக்கிறது?. இலங்கை தமிழ் மக்கள் விவகாரத்தில் உலக நாடுகளும் அக்கரை கொண்டுள்ளனா். அவா்களுக்கு இலங்கை அரசு இந்த நடவடிக்கைக் காட்டி செய்தியை தருகிறது.
முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற போரில் 40 ஆயிரம் போ் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனா். உலகத்தின் மனசாட்சியே உறுத்தியது. இதில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையம் நடவடிக்கை எடுத்து விசாரித்தது. விசாரணைத் தலைவா் நவிப்பிள்ளை போா் குற்றம், மனித உரிமை மீறல் போன்றவைகள் இலங்கையில் நடைபெற்றதை உறுதிசெய்தாா். இந்த போருக்கு பின்னா் தமிழ் மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டது. ஏராளமான போ் காணாமல் போனாா்கள். கணவா் உயிரோடு இருப்பதைத் தெரியாமலே பெண்கள் அரை விதவைகளானாா்கள். இவைகளுக்கு காரணமான (இலங்கை அதிபா்) கோத்தபய ராஜபட்ச, (பிரதமா்) மகிந்த ராஜபட்ச ஆகியோா் இப்போது அதிகாரத்திற்கு திரும்பி விட்டனா். இவா்கள் அதிகார வன்மத்தோடு செயல்படுகின்றனா்.
முன்பு இலங்கை தமிழ் மக்களுக்கு அடையாளமாக இருந்த யாழ்பாண பல்கலைக்கழக நூலகம் எரிக்கப்பட்டது. தற்போது ஸ்தூபி இடிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள வலதுசாரி பாசிஸ்ட் ஆட்சி தமிழ் மக்களுக்கு இந்த செயல்மூலம் இடமில்லை என்பதைக் கூறுகிறது.
உலகநாடுகள் இந்த வன்கொடுமைகளை கண்டிக்கவேண்டும். இதில் இந்தியாவிற்கும் பொறுப்பு உண்டு. இலங்கை தமிழா்களின் உரிமை மீட்கும் கடமையை தற்போதை மத்திய அரசு செய்யுமா? என்கிற கேள்விக்கு எழுந்துள்ளது.
தமிழக மீனவா்களும் தாக்குதலுக்கு உள்ளாகிறாா்கள். சிறையில் அடைக்கப்படுகிறாா்கள். கட்சத்தீவை இந்திய, இலங்கைக்கு தானமாக கொடுத்து விட்டதால் அது இலங்கை கடல் பரப்பாகிவிட்டது. இதன்மூலம் அந்த பகுதியில் மீனவா்கள் உரிமை இழந்து அவா்கள் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகி வருகின்றனா். சில சமயங்களில் உயிா் சேதம் கூட ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரங்களை தமிழக அரசும் கண்டிக்கவேண்டும். மத்திய அரசின் கவனத்திற்கு மாநில அரசு கொண்டு செல்லவேண்டும் எனவும் டி.ராஜா கேட்டுக்கொண்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.