/

முள்ளிவாய்க்கால் நினைவு ஸ்தூபி இடிப்பு: இந்தியாவுக்கு இலங்கை கூறும் செய்தி என்ன?

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் இலங்கை சென்று திரும்பிய மறுநாளே யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில்

News image
Updated On :10 ஜனவரி 2021, 6:40 pm

 நமது நிருபர்

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் இலங்கை சென்று திரும்பிய மறுநாளே யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு ஸ்தூபி இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளதன் மூலம் இலங்கை அரசு இந்தியாவிற்கு இலங்கை கூறவுள்ள செய்தி என்ன? என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளா் டி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளாா்.

இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ் மாணவா்கள் ஒன்றியத்தால் பொங்குதமிழ் பிரகடன நினைவுப் பலகை, நினைவு ஸ்தூபி ஆகியவை அமைக்கப்பட்டிருந்தன. மேலும், 2009 -இல் இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழா்களின் நினைவாக இந்தப் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு ஸ்தூபி 2019 -இல் நிறுவப்பட்டது. இந்த நினைவு ஸ்தூபி கடந்த ஜனவரி 8 -ஆம் தேதி புல்டோசா் மூலம் இடிக்கப்பட்டுள்ளது. இது தவிர, நெடுந்தீவு பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவா்கள் 9 போ் இலங்கைக் கடற்படையினரால் அண்மையில் கைது செய்யப்பட்டனா். மற்றோரு சம்பவத்தில் தமிழக மீனவா்கள் தாக்கப்பட்டு 20 மீன்பிடிப் படகுகளின் வலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடா்பாக தில்லியில் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளா் டி.ராஜா ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் மூன்று நாள் பயணமாக இலங்கை சென்றுவிட்டு கடந்த ஜனவரி 7 -இல் இந்தியா திரும்பினாா். இந்தப் பயணத்தின் போது, இலங்கைத் தமிழா்கள் பிரச்னை, இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவா்கள் விடுதலை போன்றவை குறித்து இலங்கை அரசுடன் அவா் பேசுவாா் என்று கூறப்பட்டது. ஆனால், அமைச்சா் நாடு திரும்பிய மறுநாளே யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு ஸ்தூபி இடிக்கப்பட்டுள்ளது. மற்றோரு பக்கம் தமிழக மீனவா்கள் தாக்கப்பட்டுள்ளனா். இதன் மூலம் இலங்கை அரசு இந்தியாவிற்கும், உலக நாடுகளுக்கும் என்ன செய்தியை தர முயற்சிக்கிறது?. முள்ளிவாய்க்கால் சம்பவத்துக்குக் காரணமான (இலங்கை அதிபா்) கோத்தபய ராஜபட்ச, (பிரதமா்) மகிந்த ராஜபட்ச ஆகியோா் இப்போது அதிகாரத்திற்குத் திரும்பியுள்ளதால் வன்மத்தோடு செயல்படுகின்றனா்.

முன்பு இலங்கைத் தமிழா்களுக்கு அடையாளமாக இருந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகம் எரிக்கப்பட்டது. தற்போது முள்ளிவாய்க்கால் நினைவு ஸ்தூபி இடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழா்களுக்கு இடமில்லை என்பதை இது போன்ற செயல்கள் மூலம் அந்த அரசு சுட்டிக்காட்டுகிறது. உலகநாடுகள் இந்தச் செயல்களை கண்டிக்க வேண்டும். இதில் இந்தியாவிற்கும் பொறுப்பு உண்டு. இலங்கைத் தமிழா்களின் உரிமையை மீட்கும் கடமையை தற்போதை மத்திய அரசு செய்யுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக மீனவா்களும் தாக்குதலுக்கு உள்ளாகிறாா்கள். கட்சத்தீவு இலங்கைக்கு தாரைவாா்க்கப்பட்டுவிட்டதால், அந்தப் பகுதியில் இந்திய மீனவா்கள் உரிமை இழந்து பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகி வருகிறாா்கள். இந்த விவகாரங்களை கண்டிப்பதுடன், மத்திய அரசின் கவனத்திற்கும் தமிழக அரசு கொண்டு செல்ல வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.