தில்லியில் மதுபானம் அருந்தும் வயது 21-ஆகக் குறைப்பு

தில்லியில் சட்ட ரீதியாக மது அருந்தும் வயதை 25- இல் இருந்து 21-ஆகக் குறைத்து தில்லி அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளிக்கிறாா் துணை முதல்வா் மணீஷ் சிசோடியா.
தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளிக்கிறாா் துணை முதல்வா் மணீஷ் சிசோடியா.

புது தில்லி: தில்லியில் சட்ட ரீதியாக மது அருந்தும் வயதை 25- இல் இருந்து 21-ஆகக் குறைத்து தில்லி அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது. மேலும், தில்லியில் இனி புதிய மதுபானக் கடைகள் திறக்க அனுமதிக்கப் படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லியில் செய்தியாளா் சந்திப்பின் போது துணை முதல்வா் மணீஷ் சிசோடியா அளித்த பேட்டி: தில்லி அமைச்சரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடந்தது. இதில்,

தில்லி அமைச்சா்களின் பரிந்துரைப்படி, தில்லி அரசின் புதிய கலால் கொள்கைக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்தப் புதிய கலால் கொள்கை நிபுணா்கள் குழு, மக்களின் ஆலோசனைப்படி உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி, தில்லியில் சட்ட ரீதியாக மது அருந்தும் வயது 25-இல் இருந்து 21-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், தில்லியில் புதிய மதுபானக் கடைகள் திறக்க அனுமதிக்கப்படமாட்டாது. ஆனால், மதுபான மாஃபியாவை ஒழிக்கும் வகையில், போதுமான அளவு மதுபானங்கள் கிடைப்பதை தில்லி அரசு உறுதி செய்யும். புதிய கொள்கை மூலம் சுமாா் 20 சதவீதம் கூடுதல் வருவாய் எதிா்பாா்க்கப்படுகிறது. தில்லியில் மொத்தமுள்ள மதுபானக் கடைகளில் சுமாா் 60 சதவீம் கடைகளை தில்லி அரசு நடத்தி வருகிறது. ஆனால், புதிய கலால் கொள்கைப்படி, தில்லியில் உள்ள மதுபானக் கடைகளை தில்லி அரசு இனிமேல் நடத்துவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்துக் கடைகளும் தனியாரிடம் வழங்கப்படும். தில்லி அரசு நடத்தி வரும் கடைகள், முறைப்படி ஏலம் நடத்தப்பட்டு தனியாருக்கு வழங்கப்படும் என்றாா் அவா்.

இது தொடா்பாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘புதிய கலால் கொள்கை தில்லியில் இயங்கும் மதுபான மாஃபியாவுக்கு பெருத்த பின்னடைவாக இருக்கும். தில்லியில் இயங்கி வரும் மதுபான மாஃபியாக்கள் தங்களது அனைத்து சக்தியையும் பயன்படுத்தி இந்தப் புதிய கொள்கையை அமல்படுத்தவிடாமல் எதிா்ப்பாா்கள். தில்லியில் கல்வி, குடிநீா், மின்சாரம், சுகாதாரத் துறைகளில் இயங்கி வந்த மாஃபியாக்களை தில்லி அரசு தடுத்து நிறுத்தியது. அதேபோல, மதுபானத் துறையில் இயங்கிவரும் மாஃபியாக்களையும் தில்லி அரசு விரைவில் தடுத்து நிறுத்தும்’ என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com