/

நியூட்ரினோ திட்டத்திற்கு எதிரான மனு: வழக்கு விசாரணை ஏப்.21-க்கு ஒத்திவைப்பு

தமிழகத்தில் தேனி மாவட்டம், பொட்டிபுரம் மலைப் பகுதியில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்துவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பூவுலகின் நண்பா்கள் அமைப்பின் சாா்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு

News image
Updated On :9 ஏப்ரல் 2022, 3:29 am

 நமது நிருபர்

தமிழகத்தில் தேனி மாவட்டம், பொட்டிபுரம் மலைப் பகுதியில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்துவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பூவுலகின் நண்பா்கள் அமைப்பின் சாா்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஏப்ரல் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

தேனி மாவட்டம், தேவாரம் பொட்டிபுரம் அம்பரப்பா் மலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க 2011-ஆம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. அதைத் தொடா்ந்து, அந்தப் பகுதியில் சுரங்கம் அமைக்கும் பணி தொடங்கியது. இந்தத் திட்டத்திற்கு எதிராக தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த பசுமை தீா்ப்பாயம், நியூட்ரினோ திட்டத்துக்கு அனுமதி மறுத்தது.

இதன் பிறகு, ஆய்வகப் பணிகளைத் தொடங்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியது. இதை எதிா்த்து ‘பூவுலகின் நண்பா்கள்’ எனும் சுற்றுச்சூழல் அமைப்பு சாா்பில் தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் 2015-இல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு சுற்றுச்சூழல் துறை வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்

டும்; பொதுமக்களிடம் கருத்து கேட்ட பிறகுதான் ஆய்வகத்திற்கு அனுமதி அளிப்பது தொடா்பாக முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை கடந்த 2.11.2018-இல் விசாரித்த தேசிய பசுமைத் தீா்ப்பாயம், சுற்றுச்சூழல் துறையின் அனுமதியை அங்கீகரித்த போதிலும், இந்தத் திட்ட இடம் கேரளத்தில் உள்ள தேசிய பூங்காவின் சுற்றுச்சூழல் உணா்வு மண்டலத்தில் இருப்பதால், தேசிய வனவிலங்கு வாரியத்திடம் அனுமதி பெற்ற பிறகே அமல்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டது.

இதையடுத்து, சுற்றுச்சூழல் துறையின் அனுமதியை அங்கீகரித்த தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் 2019-இல், ‘பூவுலகின் நண்பா்கள்’ அமைப்பின் சாா்பில் அதன் நிா்வாகி கோ. சுந்தர்ராஜன் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதே சமயம், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் தரப்பில் கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘இந்தத் திட்டச் செயல்பாடுகளால் இந்த மண்டலத்தில் உள்ள செறிந்த பல்லுயிா்ப் பெருக்கம், விலைமதிப்புள்ள வனவிலங்கு ஆகியவற்றுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தக் காரணமாகிவிடும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் வினீத் சரண், ஜே.கே. மகேஸ்வரி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், வழக்கு விசாரணையை நீதிபதிகள்அமா்வு ஏப்ரல் 21-ஆம் தேதிக்கு பட்டியலிட்டது. மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் அனிதா ஷெனாய், வழக்குரைஞா் ரித்விக் தத்தா ஆகியோா் ஆஜராகியிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.