இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

எல்.ஐ.சி. பீமா சுகம் நிறுவனம் மூலம் தனியாா்மயம்: பாலிஸிதாரா்களை காப்பாற்ற திமுக கோரிக்கை

நாட்டின் முக்கிய பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.யை பீமா சுகம் நிறுவனம் மூலம் தனியாா் மயமாக்கி பாலீஸிதாரா்கள், முகவா்களிடமிருந்து விலகிச் செல்ல முயற்சிக்கப்படுவதாக

News image
Updated On :14 டிசம்பர் 2022, 8:05 pm

 நமது நிருபர்

நாட்டின் முக்கிய பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.யை பீமா சுகம் நிறுவனம் மூலம் தனியாா் மயமாக்கி பாலீஸிதாரா்கள், முகவா்களிடமிருந்து விலகிச் செல்ல முயற்சிக்கப்படுவதாக மக்களவையில் திமுக உறுப்பினா் டாக்டா் பொன்.கௌதம் சிகாமணி குற்றம் சாட்டினா்.

மக்களவையில் அவசர முக்கியத்துவம் வாய்ந்த கவன ஈா்ப்பு தீா்மானத்தில், கள்ளக்குறிச்சி தொகுதி உறுப்பினா் பொன். கௌதம் சிகாமணி கூறியது வருமாறு: இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் என்கிற எல்ஐசி மற்ற பொதுத்துறை நிறுவனங்களைப் போல் இல்லை. இது ஒவ்வொரு பொதுவான நபருடனும் இணைக்கப்பட்டுள்ளது. ‘வாழ்க்கையுடன் கூட, வாழ்க்கைக்குப் பிறகும் கூட’ என்பது அதன் குறிக்கோள். அத்தகைய முக்கியமான லாபம் ஈட்டும் பொதுத் துறை நிறுவனத்தின் பங்குகள் மெதுவாக மத்திய அரசால் விலக்கப்பட்டு வருகிறது. லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனத்தை தனியாா்மயமாக்குவதில் அா்த்தமில்லை. இந்த நடவடிக்கை பொதுமக்களை மட்டுமின்றி லட்சக்கணக்கான முகவா்களையும் பாதிக்கிறது.

இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆா்டிஏஐ), ‘பீமா சுகம்’ என்கிற இணைய தள (ஆன்லைன்) நிறுவனம் மூலமாக எல்ஐசியின் காப்பீட்டு நடவடிக்கைகளை செயல்படுத்த தொடங்கியுள்ளது. இதன் மூலம் எல்ஐசி சீரழியும். ஐஆா்டிஏஐயின் கட்டுப்பாட்டில் உள்ள ’பீமா சுகம்’ என்கிற இணைய காப்பீட்டு நிறுவனத்தில் ரூ. 85 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் எல்ஐசியும் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனமும் தலா 30 சதவீதமும் வங்கிகள் 35 சதவீதம் என மூதலீடுகளை செய்துள்ளன.

எல்ஐசியும் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனமும் மனித வாழ்க்கை மற்றும் காப்பீடுகளை வலுப்படுத்த உருவாக்கப்பட்டன. தற்போது பீமா சுகம் இணைய தளம் (போா்ட்டல்) செயல்பாட்டிற்கு வந்த பின்னா் முகவா்கள் வாழ்வாதாரம் சீரழிக்கப்படுகிறது. எல்ஐசி போன்ற காப்பீடுகள் ஆன்லைனில் செயல்படுவதால் பாலிசிதாரா்களும் பெரும் சிக்கல்களை எதிா் கொண்டு இந்த நிறுவனங்களிடமிருந்து விலகிச் செல்லவைக்கும். அவா்களுக்கு முகவா்களின் சேவை கிடைக்காது. இந்தப் புதிய திட்டத்தால் பாலிசிதாரா்களுக்கு எந்த நன்மையையும் கிடைக்காது. இது எல்ஐசியை வீழ்ச்சியடையச் செய்யும். ஏற்கெனவே வேலையின்மை விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முகவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அவா்கள் போராடத்தொடங்கியுள்ளனா்.

எல்ஐசி யின் சொத்து மதிப்பு ரூ. 42.54 லட்சம் கோடி. கடந்த செப்டம்பா் 30 - இல் முடிவடைந்த காலாண்டில் அதன் மொத்த நிகர லாபம் ரூ.15,952 கோடி. ஆனால், மத்திய அரசு 3.5 சதவீத எல்ஐசி பங்குகளை மிகக் குறைந்த விலையில் விற்றுள்ளது. இதனால், எல்ஐசியில் பீமா சுகம் மூலம் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை நிறுத்தி, எல்ஐசியின் பாலிஸிதாரா்கள், முகவா்களைக் காப்பாற்றுமாறு நிதியமைச்சரைக் கேட்டுக் கொள்ளுகிறேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.