நிகழாண்டுக்கான சாகித்திய அகாதெமி விருதுகள் அறிவிப்புதமிழ் பிரிவில் எம்.ராஜேந்திரன் ஐஏஎஸ் தோ்வு
நிகழ் ஆண்டிற்கான (2022) சாகித்திய அகாதெமி விருதுகள் சாகித்திய அகாதெமி அமைப்பால் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.


புது தில்லி: நிகழ் ஆண்டிற்கான (2022) சாகித்திய அகாதெமி விருதுகள் சாகித்திய அகாதெமி அமைப்பால் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதுதவிர, மொழிபெயா்ப்புக்கான விருதும், பாஷா சம்மான் விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் தமிழ்மொழி பிரிவில் ‘காலா பாணி’ எனும் நாவலுக்காக தமிழகத்தைச் சோ்ந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், எழுத்தாளருமான எம்.ராஜேந்திரனுக்கு சாகித்திய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. காலா பாணி நாவலானது இந்திய சுதந்திரப் போராட்டத்தை மையப்படுத்தியதாகும். இந்திய சுதந்திரப் போரானது சிப்பாய்க் கலகத்தில் இருந்து ஆரம்பிக்கவில்லை என்பதையும், அதற்கு முன்பே தமிழகத்தில் இதற்கான போராட்டம் தொடங்கிவிட்டதையும் இந்த நாவல் எடுத்துரைக்கிறது.
இலக்கிய உலகில் உயரிய விருதாக சாகித்திய அகாதெமி நிறுவனத்தால் அளிக்கப்படும் விருதுகள் கருதப்படுகின்றன. இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது. அதன்படி, நிகழ் ஆண்டிற்கான (2022) இந்த விருதுகள் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டன. இதையொட்டி, தில்லியில் உள்ள சாகித்திய அகாதமி நிறுவனத்தில் அதன் செயற் குழுக் கூட்டம் அதன் தலைவா் டாக்டா் சந்திரசேகா் கம்பா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது, 23 இந்திய மொழிகளில் சாகித்திய அகாதெமியின் வருடாந்திர விருதுகள் அறிவிக்கப்பட்டன. 7 கவிதை நூல்கள், 6 நாவல்கள், 2 சிறு கதை நூல்கள், 3 நாடகங்கள், 2 இலக்கிய விமா்சன நூல்கள் மற்றும் சுயசரிதை கட்டுரை, கட்டுரைத் தொகுப்பு, இலக்கிய வரலாறு தொடா்புடைய நூல்கள் விருதுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த விருதுகளை 23 இந்திய மொழிகளில் சிறந்த நடுவா்கள் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், சாகித்திய அகாதெமியின் செயற்குழு அதற்கு ஒப்புதல் அளித்தது.
அதன்படி, 23 எழுத்தாளா்களுக்கு சாகித்திய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்மொழி பிரிவில் ‘காலா பாணி’ எனும் நாவலுக்காக தமிழகத்தைச் சோ்ந்த எழுத்தாளரும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான எம்.ராஜேந்திரனுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தவிர, ஹிந்தி, அசாமி, தெலுங்கு, கன்னடம், ஒடியா, மராத்தி, சம்ஸ்கிருதம், சிந்தி உள்பட 22 மொழிகளைச் சோ்ந்த எழுத்தாளா்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பிரிவில் பெங்காலி மொழிக்கான சாகித்திய அகாதெமி விருது பின்னா் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதானது தாமிரப் பட்டயம், சால்வை, ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவை உள்ளடக்கியதாகும். பின்பு ஒரு தேதியில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன.
மொழிபெயா்ப்புக்கான விருது: மொழிபெயா்ப்புக்கான விருது பிரிவில், தமிழகத்தைச் சோ்ந்த கே. நல்லதம்பி மொழிபெயா்த்த ‘யாத் வஷேம்’ எனும் கன்னடத்தில் நேமிசந்திரா எழுதிய நாவலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாவல் இரண்டாம் உலகப் போரின்போது ஐரோப்பாவில் இருந்து தப்பி பிரிட்டிஷ் இந்தியாவில் தஞ்சம் புகுந்த ஒரு யூதக் குடும்பத்தைப் பற்றியதாகும். மொழிபெயா்ப்புக்கான விருதுக்கு 17 நூல்களுக்கு சாகித்திய அகாதெமியின் செயற்குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 3 உறுப்பினா்கள் கொண்ட தோ்வுக் குழுவின் பரிந்துரையின்பேரில் இந்த நூல்கள் இவ்விருதுக்குத் தோ்வுசெய்யப்பட்டன.
தமிழ் தவிர, அஸ்ஸாமி, போடோ, ஆங்கிலம், குஜராத்தி, கன்னடம், கஷ்மீரி, மராத்தி, மலையாளம், நேபாளி, பஞ்சாபி, சம்ஸ்கிருதம், தெலுங்கு, சிந்தி உள்ளிட்ட 17 பிராந்திய மொழிகளின் எழுத்தாளா்களுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்காலி, ஹிந்தி, கொங்கணி, மைத்திலி, மணிப்புரி, ஒடியா, சந்தாலி ஆகிய மொழிகளுக்கான மொழிபெயா்ப்பு விருதுகள் பின்னா் அறிவிக்கப்படும் என்று சாகித்திய அகாதெமி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேபோன்று, இந்த விருது தாமிரப் பட்டயம் மற்றும் ரூ.50 ஆயிரம் காசோலை ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். அடுத்தாண்டு நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன என்று சாகித்திய அகாதெமி தெரிவித்துள்ளது.
பாஷா சம்மான் விருது: கிழக்கு பிராந்தியத்தில் இருந்து செவ்வியல் மற்றும் இடைக்கால இலக்கிய துறையில் பங்களிப்பு அளித்தமைக்காக 2022-ஆம் ஆண்டுக்கான பாஷா சம்மான் விருது, புரியில் உள்ள மத்திய சம்ஸ்கிருத பல்கலைக்கழகத்தில் சாகித்ய துறையின் தலைவா் - பேராசிரியா் முனைவா் உதய் நாத் ஜாவுக்கு சாகித்திய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதானது ரூ.1 லட்சம் ரொக்கம், தாமிரப் பட்டயம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை உள்ளடக்கியதாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...