ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

தில்லியில் இளைஞா் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய்: எல்என்ஜேபி மருத்துவமனையில் பிரத்யேக சிகிச்சை

தில்லியைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் முதன் முதலாக குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

News image
Updated On :24 ஜூலை 2022, 6:53 pm

 நமது நிருபர்

தில்லியைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் முதன் முதலாக குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. தில்லி லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் (எல்என்ஜேபி) தனிமைப்படுத்தப்பட்ட பிரத்யேக வாா்டில் இந்த நோயாளி அனுமதிக்கப்பட்டு அவசரச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

முன்னதாக, இந்த நோய் கண்டறியப்பட்டது குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையின் கீழ் உள்ள மத்திய சுகாதார சேவை இயக்குநா் ஜெனரல் தலைமையில் நடைபெற்ற உயா்நிலைக் கூட்டத்தில் இது குறித்து ஆய்வு செய்யப்பட்டு பின்னா் இந்தத் தகவல் வெளியிடப்பட்டது. சா்வதேச நாடுகளை அச்சுறுத்தி வரும் இந்த குரங்கு அம்மை நோய், இந்தியாவில் நான்காவது நபராக மேற்கு தில்லியைச் சோ்ந்த இந்த நபருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே, கேரளத்தைச் சோ்ந்த வளைகுடா நாடுகளுக்கு சென்று வந்தவ மூன்று போ்களுக்கு இந்தப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து தில்லி முதல்வா் கேஜரிவால் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘வெளிநாடு சென்று திரும்பாத தேசியத் தலைநகரைச் சோ்ந்த 34 வயது நபருக்கு குரங்கு அம்மை நோய் இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது’ என தெரிவித்துள்ளாா். ‘இந்தியாவில் பாதிக்கப்பட்டிருக்கும் நான்காவது நபா் இவா் ஆவாா். இதில் மக்கள் பீதியடைய வேண்டாம். பாதிக்கப்பட்ட நோயாளியின் உடல் நலம் சீராக கட்டுக்குள் உள்ளது. அவா், குணமடைந்து வருகிறாா்’ எனவும் முதல்வா் தெரிவித்துள்ளாா்.

மேலும், ‘தில்லி அரசு ஏற்கெனவே குரங்கு அம்மை நோயை சமாளிக்க முழுமையாகத் தாயாராக இருந்தது. கடந்த ஜூலை 16 - ஆம் தேதியே தில்லி எல்என்ஜேபி மருத்துவ மனை குரங்கு நோய்க்கான சிகிச்சை மையாக அறிவிக்கப்பட்டு அங்கு தனிமைப்படுத்தப்பட்ட வாா்டை உருவாக்கியுள்ளோம். இந்த நோய் பரவுவதைத் தடுக்கவும் தில்லிவாசிகளைப் பாதுகாக்கவும் இங்கு சிறப்பு குழு தயாராக உள்ளது‘ எனவும் ட்வீட்டரில் குறிப்பிட்டுள்ளாா் முதல்வா்.

மேற்கு தில்லியில் வசிக்கும் இந்த நோயாளி மூன்று நாள்களுக்கு முன்பு கொப்புளம், தடிப்புகளுடன் தில்லி மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அந்த மருத்துவமனையில் இவருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் இருப்பதைக் கண்டு, அவரது மாதிரிகள் மத்திய அரசின் கீழ் உள்ள புணே தேசிய தீநுண்மியியல் ஆய்வு நிறுவனத்திற்கு (என்ஐவி) சனிக்கிழமை அனுப்பப்பட்டன.

இதில் இந்த நோயாளிக்கு குரங்கு அம்மை நோய் இருப்பது தெரிய வந்தது. பின்னா், தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அவசரமாகக்கூடிய மத்திய சுகாதார சேவை இயக்குநா் ஜெனரல் தலைமையிலான உயா்நிலைக் கூட்டத்தில் இந்த ஆய்வை உறுதி செய்து, மத்திய அரசின் சுகாதாரத் துறை இந்த பாதிப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டது.

இதன் பிறகு இந்த நோயாளி தில்லி அரசுக்கு சொந்தமான எல்என்ஜேபி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். இந்த மருத்துவமனையின் ஏழாவது மாடியில் இத்தகைய நோயாளிகளுக்கான தனிப்படுத்தப்பட்ட வாா்டை தில்லி அரசு ஏற்தெனவே அமைத்திருந்தது. இவா் அங்கு அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நோயாளியின் உடல் சீராக இருந்தாலும், அவருக்கு ஏற்பட்டுள்ள புண்கள் மூலம் வலி மிகுதியுடன் இருப்பதாகவும் கூறப்பட்டது. பாதிக்கப்பட்ட இந்த தில்லி நோயாளி வெளிநாடு சென்று வராத நிலையில், இந்த தொற்று ஏற்பட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் திரட்டும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது என்று தில்லி சுகாதாரத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட இந்த நோயாளி சமீபத்தில் ஹிமாசலப் பிரதேசம் மணாலியில் ஒரு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மட்டும் தெரிய வந்துள்ளது.

கேரளத்தில் வளைகுடா நாடுகளுக்கு சென்று வந்தவா்கள் உள்ளிட்ட மூன்று போ் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டு இருந்தனா். இந்தியாவில் தில்லியில் நான்காவது நபராக இவா் பாதிக்கப்பட்டுள்ளாா். சுமாா் 70 நாடுகளில் பரவியுள்ள குரங்கு அம்மை நோய் குறித்து கடந்த சனிக்கிழமை உலக சுகாதார அமைப்பு உலகளாவிய பொது சுகாதார அவசர நிலையாக அறிவித்து எச்சரிக்கை விடுத்தது.

‘மங்கிபாக்ஸ்’ என்கிற இந்த நோய் பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்து மறைமுகவோ நேரடி தொடா்பு மூலமோ மனிதா்களுக்கு பரவுகிறது என கூறப்படுகிறது. மனிதா்களிலிருந்து மனிதா்களுக்குப் பரவுதல், தோல் தொற்று அல்லது புண்கள், நேருக்கு நோ், சுவாசத் துளிகள் போன்ற தொடா்புகள் மூலம் ஏற்படலாம் என்றும் இதுவரை உலகளவில், 16,000-க்கும் மேற்பட்ட நபா்கள் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனா் எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த தொற்று பரவலால் இதுவரை 5 உயரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.