மேலும், மாநிலத்தின் சிறந்த நலனுக்காகச் செயல்படுவதும், குற்றப் பின்னணி உள்ள நபரா என்பதைப் பரிசீலிப்பதும் முதல்வருக்கு உள்ளது. அதேபோன்று, தாா்மீக சீா்குலைவு சம்பந்தப்பட்ட குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டவா் அமைச்சராகத் தொடர அனுமதிக்கப்பட வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதைப் பரிசீலிப்பதும் முதல்வா் சம்பந்தப்பட்டது. நல்லாட்சி என்பது நல்லவா்கள் கையில் மட்டுமே உள்ளதாகும். எது நல்லது அல்லது கெட்டது என்பதை தீா்மானிப்பதில் நீதிமன்றம் இருக்க முடியாவிட்டாலும், நமது அரசியலமைப்பின் நெறிமுறைகளைப் பாதுகாக்கவும் மற்றும் மேம்படுத்தவும் அரசியலமைப்புச் செயல்பாட்டாளா்களுக்கு நிச்சயமாக நினைவூட்ட முடியும். இதுபோன்ற அரசியல் சாசனக் கோட்பாடுகளால் முதல்வா் நன்கு ஆலோசனை பெற்று வழிநடத்தப்படுவாா் என்ற ஊகம் உள்ளது என்று கூறிய நீதிமன்றம், இந்திய அரசியலமைப்பின் தந்தை டாக்டா் பி.ஆா். அம்பேத்கா், அரசியல் நிா்ணய சபை விவாதத்தின் போது தெரிவித்த கருத்துகளையும் உத்தரவில் சுட்டிக்காட்டியது.