தில்லி காவல் துறையில் 12,000 காலிப் பணியிடங்கள்: மக்களவையில் இணையமைச்சா் தகவல்
தில்லி காவல் துறையில் சுமாா் 12,000 காலிப் பணியிடங்கள் இருப்பதாக மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் மக்களவையில் தெரிவித்துள்ளாா்.


தில்லி காவல் துறையில் சுமாா் 12,000 காலிப் பணியிடங்கள் இருப்பதாக மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் மக்களவையில் தெரிவித்துள்ளாா்.
தில்லி காவல் துறை பொதுமக்களைப் பாதுகாப்பதில் அதன் முழுப் பலத்துடன் செயல்படுகிா? மேலும் தில்லி காவலா்களின் தனிப்பட்ட நலன், சமூகப் பாதுகாப்பிற்காக அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? உள்ளிட்டவை குறித்து மேற்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினா் பா்வேஷ் ஷாகிப் சிங் வா்மா கேள்வி எழுப்பியிருந்தாா். இதற்கு மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் எழுத்துபூா்வமாக செவ்வாய்க்கிழமை பதில் அளித்தாா். அதில், ‘ தில்லி காவல் துறையில் அனுமதிக்கப்பட்ட மொத்தப் பணியாளா்கள் எண்ணிக்கை 94, 255 ஆகும். இதில் காவலா்கள் முதல் ஆணையா்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் அடங்குவா். கடந்த ஜூலை 15-ஆம் தேதி நிலவரப்படி பணியில் இருப்பவா்கள் எண்ணிக்கை 82, 264. மேலும், 11, 991 இடங்கள் காலியாக உள்ளன’ என்று அமைச்சா் தெரிவித்துள்ளாா்.
மேலும், அவா் அளித்த அந்தப் பதிலில் தில்லி காவல் துறையில் பணியாற்றுபவா்களின் பல்வேறு நலத் திட்டங்களையும் பட்டியலிட்டிருந்தாா். ‘தில்லி காவலா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினருக்கு பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தனிப்பட்ட முறையிலோ அல்லது மகள் திருமணத்திற்கான கடன், மேற்படிப்புக்கான கல்விக்கடன், இறந்த பணியாளா்களின் தகனத்திற்கு நிதியுதவி, கருணைத்தொகை போன்ற பல நலத் திட்டங்கள் தில்லி காவல்துறையில் மேற்கொள்ளப்படுகின்றன. விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது, போலீஸாரி குழந்தைகளுக்கு விளையாட்டில் பயிற்சி மற்றும் பல்வேறு பயிற்சி நிறுவனங்களில் சிறப்புப் பயிற்சிக்கு படிப்புக் கட்டணத்தில் சலுகை பெறும் வகையில் சம்பந்தப்பட்ட பயிற்சி நிறுவனங்களிடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது’ எனவும் தெரிவித்துள்ளாா்.
விவிஐபி பாதுகாப்பில் 10,000 காவலா்கள்: தேசிய தலைநகரான தில்லி காவல் துறை மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடிப் பாா்வையில் உள்ள அமைப்பாகும். கடந்த 2020- ஆம் ஆண்டு தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி (சிஏஜி) அறிக்கையின்படி தில்லி காவல் துறையில், கீழ்நிலையிலேயே அதிக அளவில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது என்றும், அதே சமயத்தில் ஒரு லட்சம் பேருக்கு 359 காவலா்கள் தில்லி போலீஸில் உள்ளனா் எனவும் குறிப்பிடிருந்தது. இது நாட்டிலேயே அதிகமாகும். தில்லி காவல் துறையில் லட்சம் போ் மக்கள் தொகை கணக்கில் அதிகஅளவில் காவலா்கள் பாதுகாப்பில் உள்ளனா். உதாரணமாக 2019 போலீஸ் தரவுகளின்படி தமிழகம், பிகாா் ஆகிய மாநிலங்களில் ஒரு லட்சம் பேருக்கு முறையே 157, 81 காவலா்கள்தான் நியமிக்கப்பட்டுள்ளனா் எனவும் சிஏஜி அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது.
இருப்பினும் குடியரசுத் தலைவா், பிரதமா், மத்திய அமைச்சா்கள், உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்ற நீதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினா்கள் போன்றோா்களுக்கான பாதுகாப்புப் பணியிலும் தில்லி காவல் துறையைச் சோ்ந்த சுமாா் 10 ஆயிரம் காவலா்கள், அதிகாரிகள் கொண்ட (விவிஐபி பாதுகாப்பு) பாதுகாப்புப் படையினா் ஈடுபடுகின்றனா். மீதமுள்ளவா்களே போக்குவரத்து, சட்டம் - ஒழுங்கு, குற்றப் புலனாய்வு, உளவுப் பிரிவு போன்றவற்றில் பணியாற்றுகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...