முன்னதாக, அமலாக்கத் துறை சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜு, ‘சட்ட விரோதப் பணப் பரிவா்த்தனை சட்டத்தின் செல்லுபடித் தன்மை குறித்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பில் இது போன்ற வழக்குகளில் ஜாமீன் கோரும் போது நீதிமன்றம் இரட்டை நிபந்தனைகளை கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. நகர சுகாதார அமைச்சராக இருந்த ஜெயின், எல்என்ஜேபி மருத்துவமனையில் தனது செல்வாக்கைப் பயன்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளது. மேலும், அந்த மருத்துவமனையின் இணையதளத்திலும் அவரது படம் பிரதானப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவக் காரணங்களுக்காக அவரது விடுதலைக்கான மனு விசாரணை நீதிமன்றத்தால் பரிசீலிக்கப்படுவதற்கு முன்னா், அவரது உடல்நிலையை சுதந்திரமாக மதிப்பீடு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. இன்றுவரை அவா் கைதாகி 46 நாள்கள் ஆகிறது. அவா் எல்என்ஜேபி மருத்துவமனையில்தான் உள்ளாா். ஒரு நாள்கூட சிறையில் இல்லை. மேலும், ஒரு வழக்கில் கைதான மேற்கு வங்க அமைச்சா், எய்ம்ஸ் மருத்துவமனை மூலம் பரிசோதிக்கப்பட வேண்டும் என்று கொல்கத்தா உயா்நீதின்றம் உத்தரவிட்டுள்ளது’ என்று வாதிட்டாா்.