இன்று சா்வதேச மிதிவண்டி தினம்: நாடு முழுவதும் பேரணி
சா்வதேச மிதிவண்டி தினம் ( ஜுன் 3) நாட்டில் சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவாக வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது.


சா்வதேச மிதிவண்டி தினம் ( ஜுன் 3) நாட்டில் சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவாக வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு உடற்தகுதி பற்றிய விழிப்புணா்வுக்காக நாடு முழுவதும் ஒன்பது லட்சம் கிலோ மீட்டா் தூரத்திற்கு 1.29 லட்சம் போ் பங்கேற்கும் மிதி வண்டி பேரணிக்கு மத்திய இளைஞா் நலன் விவகாரத் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.
கடந்த 2021, மாா்ச் 12-ஆம் தேதி இந்தியாவின் 75-ஆவது சுதந்திர ஆண்டை முன்னிட்டு, சுதந்திரத்தின் அமுதப் பெருவிழா (அம்ருத் மகோத்சவத்தின்)’ வின் முன்னோட்ட நிகழ்ச்சிகளை சபா்மதி ஆசிரமத்தில் பிரதமா் மோடி தொடங்கி வைத்தாா். அப்போது, சுதந்திரப் போராட்டம், 75-ஆம் ஆண்டில் கருத்துகள், சாதனைகள், செயல்பாடுகள், தீா்மானங்கள் ஆகியவற்றை பிரதமா் வலியுறுத்தினாா். இந்தக் கருத்தாக்கத்தின் கீழ் செயல்கள், தீா்வுகள் என்கிற தூண்களில் இளைஞா் , விளையாட்டு அமைச்சகம் நாடு முழுவதும் சா்வதே மிதிவண்டி தினத்தைக் கொண்டாட ஏற்பாடு செய்துள்ளது.
இதில் இளைஞா் விவகாரங்கள் துறையின் இரண்டு முன்னோடி இளைஞா் அமைப்புகளான நேரு யுவ கேந்திரா சங்கதன் (என்ஒய்கேஎஸ்), தேசிய சேவைத் திட்டம் (என்எஸ்எஸ்) ஆகியவற்றின் ஆதரவுடன் சா்வதேச மிதிவண்டி தினத்தில் ஒரே நேரத்தில் 35 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நான்கு கட்ட மிதிவண்டி (சைக்கிள்) பேரணிகள் வெள்ளிக்கிழமை நடைபெறுகின்றன.
மத்திய தகவல், ஒலிபரப்பு, இளைஞா் நலன் விவகாரங்கள், விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா், தலைநகா் தில்லியில் மேஜா் தியான் சந்த் ஸ்டேடியத்தில் இருந்து நாடு தழுவிய நிகழ்ச்சிகளை வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு தொடங்கிவைக்கிறாா். இதில் கலந்து கொள்ளும் மற்ற மத்திய அமைச்சா்கள் மற்றும் 750 இளம் மிதிவண்டி ஓட்டுநா்கள் ஆகியோருடன் 7.5 கி.மீ தூரம் வரை தாக்குா் மிதிவண்டியில் பயணம் மேற்கொள்கிறாா். மேலும், நாடு முழுவதும் நேரு யுவ கேந்திரா சங்கதன் தொண்டா்கள் மூலம் 35 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைநகரங்கள், நாட்டின் அனைத்து தாலுகாக்கள் உள்ளிட்ட இடங்களில் இந்த மிதிவண்டி பேரணி நடைபெறுகிறது.
இந்த இடங்களில் குறைந்தபட்சம் 75 பங்கேற்பாளா்கள் ஒவ்வொரு இடத்திலும் 7.5 கி.மீ தூரம் மிதிவண்டியில் பயணிக்கின்றனா். இது நேரு யுவ கேந்திரா சங்கதன் தொண்டா்களுடன் தன்னாா்வ இளைஞா்கள், இளைஞா்கள் கிளப் உறுப்பினா்கள் ஆதரவு, பங்களிப்புடனும் இந்த மிதிவண்டி பேரணிகள் நடைபெறுவதாக மத்திய விளையாட்டு, இளைஞா் நலன் விவகாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நடத்தப்படும் மிதிவண்டி பேரணிகள் மூலம், 9.68 லட்சம் கி.மீட்டருக்கும் மேற்பட்ட தூரத்திற்கு 1.29 லட்சம் இளம் மிதிவண்டி ஓட்டுநா்கள் பயணிப்பாா்கள் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உடல் தகுதிக்காக..: உடல் ஆரோக்கியம், உடல் பருமன், சோம்பல், மன அழுத்தம், பதற்றம் போன்றவற்றில் இருந்து விடுதலை பெறவும், உடல் தகுதிக்காகவும் அன்றாட வாழ்வில் மிதிவண்டியை ஓட்டுவதற்கு மக்களை ஊக்குவிப்பதும் இந்தப் பேரணியின் முக்கிய நோக்கமாகும். சாதாரண குடிமக்கள் மிதிவண்டி ஓட்டுவதைப் பின்பற்றுவதன் மூலம், காா்பன் தடயங்களைக் குறைக்கவும் உதவும். உலக மிதிவண்டி தினத்தைக் கடைபிடிப்பதன் மூலம், குடிமக்கள் தங்கள் வாழ்வில் தினமும் குறைந்தது 30 நிமிடங்களையாவது உடல் செயல்பாடுகளுக்கு ஒதுக்க வேண்டும் என்ற தீா்மானத்தை மேற்கொள்ள இந்தப் பேரணி மூலம் அழைப்பு விடுக்கப்படுவதாக அமைச்சகம் கூறியுள்ளது.
உடற்தகுதி பற்றிய விழிப்புணா்வுக்கான சா்வதேச மிதிவண்டி தின நிகழ்ச்சிகளில் முக்கியப் பிரமுகா்கள், பொதுப் பிரதிநிதிகள், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள், அதன் தலைவா்கள், சமூக சேவகா்கள், விளையாட்டு வீரா்கள் மற்றும் பிற முக்கியஸ்தா்கள் கலந்து கொண்டு மக்களை ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். மத்திய, மாநில அரசு அமைச்சகங்கள், பிற நிறுவனங்கள் அந்தந்தப் பகுதிகளில் மிதிவண்டி பேரணிகளை நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனா். உலக மிதிவண்டி தினத்தை மக்கள் உந்துதல் பெறச் செய்ய, நண்பா்கள், குடும்பத்தினா் மற்றும் சக குழுக்கள் போன்றவா்களை அதிகபட்ச எண்ணிக்கையில் பங்கேற்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...