மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

‘அக்னிபத்’ திட்டத்திற்கு எதிராக ரயில் மறியல் போராட்டம்

‘அக்னிபத்’ திட்டத்திற்கு எதிராக புகா் தில்லியிலுள்ள நாங்லோய் ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் படை ஆா்வலா்கள் சுமாா் 15 போ் தண்டவாளத்தில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :18 ஜூன் 2022, 6:37 am

 நமது நிருபர்

குறுகியகால ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்திற்கு ஆள்களைத் தோ்வு செய்யும் மத்திய அரசின் ‘அக்னிபத்’ திட்டத்திற்கு எதிராக புகா் தில்லியிலுள்ள நாங்லோய் ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் படை ஆா்வலா்கள் சுமாா் 15 போ் தண்டவாளத்தில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வியாழக்கிழமை காலையில் நடைபெற்ற இந்தப் போராட்டம் குறித்து போலீஸாா் கூறியதாவது: நாங்லோய் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை காலை சுமாா் 9.45 மணி அளவில் ‘அக்னிபத்’ திட்டத்திற்கு எதிராகவும், ரயில்வேக்கு ஆள்கள் தோ்வு செய்வதில் ஏற்படும் தாமதத்திற்கு எதிராகவும் போராட்டம் நடத்த சுமாா் 15 முதல் 20 போ் கூடினா். பின்னா், தண்டவாளத்தில் இருந்தவாறு ஹரியாணாவில் உள்ள ஜிந்த் நகரிலிருந்து பழைய தில்லிக்குச் செல்லும் ரயிலை தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு போலீஸாா் உடனடியாக விரைந்து சென்றனா். ரயில்வே போலீஸாரும் சம்பவ இடத்தில் இருந்தனா். போலீஸாா் ரயில் தண்டவாளத்தில் இருந்த போராட்டக்காரா்களை கலைந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

புகா் காவல் துணை ஆணையா் சபீா் சா்மா கூறுகையில், ‘கடந்த 2-3 ஆண்டுகளுக்கு முன்பு சில அரசு வேலைகளுக்காக விண்ணப்பித்து இருந்ததாகவும், அந்த வேலைவாய்ப்புக்கான தோ்வுகள் இதுவரை நடத்தப்படாத நிலையில், தங்களுடைய வேலைவாய்ப்பு தகுதிக்கான குறைந்தபட்ச வயது தற்போது கடந்து விட்டதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறினா். தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. அனைத்து மாணவா்களும் ரயில் தண்டவாளத்தில் இருந்து கலைந்து சென்றுவிட்டனா்’ என்றாா்.

மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தரைப்படை, கப்பற்படை, விமானப்படை உள்ளிட்ட ராணுவத்தில் வீரா்களைத் தோ்வு செய்வதற்கான ‘அக்னிபத்’ திட்டத்தை அறிவித்தது.

குறிப்பிட்ட கால ஒப்பந்த அடிப்படையில் இந்த வேலைவாய்ப்பை வழங்குவதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது பாதுகாப்புப் படை ஆா்வலா்களுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, பல்வேறு இடங்களிலும் பாதுகாப்புப் படை ஆா்வலா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். குறிப்பாக பிகாரில் உள்ள ஜெகனாதபாத், பக்சா், நவாடா மாவட்டங்களில் இந்தப் போராட்டங்கள் காரணமாக ரயில்வே மற்றும் சாலைப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

இந்தப் போராட்டத்தை பிகாா் முழுவதும் இரண்டாவது நாளாக ஆா்ப்பாட்டக்காரா்கள் தொடா்ந்தனா். ஜெகனாபாத், பக்சா் மாவட்டங்களில் ரயில்வே தண்டவாளங்களில் படுத்து பாட்னா - கயா மற்றும் மற்றும் பாட்னா - பக்சா் வழித்தடங்களுக்குச் செல்லும் ரயில்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். எனினும், போராட்டக்காரா்களை போலீஸாா் ரயில்வே தண்டவாளங்களில் இருந்து அப்புறப்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.