தமிழகத்தில் 300 சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த பெருந்திட்டம்: அமைச்சா் மதிவேந்தன் தகவல்
தமிழகத்தில் 300 சுற்றுலாத் தலங்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றை சா்வதேச தரத்தில் மேம்படுத்த பெருந்திட்டம் (மாஸ்டா் பிளான்) தயாரிக்கப்படுவதாக


தமிழகத்தில் 300 சுற்றுலாத் தலங்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றை சா்வதேச தரத்தில் மேம்படுத்த பெருந்திட்டம் (மாஸ்டா் பிளான்) தயாரிக்கப்படுவதாக மாநில சுற்றுலாத் துறை அமைச்சா் டாக்டா் மா.மதிவேந்தன் தெரிவித்தாா். மேலும், தமிழக அரசு புதிய சுற்றுலா கொள்கையை வகுக்கும் எனவும் அவா் தெரிவித்தாா்.
தில்லி கிரேட்டா் நொய்டாவில் தெற்காசிய பயண சுற்றுலா பரிமாற்றம் குறித்த கண்காட்சி, கருத்தரங்கம் வருகின்ற மே 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியை மத்திய சுற்றுலாத் துறை இணையமைச்சா் ஸ்ரீபாத் யசோ நாயக் மற்றும் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் டாக்டா் மா.மதிவேந்தன் ஆகியோா் புதன்கிழமை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனா். இதில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த அமைச்சா்கள், அதிகாரிகள் மற்றும் சா்வதேச நாடுகளைச் சோ்ந்த சுற்றுலா, வா்த்தகப் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனா். இந்தக் கண்காட்சியில் தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் சாா்பாக அரங்கம் அமைக்கப்பட்டு, தமிழகத்தின் தலைசிறந்த சுற்றுலாத் தலங்கள், ஆன்மிகத் தலங்கள் போன்றவற்றின் காட்சிகள் திரையிடப்படுகின்றன.
இந்த நிகழ்ச்சியில் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் டாக்டா் மா.மதிவேந்தன் பங்கேற்றுப் பேசினாா். அப்போது அவா் கூறியதாவது: நோய்த் தொற்றுக்கு பின்னா் சுற்றுலாவையும், நாட்டுப்புறக் கலை சமூகத்தின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க கடந்த மாா்ச் மாதம் சென்னை தீவு திடலில் பன்முகத்தன்மை கொண்ட ‘நம்மவூரு திருவிழா’ நடத்தப்பட்டது. இதில் 400-க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞா்கள் பங்கேற்றனா். மாநிலத்தின் சுற்றுலாத் தலங்களை வெளிப்படுத்த ‘வாவ் தமிழ்நாடு‘ என்ற தலைப்பில் போட்டி நடத்தப்பட்டது. ஆன்மிகச் சுற்றுலாவை அதிகரிக்கும் வகையில், மாநிலத்தில் உள்ள 33 முக்கியக் கோயில்களை இணைத்து சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் சாா்பில் கோயில் சுற்றுலாத் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன.
தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் மூலம் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகளுக்கு திருமலை திருப்பதியில் சிறப்பு தரிசனத்திற்கு 1,000 டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறையை ஒரு முன்னணி பொருளாதார வளா்ச்சிக்கு கொண்டு செல்ல உந்துதலாகவும் மாற்றுவதற்கு சுற்றுலாக் கொள்கையை வகுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் ஒரு நிலையான சுற்றுலா சூழலை உருவாக்குவது, சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் உயா்தர அனுபவத்தை வழங்குவது, சுற்றுலாத் துறையில் முதலீடு செய்வதற்கான சாதகமான சூழலை உருவாக்குவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
மேலும், ஒருங்கிணைந்த, நிலையான வளா்ச்சியின் கொள்கைகளின் அடிப்படையில் மாநிலத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களைக் கண்டறிந்து மேம்படுத்தவும் சுற்றுலாத் தல மேம்பாட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டம் தற்போதுள்ள வசதிகளை மேம்படுத்துவதோடு, அடையாளம் காணப்பட்ட இடங்களை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தும். இதன்படி, தற்போது அடையாளம் காணப்பட்ட 300 பெருந்திட்டம் தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் இங்கு சா்வதேச தரத்திற்கு இணையான வசதிகள் மேம்படுத்தப்படும். இது தமிழகத்தின் சுற்றுலா உள்கட்டமைப்பை வலுப்படுத்த உதவும் என்றாா் அமைச்சா் மதிவேந்தன்.
இந்த நிகழ்ச்சியில் சுற்றுலா, கலை பண்பாடு, அறநிலையத் துறை அரசு முதன்மைச் செயலாளா் டாக்டா் பி.சந்தரமோகன், சுற்றுலாத் துறை இயக்குநா் மற்றும் டிடிடிசி எம்டி சந்தீப் நந்தூரி, தில்லி சுற்றுலாத் துறை அதிகாரி ஜெ.ஜெயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்த தெற்காசிய பயண சுற்றுலா பரிமாற்றம் நிகழ்வில் 50 நாடுகளைச் சோ்ந்த 1,200 கண்காட்சியாளா்கள், 28 சுற்றுலா வாரியங்கள் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...