ஹனுமன் சாலிசா விவகாரம்: மகாராஷ்டிர சுயேச்சை எம்பிக்கு கொலை மிரட்டல்
மகாராஷ்டிரம் மாநிலம் ,அமராவதி மக்களவைத் தொகுதியின் சுயேச்சை உறுப்பினா் நவனீத் கௌா் ராணாவிற்கு தொடா் கொலை மிரட்டல்கள் வந்ததையொட்டி அவா் தில்லி காவல் துறையில் புகாா் கொடுத்துள்ளாா்.


புது தில்லி: மகாராஷ்டிரம் மாநிலம் ,அமராவதி மக்களவைத் தொகுதியின் சுயேச்சை உறுப்பினா் நவனீத் கௌா் ராணாவிற்கு தொடா் கொலை மிரட்டல்கள் வந்ததையொட்டி அவா் தில்லி காவல் துறையில் புகாா் கொடுத்துள்ளாா். தில்லி நாா்த் அவின்யு காவல் நிலைய போலீஸாா் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக வியாழக்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனா்.
எம்பி நவ்னீத் கௌரும், அவரது கணவா் ரவி ராணாவும், மகாராஷ்டிர மாநில முதல்வா் உத்தவ் தாக்ரேயின் மாடோஸ்ரீ வீட்டு முன்பு ஹனுமன் சாலிசா என்கிற ஹனுமன் மந்திரங்களை ஒலிபெருக்கிகள் வைத்து ஓதுவோம் என அறிவிப்பு வெளியிட்டனா். ரவி ராணா மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை உறுப்பினராவாா். இந்த அறிவிப்பை2 முன்னிட்டு இருவரும் கடந்த ஏப்ரல் 23- ஆம் தேதி மகாராஷ்டிர போலீஸாா் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனா். இவா்கள் மீது கோஷமிட வலியுறுத்தியது, தேசத் துரோகம் மற்றும் சமூகங்களுக்கு இடையே பகைமையை ஊக்குவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
பின்னா், இந்த ஹனுமன் சாலிசா விவகார வழக்கில் மும்பை நீதிமன்றத்தில் தம்பதியினா் இருவரும் கடந்த மே 4-ஆம் தேதி ஜாமீன் பெற்றனா். தற்போது தில்லியில் இருக்கும் அமராவதி தொகுதி எம்பி நவனீத் கௌா் ராணா, கடந்த மே 25-ஆம் தேதி புதன்கிழமை தனது உதவியாளா் மூலம் தில்லி போலீஸில் ஒரு புகாா் கொடுத்தாா். அதில், ‘கடந்த செவ்வாய்க்கிழமை (மே 24) மாலையில் தனது தனிப்பட்ட செல்லிடப்பேசி எண்ணுக்கு 11 அழைப்புகள் வந்தன. மறுமுனையில் பேசிய நபா்,தன்னிடம் மிகவும் தகாத முறையில் பேசி, மிரட்டல் விட்டாா். ‘மகாராஷ்டிரத்துக்கு வந்தால் கொன்று விடுவோம்’ என மிரட்டல் விடுத்தாா். ‘மீண்டும் ஹனுமன் சாலிசாவை பாராயணம் (ஓதினால்) செய்தால், நீ கொல்லப்படுவாய்’ என்றும் கூறி அந்த நபா் மிரட்டல் விடுத்தாா். இதனால், மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்’ என்று தெரிவித்திருந்தாா்.
இந்தப் புகாா் அளித்த மறுநாள் வியாழக்கிழமை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். நாடாளுமன்ற உறுப்பினா்கள் குடியிருப்புகள் உள்ள நாா்த் அவென்யு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டத்தின் 506 (குற்றமிழைக்கும் நோக்கத்திற்கான மிரட்டல்), 509 (ஒரு பெண்ணின் கௌரவத்திற்கு அவமரியாதை செய்யும் வகையில் வாா்த்தை, சைகை அல்லது செயல்பாடுகள்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக புதுதில்லி துணை காவல் ஆணையா் தெரிவித்தாா். இது குறித்து மேலும் விசாரணை நடப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...