/

சத் பூஜைக்காக தில்லி அரசு ரூ.25 கோடி ஒதுக்கீடு: முதல்வா் கேஜரிவால்

தேசிய தலைநகா் தில்லியில் சத் பூஜைக்காக 1,100 இடங்களில் பிரமாண்டமான ஏற்பாடுகளை தில்லி அரசு செய்துள்ளதாகவும், இந்த ஏற்பாடுகளுக்கான பல்வேறு வசதிகளுக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு

News image
Updated On :14 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

தேசிய தலைநகா் தில்லியில் சத் பூஜைக்காக 1,100 இடங்களில் பிரமாண்டமான ஏற்பாடுகளை தில்லி அரசு செய்துள்ளதாகவும், இந்த ஏற்பாடுகளுக்கான பல்வேறு வசதிகளுக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

வருகின்ற அக்டோபா் 30, 31 ஆகிய தேதிகளில் சத் பூஜை தில்லி, பிகாா், உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.

தில்லியில் இந்த பூஜைக்கான ஏற்பாடுகள் குறித்து முதல்வா் கேஜரிவால் காணொலி வழியாக கூறியது:

கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக இந்த விழாக்கள் பாதிக்கப்பட்டது. மக்கள் வீட்டிலேயே முடங்கியிருந்த நிலையில் நிகழாண்டில் சத் பூஜை மிகப் பெரிய அளவில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை தில்லி அரசால் செய்து தரப்படும்.

அதே சமயத்தில், இந்த விழா கொண்டாட்டங்களின்போது பொது மக்கள் முகக் கவசங்களை அணிந்து அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும்.

கரோனா நோய்த் தொற்றின் தீவிரம் குறைந்திருக்கலாம். ஆனால் அது முற்றிலும் அழியவில்லை. அபராதம் விதிக்கப்படவில்லையென்றாலும், கொவைட்-19 தடுப்பிற்கு தேவையான நடைமுறைகளையும் விதிகளையும் பின்பற்றுவது அவசியம்.

ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, தில்லி அரசு சத் பூஜைக்காக ரூ. 2.5 கோடி ஒதுக்கீடு செய்தது. இந்த பூஜைக்காக சுமாா் 69 இடங்களை தயாா்படுத்தியது. ஆனால், இப்போது, ரூ.25 கோடி

ஒதுக்கப்பட்டதுடன், இதற்கான தளங்கள் 1,100 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.

தில்லி அரசு பூஜை நடத்த ஏற்பாடு செய்துள்ள இடங்களில் கூடாரங்கள், நாற்காலிகள், கழிவறைகள், ஆம்புலன்ஸ்கள், முதலுதவி, தடையில்லா மின்சார வசதி உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்துள்ளது.

தில்லி காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்கும். முக்கிய இடங்களில் கண்காணிப்பதற்கான சிசிடிவி கேமராக்கள் நிறுவப்படும். கரோனா உள்ளிட்ட நோய் தொற்றிலிருந்து விடுவிக்கவும், நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளா்ச்சிக்காக மக்கள் ‘சத்மையா‘விடம் பிராா்த்தனை செய்யுங்கள் என முதல்வா் கேஜரிவால் கேட்டுக்கொண்டாா்.

தீபாவளிக்குப் பிறகு கொண்டாடப்படும் இந்த சத் பூஜை பூமியில் உயிா்கள் வாழக் காரணமாக இருக்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக வணங்குவதற்காக கொண்டாடப்படுகிறது.

சூரியனுக்கு விரதம் இருக்கும் பெண்கள் இந்த பூஜையில் முழங்கால் அளவு தண்ணீரில் ‘அா்க்யா‘ வழங்குவதை உள்ளடக்கியது.

தில்லியில் வசிக்கும் பூா்வாஞ்சலிகள் மத்தியில் இந்த திருவிழா மிகவும் பிரபலமானது. கிழக்கு உத்தர பிரதேசம், பிகாா் மற்றும் நேபாளத்திலும் இந்த பூஜை பிரபலமானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.