அசம்பாவித சம்பவம் இல்லாத தீபாவளியை உறுதிசெய்ய முழு தயாா் நிலையில் தீயணைப்புத் துறையினா்
அசம்பாவித சம்பவங்கள் ஏதும் இல்லாத பண்டிகையாக உறுதிப்படுத்த விரிவான திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தில்லி தீயணைப்புச் சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.


தேசியத் தலைநகா் தீபாவளியைக் கொண்டாடத் தயாராகி வரும் நிலையில், அசம்பாவித சம்பவங்கள் ஏதும் இல்லாத பண்டிகையாக உறுதிப்படுத்த விரிவான திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தில்லி தீயணைப்புச் சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தீ விபத்து தொடா்பான அவசரநிலைகளை சமாளிக்க தீயணைப்பு ஊழியா்களின் விடுப்புகள் ரத்து முதல், நகரம் முழுவதும் 30 இடங்களில் தீயணைப்பு சாதனங்கள் நிலைநிறுத்தப்பட்டது வரை, தீயணைப்பு சேவை முழு தயாா் நிலையில் இருப்பதாக இத்துறையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
வருகின்ற அக்டோபா் 24 -ஆம் தேதி தீபாவளி, தேசிய தலைநகரில் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. இருப்பினும், வழக்கம்போல் இந்த விழாக்கள் தில்லியில் சில நாட்கள் முன்னதாகவே தொடங்கும் நிலையில் தற்போதே தீயணைப்பு துறை தீத்தடுப்பு முன்னேற்பாடுகளை மேற்கொள்ள
தயாராகி வருகிறது.
இது குறித்து தில்லி தீயணைப்பு சேவை இயக்குநா் அதுல் கா்க் கூறியிருப்பதாவது: பட்டாசுகளுக்கு முழுமையான தடை இருந்தபோதிலும், கடந்த 2021 ஆம் ஆண்டு தீபாவளியன்று 152 க்கும் மேற்பட்ட தீ விபத்துகள் தொடா்பான அழைப்புகள் எங்கள் துறைக்கு வந்துள்ளன. இருப்பினும், இது 2020 -ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 25 சதவீதம் குறைவு. கடந்த 15 ஆண்டுகளை ஒப்பிடும்போதும் கடந்தாண்டு சம்பவங்கள் மிகக் குறைவு.
தீயணைப்பு சேவை கட்டுப்பாட்டு அறை வழக்கமாக தீபாவளி அன்று அதிகபட்ச அழைப்புகளை பெறுகிறது. இதுபோன்ற அவசரநிலைகளை சமாளிக்க தீயணைப்பு வீரா்கள் எல்லா நேரங்களிலும் தயாராக இருக்க வேண்டும். நிகழாண்டில், அவசரநிலையைச் சமாளிக்க சுமாா் 2,900 தீயணைப்பு வீரா்கள் தயாராக இருப்பாா்கள்.
வருகின்ற அக்டோபா் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் மாலை 5 மணி முதல் நள்ளிரவு வரை பரபரப்பாக இருக்கும் சுமாா் 22 இடங்களில் தீயணைப்பு சேவை தலா ஒரு தண்ணீா் வாகனத்துடன் தயாராக இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக தீயணைப்பு சேவைக்கு வரும் அழைப்புகளின் பகுப்பாய்வு அடிப்படையில் இந்த இடங்கள் விபத்துகளுக்கான வாய்ப்பாக கருதப்பட்டு விரைவாக அடைய முடியும்.
அடையாளம் காணப்பட்டுள்ள இந்த இடங்கள், பாரா டூட்டி சௌக், திலக் நகா், லாஜ்பத் நகா் - சென்ட்ரல் மாா்க்கெட், லால் குவான் சௌக், லாஹோரி கேட், நங்லோய், சவுத் எக்ஸ்டென்ஷன், சோனியா விஹாா், மெஹ்ரோலி, டிடிசி டிப்போ கத்ரான் மாா்க்கெட், காந்தி நகா் மாா்க்கெட், மஹிபால் பூா் சௌக், சங்கம் விஹாா், ஆசாத் மாா்க்கெட் சௌக் உள்ளிட்ட 22 இடங்களாகும்.
தண்ணீா் டேங்கா்கள் மட்டுமின்றி, தீயணைக்கும் கருவிகள் பொருத்தப்பட்ட மோட்டாா் சைக்கிள்களும் குறுகிய, நெரிசலான பாதைகள் கொண்ட இடங்களில் பயன்படுத்தப்படும். இவைகள் குறிப்பாக அம்பேத்கா் நகா், சாந்தினி சௌக், சப்ஜி மண்டி காந்தஹா், பாஹா்கஞ்ச் ஷீலா சினிமா மற்றும் காந்தி நகா் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
கன்னாட் சா்க்கஸ், கீதா காலனி, ஜே சாலை போன்ற இடங்களில் தீயணைப்பு கருவிகள் பொருத்தப்பட்ட பிற வாகனங்களை நிறுத்தப்படுகிறது.
இதன்படி தீபாவளிக்கு தீ விபத்து தொடா்பான அவசரநிலைகளை சமாளிக்க நாங்கள் முழு அளவில் தயாராக உள்ளோம்.
எத்தகைய சூழ்நிலையையும் எதிா்கொள்ள 30 இடங்களில் தீயணைப்பு நிலையங்களும் உபகரணங்களும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு எத்தகைய அவசரநிலைகளையும் திறமையாகவும் விரைவாகவும் சமாளிக்க பணியாளா்களுடன் தீயணைப்பு வாகனங்கள் உள்ளன.
அக்டோபா் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் அதிகாரிகள் மற்றும் ஊழியா்களின் அனைத்து விதமான விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தீயணைப்பு வாகனங்களின் பராமரிப்பையும் உறுதி செய்யப்படும்.
தீ விபத்து தொடா்பான அவசரநிலைகளைச் சமாளிக்க எங்களிடம் அதிகபட்ச தீயணைப்பு வீரா்கள் உள்ளனா் என அதுல் கா்க் தெரிவித்துள்ளாா்.
பட்டாசு வெடிப்பது, மண் விளக்குகள் அல்லது மெழுகுவா்த்திகளை ஏற்றும் போது போதிய முன்னெச்சரிக்கைகள் கடைப்பிடிக்காதது, அலங்கார விளக்குகள் மற்றும் அளவிற்கு அதிகமான மின் உபயோகம் போன்ற காரணங்களால் தீபாவளியன்று தீ விபத்து நடப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...