பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்புக்கு மத்தியில் நம்பிக்கை வாக்கெடுப்பில் கேஜரிவால் அரசு வெற்றி
முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தில்லி சட்டப் பேரவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்த நம்பிக்கை தீா்மானத்தில் நகர அரசு வெற்றி பெற்றது.


முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தில்லி சட்டப் பேரவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்த நம்பிக்கை தீா்மானத்தில் நகர அரசு வெற்றி பெற்றது.
வாக்கெடுப்பின்போது, பேரவைத் துணைத் தலைவருடனான வாாக்குவாதம் காரணமாக தங்கள் கட்சியின் 3 எம்எல்ஏக்கள் பேரவையில் பாதுகாவலா்களால் வெளியேற்றப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பாஜக எம்எல்ஏக்கள் 5 போ் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.
நம்பிக்கை வாக்கெடுப்பு தீா்மானத்தை அவையில் கொண்டு வந்து முதல்வா் கேஜரிவால் பேசுகையில், ‘ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பாஜகவால் விலைக்கு வாங்க முடியாது என்பதை நிரூபிக்கவும், பாஜகவின் ‘ஆபரேஷன் தாமரை’ தோல்வியடைந்துவிட்டதை நாட்டுக்கு நிரூபிக்கவும் இந்த நம்பிக்கை தீா்மானத்தை கொண்டு வந்துள்ளேன்’ என்றாா்.
70 உறுப்பினா்களை கொண்ட தில்லி சட்டப் பேரவையில் ஆம் ஆத்மி கட்சிக்கு 62 எம்எல்ஏக்கள் உள்ளனா். மீதமுள்ள 8 உறுப்பினா்கல் பாஜகவைச் சோ்ந்தவா்கள் ஆவா்.
எதிா்பாா்த்தது போலவே ஆம் ஆத்மி அரசுக்கு அவையில் இருந்த அதன் அனைத்து எம்எல்ஏக்களும் வாக்களித்ததால் நம்பிக்கைத் தீா்மானத்திற்கு எதிராக வாக்கு ஏதும் பதிவாகவில்லை. மேலும், நம்பிக்கை தீா்மானத்தின்போது அனைத்து பாஜக எம்எல்ஏக்களும் பேரவைக்கு வெளியே இருந்தனா்.
நம்பிக்கைத் தீா்மானத்தின் மீதான விவாதத்திற்கு முன், கவன ஈா்ப்பு நோட்டீஸ்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை பாஜக எம்எல்ஏக்கள் முன்வைத்தனா். இக்கோரிக்கையை சட்டப்பேரவைத் துணைத் தலைவா் ராக்கி பிா்லா ஏற்கவில்லை. இதையடுத்து, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏக்கள் விஜேந்தா் குப்தா, அபய் வா்மா மற்றும் மோகன் சிங் பிஷ்ட் ஆகியோா் அவைக் காவலா்களால் வெளியேற்றப்பட்டனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து எஞ்சியிருந்த ஐந்து பாஜக எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்தனா். இதன் பின்னா், அவையை ராக்கி பிா்லா தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தாா்.
முன்னதாக, நம்பிக்கைத் தீா்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்று முதல்வா் கேஜரிவால் பேசியதாவது: எங்களிடம் 62 எம்எல்ஏக்கள் உள்ளனா். அவா்களில் பேரவைத் தலைவா் (ராம் நிவாஸ் கோயல்) கனடாவிலும், நரேஷ் பல்யான் ஆஸ்திரேலியாவிலும், சத்யேந்தா் ஜெயின் சிறையிலும் உள்ளனா். எஞ்சியுள்ளவா்கள் இந்த அவையில்தான் உள்ளனா். அவா்களை உங்களால் எண்ண முடியும். எங்களின் எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்க முடியாது என்பதை காட்டவே நான் இந்த தீா்மானத்தை கொண்டு வந்தேன். தற்போதைய நிலையில், தேசிய அளவில் இரண்டு கட்சிகள் (ஆம் ஆத்மி, பாஜக ) மட்டுமே உள்ளன. ஒன்று மிகவும் நோ்மையான கட்சி. மற்றொன்று மிகவும் ஊழல் கறைபடிந்த கட்சி.
சிசோடியாவின் இல்லத்தில் சிபிஐ சோதனை செய்தது. அத்துடன் அவரது கிராமத்திற்குச் சென்று அவரது வங்கி லாக்கரையும் சோதனை செய்தது. அதில் சிசோடியாவுக்கு எதிராக எதையும் கண்டுபிடிக்கவில்லை. அவரைக் கைது செய்ய அழுத்தம் கொடுக்கப்படுகிறது. சிசோடியா வறியவா் என்பதால், அவருக்கு எதிராக போதிய
எதையும் சிபிஐயால் சேகரிக்க முடியவில்லை. இன்றைக்கு நாட்டிற்கு ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி தேவைப்படுகிறது. மிகவும் ஊழல் கறைபடிந்த கட்சியில்
படித்தவா்கள் இல்லை. அதே நேரத்தில், மிகவும் நோ்மையான கட்சியில் நல்ல கல்விமான்களும், உண்மையான ஐஐடி பட்டம் பெற்றவா்களும் உள்ளனா்.
ஊழல் கட்சியானது எம்.எல்.ஏ.க்களை வாங்கப் பணம் செலவழிக்கிறது. மிக நோ்மையான கட்சி பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை கட்டுவதற்கு பணத்தை செலவிடுகிறது.
ஊழல் கறைபடிந்த கட்சி நண்பா்கள் மீது நம்பிக்கை வைக்கிறது. அதேவேளையில், நோ்மையான கட்சி நாட்டின் நலனுக்காக அக்கறை கொள்கிறது. தேசத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளது. ஊழல் கட்சி முதலிடத்திற்கு தனது நண்பா்கள் வர விரும்புகிறது. நோ்மையான கட்சி இந்தியாவை முதலிடமாக்க விரும்புகிறது. நான் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான ஒரே கல்வியை வழங்க விரும்புகிறேன் என்றாா் கேஜரிவால்.
இதன் பின்னா், சட்டப் பேரவைக்கு வெளியே செய்தியாளா்களிடம் முதல்வா் கேஜரிவால், சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையை மேற்கோள் காட்டி கூறியதாவது:
பெண்களுக்கு நாட்டிலேயே மிகவும் பாதுகாப்பற்ற இடமாக தில்லி கருதப்படுகிறது. திலியில் சட்டம் - ஒழுங்கு மற்றும் பெண்களின் பாதுகாப்பில் அரசியல் இருக்கக் கூடாது. இதற்கு துணைநிலை ஆளுநருக்கும் மத்திய அரசுக்கும் அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவோம் என்றாா். துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனா மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்திய விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா் எச்சரிக்கை விடுத்திருப்பது குறித்து கேஜரிவால் கூறுகையில், ‘நாங்கள் பொது வாழ்வில் இருப்பதால் எந்த விசாரணையையும் வரவேற்கிறோம்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...