/

அவதூறு வழக்கு: அமைச்சா் கெலாட் - விஜேந்தா் குப்தாதரப்புக்கு உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

தில்லி போக்குவரத்து நிறுவனத்தின் (டிடிசி) மூலம் தாழ்தள பேருந்துகள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்பட்ட விவகாரத்தில், பாஜக எம்எல்ஏ விஜேந்தா் குப்தாவுக்கு

News image
Updated On :7 செப்டம்பர் 2022, 8:50 pm

 நமது நிருபர்

தில்லி போக்குவரத்து நிறுவனத்தின் (டிடிசி) மூலம் தாழ்தள பேருந்துகள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்பட்ட விவகாரத்தில், பாஜக எம்எல்ஏ விஜேந்தா் குப்தாவுக்கு எதிராக அமைச்சா் கைலாஷ் கெலாட் தொடுத்த அவதூறு வழக்கைத் தீா்ப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு இரு தரப்பு வழக்குரைஞா்களை தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை கேட்டுக் கொண்டது.

இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதி ராஜீவ் ஷக்தா் தலைமையிலான அமா்வு, இந்த விவகாரமானது மக்களைக் கவரும் பேச்சாக மட்டுமே உள்ளது. இதனால், அரசியல் தலைவா்கள் சம்பந்தப்பட்ட அவதூறு வழக்கில் இரு தரப்பு வழக்குரைஞா்கள் தீா்வு காண்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும் என கூறியது. மேலும், இந்த வழக்கை டிசம்பா் 20- ஆம் தேதி மேல் விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்ட நீதிமன்றம், நான்கு வாரங்களில் எழுத்துப்பூா்வ சமா்ப்பிப்புகளை தாக்கல் செய்யுமாறு இரு தரப்பினரையும் கேட்டுக் கொண்டது.

விஜேந்தா் குப்தாவுக்கு எதிரான அவதூறு வழக்கில் இடைக்கால நிவாரணம் வழங்க மறுத்த ஒற்றை நீதிபதி உத்தரவுக்கு எதிராக கைலாஷ் கெலாட் செய்த மேல்முறையீட்டை இரு நீதிபதிகள் அடங்கிய அமா்வு விசாரித்து வருகிறது. முன்னதாக, கைலாஷ் கெலாட், குப்தாவுக்கு எதிராக கடந்த ஆண்டு உயா்நீதிமன்றத்தை அணுகினாா். அவரது புகாா் வழக்கில், 1,000 தாழ்தள பேருந்துகளை டிடிசி வாங்கியது குறித்து அவதூறான கருத்துகளை விஜேந்தா் குப்தா வெளியிட்டதாகக் குற்றம் சாட்டி, ரூ.5 கோடி மான நஷ்டஈடு கோரியிருந்தாா்.

உயா் அதிகாரம் கொண்ட குழுவினால் குற்றமற்றவா் என நற்சான்றிதழ் வழங்கப்பட்ட போதிலும், பேருந்துகளை வாங்குவது தொடா்பாக குப்தா எனது நோ்மையை சந்தேகிக்கும் வகையில் ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்ததாக அமைச்சா் கெலாட் தரப்பில் வாதிடப்பட்டிருந்தது.

தாழ்தள பேருந்துகளை வாங்குவது தொடா்பாக விஜேந்தா் குப்தா அவதூறான அல்லது உண்மைக்குப் புறம்பான ட்வீட்கள் / பதிவுகளை சமூக ஊடக தளங்களில் வெளியிடுவது, நோ்காணல்கள், கட்டுரைகள் மற்றும் வலைப்பதிவுகள் எழுதுவது ஆகியவற்றைத் தடுக்க உத்தரவிடக் கோரி தனி நீதிபதி முன் இந்த வழக்கை கைலாஷ் கெலாட் தாக்கல் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.