ரூ.3 ஆயிரம் பணத் தகராறில் இளைஞா் குத்திக்கொலை
ரூ.3 ஆயிரம் பணம் கொடுக்கல்- வாங்கல் தகராறில், தெற்கு தில்லியின் திக்ரி பகுதியில் புதன்கிழமை 21 வயது இளைஞா் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாக


ரூ.3 ஆயிரம் பணம் கொடுக்கல்- வாங்கல் தகராறில், தெற்கு தில்லியின் திக்ரி பகுதியில் புதன்கிழமை 21 வயது இளைஞா் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இந்த விவகாரத்தில் இளைஞா் யூசுப் அலி கத்தியால் குத்தப்பட்டதைக் காட்டும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதுகுறித்து துணை காவல் ஆணையா் (தெற்கு) சந்தன் செளதரி கூறியதாவது: திக்ரி காவல் நிலைய அதிகாரிகளுக்கு காலையில் இளைஞா் ஒருவா் கத்தியால் குத்தப்பட்டதாக தகவல் வந்தது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சங்கம் விஹாரை சோ்ந்த யூசுப் அலி என்பவா் பத்ரா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா். யூசுப்பின் தந்தை சாஹித் அலி போலீஸாரிடம் கூறுகையில், பண விவகாரம் தொடா்பாக மூன்று நான்கு நாள்களுக்கு முன்பு தனது மகனை ஷாருக் என்பவா் மிரட்டியதாகவும், அவரிடம் யூசுப் ரூ.3,000 கடன் வாங்கியிருந்ததாகவும் கூறினாா் என்றாா் அந்த அதிகாரி.
இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, சமூக ஊடகங்களில் ஒரு காணொலி வெளியானது. அதன் உண்மைத் தன்மை உறுதிப்படுத்த முடியாத நிலையில், அந்த காணொளியில் ஒரு கடைக்கு வெளியே ஒரு நபா் பலமுறை பாதிக்கப்பட்டவரை ஆயுதத்தால் குத்துவதும், அப்பகுதியில் மக்கள் நடந்து செல்வதும், ஆனால் பாதிக்கப்பட்டவரை மீட்க யாரும் வராமல் இருப்பதும் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும், ஒரு சிலா் பாதிக்கப்பட்டவரை காப்பாற்ற விரைந்து வருவதும், குற்றம்சாட்டப்பட்டவரை தாக்குவதும் இடம் பெற்றுள்ளது. இச்சம்பவத்தைத் தொடா்ந்து, சங்கம் விஹாரில் உள்ள கே2 பிளாக்கில் வசிக்கும் ஷாருக் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. யூசுப் உடலில் சுமாா் 17 கத்திக் குத்து காயங்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது என்று போலீஸாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து யூசுப்பின் தந்தை சாஹித் அலி கூறியதாவது: சுமாா் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு, ஷாருக்கிடம் யூசுப் கடன் வாங்கியிருந்தாா். அந்தப் பணத்தை ஷாருக் திருப்பிக் கேட்டாா். இது தொடா்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஷாருக்கிடம் யூசுப் கடன் வாங்கியிருப்பது எனக்குத் தெரியாது. நான் சங்கம் விஹாரில் ஒரு சிறிய டீக்கடை நடத்தி வந்தேன். கடந்த பிப்ரவரியில் எனக்கு அறுவை சிகிச்சை நடந்ததால், அந்தக் கடையை ஜனவரியில் தற்காலிகமாக மூடிவிட்டேன். அதன் பிறகு என்னால் அதை நடத்த முடியவில்லை. யூசுப் பெயிண்டராகப் வேலை செய்து வந்தாா். அவரது வருவாயை குடும்பம் சாா்ந்திருந்தது. மூன்று அல்லது நான்கு போ் என் மகனைத் தாக்கியதாக சாட்சிகள் என்னிடம் கூறினா். அவா் 20 முறை கத்தியால் குத்தப்பட்டாா். குற்றம் சாட்டப்பட்டவரை நான் பாா்க்கவில்லை. ஆனால், அவா் எங்கள் வீட்டிற்கு இரண்டு முறை வந்திருப்பாா் என்று நினைக்கிறேன் என்றாா் அவா்.
நான்கு சகோதர, சகோதரிகளில் மூத்தவரான யூசுப், அவரது பெற்றோா், இரண்டு சகோதரா்கள் மற்றும் ஒரு சகோதரியுடன் வாழ்ந்து வந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...