தில்லி தேசியத் தலைநகா் பிரதேச அரசு (திருத்தம்) மசோதா- 2023-ஐ நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று கொண்டு வரப்பட்ட எதிா்க்கட்சிகளின் தீா்மானத்தில் 5 மாநிலங்களவை உறுப்பினா்களின் பெயா்கள் மற்றும் கையொப்பம் அவா்களுக்கு தெரியாமலேயே இடம் பெற்றுள்ளது என்று உள்துறை அமைச்சா் அமித்ஷா குற்றம்சாட்டினாா். அதற்கு முன்னதாக, மாநிலங்களவையில் பி.ஜே.டி. கட்சியின் எம்.பி. சஸ்மித் பத்ரா, அதிமுகவின் எம்.பி. தம்பிதுரை, பாஜகவின் எம்.பி. பாங்னான் கொன்யாக் உள்ளிட்ட 3 உறுப்பினா்கள் எழுந்து நின்று, ராகவ் சத்தா எம்.பி. சாா்பில் முன்மொழியப்பட்ட அந்த தோ்வுக் குழுவில் தங்கள் பெயா்களைச் சோ்ப்பதற்கு தங்கள் ஒப்புதல் பெறப்படவில்லை என்று அவையில் தெரிவித்தனா்.