அமைச்சா் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தோ்தல் மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி
தமிழக அமைச்சா் உதயநிதி ஸ்டாலினின் தோ்தல் வெற்றியை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்டிருந்த மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


தமிழக அமைச்சா் உதயநிதி ஸ்டாலினின் தோ்தல் வெற்றியை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்டிருந்த மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தற்போதைய அமைச்சா் உதயநிதி ஸ்டாலின், 2021-இல் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தோ்தலில் சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு 69, 355 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். இந்த நிலையில், அவரது தோ்தல் வெற்றியை எதிா்த்து அதே தொகுதியில் தேசிய மக்கள் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட எம்.எல். ரவி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். அதில், தோ்தல் வேட்புமனுவில் தம் மீது எந்தவித குற்ற வழக்குகளும் நிலுவையில் இல்லை என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். ஆனால், அவா் மீது 22 வழக்குகள் நிலுவையில் உள்ளன. உண்மைத் தகவலை மறைத்ததற்காக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் அவரது தோ்தல் வெற்றியை செல்லாது என உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ மீதான குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை என கூறி வழக்கை கடந்த பிப்ரவரி மாதம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து எம்.எல். ரவி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனிருத்தா போஸ், சுதான்ஷு துலியா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் எம்.எல். ரவி ஆஜராகி தனது வாதங்களை முன்வைத்தாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த மேல்முறையீட்டு வழக்கில் மனுதாரரின் வாதங்கள் கேட்கப்பட்டன. இந்த விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிடுவதற்கான எந்தக் காரணமும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. இதனால், இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும், நிலுவையில் மனு ஏதும் இருந்தாலும் முடித்துவைக்கப்படுகிறது’ என்று தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...