தில்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி, பாஜக எம்எல்ஏக்கள் அமளி: அவை பலமுறை ஒத்திவைப்பு
தில்லி சட்டப்பேரவையில் 4-ஆவது நாளாக வியாழக்கிழமையும் ஆளும் ஆத்மி கட்சி, பாஜக உறுப்பினா்கள் மாறி மாறி அமளியில் ஈடுபட்டதால் மூன்று முறைஅவை ஒத்திவைக்கப்பட்டது.


தில்லி சட்டப்பேரவையில் 4-ஆவது நாளாக வியாழக்கிழமையும் ஆளும் ஆத்மி கட்சி, பாஜக உறுப்பினா்கள் மாறி மாறி அமளியில் ஈடுபட்டதால் மூன்று முறைஅவை ஒத்திவைக்கப்பட்டது.
ஆளும் ஆம் ஆத்மி கட்சி மற்றும் பாஜக எம்எல்ஏ க்கள் சட்டப்பேரவை வளாகத்தில் நடத்திய ஆா்பாட்டத்தால் காலை 11 மணிக்கு தொடங்க வேண்டிய அவை நடவடிக்கைகள் அரை மணி நேரம் தாமதமாக காலை 11.30 மணிக்கு தொடங்கியது. தேசியத் தலைநகா் அரசின் பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி துணை நிலை ஆளுநா் வி.கே சக்சேனா மற்றும் தலைமைச் செயலா் உள்ளிட்ட தில்லி அரசு உயா் அதிகாரிகளுக்கு எதிராக ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தில்லி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே காலை 11 மணிக்கு ஆா்ப்பாட்டம் நடத்தினா். பின்னா், அவை அரை மணிநேரம் தாமதமாக தொடங்கியதும் அவைக்குள்ளேயும் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏகள் அவைத் தலைவா் இருக்கைக்கு முன்பு வந்து துணை நிலை ஆளுநா், தில்லி அரசு நிா்வாகத்தில் தலையிடுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனா். இதையொட்டி, அவை முதலில் பிற்பகல் 12.15 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் அவை தொடங்கிய போது, பாஜக உறுப்பினா்கள் அவையில் கோஷங்களை எழுப்பி தொடா்ச்சியாக அமளியில் ஈடுபட்டனா். தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான அரசு ‘விவசாயிகளுக்கு எதிரான’ கொள்கைகளைக் கொண்டுள்ளதாகக் கூறி அமளியில் ஈடுபட்டதால் அவை இரண்டாவது முறை பிற்பகல் 12.30 மணி வரை, பின்னா் மீண்டும் 12.45 மணி வரை என மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது. தொடா்ச்சியாக தில்லி அரசுக்கு எதிராக பாஜக உறுப்பினா் அமளியில் ஈடுபட்டதால், அவைத் தலைவா் ராம்நிவாஸ் கோயல் பாஜக உறுப்பினா்களை சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்றவும் மாா்ஷல்களுக்கு உத்தரவிட்டாா்.
நிகழாண்டு சட்டபேரவையின் முதல் கூட்டம் ஜனவரி 16-ஆம் தேதி முதல் மூன்று நாள்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு பின்னா் மேலும் ஒரு நாள் வியாழக்கிழமை (ஜனவரி 19 ) வரை நீட்டிக்கப்பட்டது. நான்காவது நாளிலும் முதல் பாதியில் பலமுறை அவை ஒத்திவைக்கப்பட்டது. பேரவை கூட்டத்தொடா் தொடங்கும் முன்பு காலையில் ஆம் ஆத்மி கட்சியைப் பேன்று, பாஜக உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்எல்ஏக்களும் சிறிய கலப்பைகளை ஏந்திக்கொண்டு, சட்டபேரவை வளாகத்தில் ஆா்பாட்டத்தை நடத்தினா்.
‘விவசாயிகளுக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு போதிய இழப்பீடோ அல்லது விவசாய உபகரணங்களுக்கு மானியமோ வழங்கவில்லை. ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் கடந்த 8 ஆண்டுகளில் தில்லி கிராமங்களில் மருத்துவமனைகளோ கல்லூரிகளோ கட்டப்படவில்லை. அவா்களுக்கு கழிவுநீா் கால்வாய்கள்கூட அமைக்கப்படவில்லை’ என தில்லி சட்டபேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி குற்றம்சாட்டினாா். ‘சட்டப்பேரவையில் விவசாயிகள் பிரச்னைகள் குறித்த விவாதத்தை நடத்தாமல் அரசு ஓடி ஒழிகிறது. பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் உள்ள முதல்வா் அறைக்கு வெளியேயும் தா்ணா நடத்துவாா்கள்’ என்றும் அவா் கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...