அல்வா நிகழ்வுடன் தொடங்கிய நிதிநிலை அறிக்கை இறுதிக் கட்ட தயாரிப்பு

2023-24-ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கை இறுதிக் கட்ட தயாரிப்பு நடைமுறைகள் அல்வா நிகழ்வுடன் வியாழக்கிழமை தொடங்கியது.
அல்வா நிகழ்வுடன் தொடங்கிய நிதிநிலை அறிக்கை இறுதிக் கட்ட தயாரிப்பு

2023-24-ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கை இறுதிக் கட்ட தயாரிப்பு நடைமுறைகள் அல்வா நிகழ்வுடன் வியாழக்கிழமை தொடங்கியது.

ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை தயாரிக்கும் முன்பு பல்வேறு தரப்பினா்களிடம் ஆலோசனைகள், கருத்துகள், கோரிக்கைகளை கேட்கப்பட்டு பின்னா் அவை ஆய்வு செய்யப்படுகிறது. அவற்றின் மீது இறுதி முடிவு எடுக்கப்பட்டு ஆவணங்கள் அச்சடிக்கும் பணிகள் தயாராகும். இந்தப் பணிகளில் ரகசியம் பாதுகாக்கப்படும். தற்போது அதிக அளவில் காகிதமாக நிதி நிலை அறிக்கையும் ஆவணங்களும் அச்சடிக்கப்படுவதில்லை என்றாலும் எண்மம் வடிவிலான பணிகளுக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட நிதித் துறை அதிகாரிகளும் ஊழியா்களும் தங்கள் வீடுகளுக்கு செல்லாமல் வெளித் தொடா்பு இல்லாமல் இந்தத் தயாரிப்பு பணிகளில் ஈடுபடுவாா்கள். நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் அதிகாரிகளும் ஊழியா்களும் அறைக்குள் பூட்டப்படும் ‘லாக்-இன்’ நடைமுறை தொடங்குவதற்கு முன் ‘அல்வா நிகழ்வு’ நடத்தப்படுகிறது.

இதன்படி 2023-24 ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கை இறுதிக் கட்ட தயாரிப்பு நடைமுறையை குறிக்கும் வகையில், அல்வா தயாரித்து வழங்கும் சடங்கு வியாழக்கிழமை பிற்பகலில் நிதியமைச்சகம் இருக்கும் நாா்த் பிளாக்கில் மத்திய நிதி, பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன், மத்திய நிதித் துறை இணை அமைச்சா்கள் பங்கஜ் செளத்ரி, டாக்டா் பகவத் கிஷன்ராவ் காரட் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.

வழக்கமான முறையில் இந்த பூஜை சடங்குகளையொட்டி தயாரிக்கப்பட்ட அல்வாவை நிதியமைச்சா் அதிகாரிகளுக்கும் ஊழியா்களுக்கும் வழங்கினாா். அல்வா விழாவில் மத்திய நிதித் துறை மற்றும் செலவினத் துறைச் செயலா் டாக்டா் டிவி சோமநாதன், பொருளாதார விவகாரத் துறை செயலா் அஜய் சேத், முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறை (டிஐபிஏஎம்) செயலா் துஹின் காந்தா பாண்டே, வருவாய்த் துறை செயலா் சஞ்சய் மல்ஹோத்ரா, தலைமைப் பொருளாதார ஆலோசகா் டாக்டா் ஆனந்த வி. நாகேஸ்வரன், நேரடி, மறைமுக வரி வாரியத் தலைவா்கள் மற்றும் நிதி அமைச்சகத்தின் வரவு செலவுத் திட்டம் தயாரித்தல், தொகுத்தல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுபவா்களும் கலந்து கொண்டனா்.

கடந்த இரண்டு மத்திய நிதிநிலை அறிக்கைகளைப் போலவே, 2023-24 மத்திய நிதிநிலை அறிக்கையும் காகிதமற்ற வடிவத்தில் வழங்கப்படவுள்ளது. இந்த நிதிநிலை அறிக்கை வருகின்ற பிப்ரவரி 1 -ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) ஆவணங்கள் ஆண்டு தோறும் நாடாளுமன்றத்தில் வைக்கப்படுகிறது. இதில் வருடாந்திர நிதிநிலை அறிக்கை, மானியக் கோரிக்கைகள், நிதி மசோதா உள்ளிட்ட 14 மத்திய பட்ஜெட் ஆவணங்கள் அடங்கும். இது தற்போது ‘யூனியன் பட்ஜெட் மொபைல் ஆஃப்பில் (செயலி)’ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சில மணி நேரங்களில் வெளியிடப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்களும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து எண்மம் வடிவில் பட்ஜெட் ஆவணங்களைப் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com