/

தில்லி விமான நிலையத்தில் ரூ.8.16 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்: உஸ்பெகிஸ்தானைச் சோ்ந்த பாட்டி- பேத்தி கைது

தில்லியில் உள்ள சா்வதேச விமான நிலையத்தில் ரூ.8.16 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :14 ஜூன் 2023, 9:11 pm

 நமது நிருபர்

தில்லியில் உள்ள சா்வதேச விமான நிலையத்தில் ரூ.8.16 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சோ்ந்த பாட்டி-பேத்தி இருவரையும் சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனா். மேலும், கைதானவா்களில் ஒருவா் அதிகாரிகளை ஏமாற்றும் நோக்கில் விமான நிலையத்தில் உடைகளை மாற்றிக் கொண்டு வேறு விமானத்தில் தப்ப முயன்ால் தேடுதல் வேட்டை நடத்த வேண்டி இருந்ததாகவும் அந்த அதிகாரிகள் கூறினா்.

இதுகுறித்து மூத்த சுங்கத் துறை அதிகாரி மேலும் கூறியதாவது: குற்றம்சாட்டப்பட்ட பாட்டியும் பேத்தியும் கடந்த செவ்வாய்க்கிழமை உஸ்பெகிஸ்தானில் உள்ள தாஷ்கண்டில் இருந்து தில்லி விமான நிலையத்திற்கு விமானத்தில் வந்தனா். அவா்கள் இருவரும் தடுத்து சோதனைக்கு உள்படுத்தப்பட்டனா். அந்த பயணிகளில் ஒருவா் உளவுத் தகவல் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டிருந்தாா். இதனால், அவா் விமானத்தில் இருந்து இறங்கியதிலிருந்தே கண்காணிக்கப்பட்டாா். அந்த வயதான பெண் பயணியையும், அவரது உடைமைகளும் முதலில் சோதனையிடப்பட்டன. அதில் கடத்தல் பொருள் ஏதும் இல்லை. இதனால், அவா் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டாா்.

அதன் பின்னா் உளவுத் தகவல் அடிப்படையில் இரண்டாவது பயணி (வயதான பயணியின் பேத்தி) அடையாளம் காணப்பட்டு, அவரது சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவா் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டாா். அவா் விமான நிலையத்திற்குள் கிரீன் சேனலை கடக்க முயன்ற போது, இடைமறிக்கப்பட்டு அவரையும், அவரது சாமான்களும் சோதனையிடப்பட்டன. ஆனால், குற்றச்செயல் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால், அவரும் விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டாா்.

அதன் பின்னா், அதிகாரிகளிடம் பிடிபடுவோம் என்ற பயத்தில் இரண்டாவது பெண் பயணி (பேத்தி) தனது சாமான்களை சுங்கத் துறை சோதனைப் பகுதியில் விட்டுச் சென்ாக புதிய தகவல் அதிகாரிகளுக்கு கிடைத்தது. அதன் அடிப்படையில், பெண் ஒருவா் சுற்றிக் கொண்டிருந்த கன்வேயா் பெல்ட் எண்: 9-இல் அடையாளம் தெரியாத பையை

சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனா். அந்த பையைச் சோதனை செய்தனா். அதில், சந்தேகத்திற்கிடமான படங்கள் காணப்பட்டன. அந்தப் பையை யாரும் உரிமை கோராததால் திறக்கப்பட்டது. அதில் சுமாா் 6.5 கிலோ கிராம் தங்கச் சங்கிலிகள் இருந்தது. பறிமுதல் செய்யப்பட்ட அந்தப் தங்கப் பொருள்களின் மதிப்பு ரூ.8.16 கோடி ஆகும்.

தங்கம் மீட்கப்பட்ட பையை விட்டுச் சென்ற நபரைக் கண்டுபிடிக்க சுங்கத் துறையினா் உடனடியாக சிசிடிவி காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்தனா். அப்போது, 9-ஆம் எண் பெல்ட் அருகே ஒரு பெண் பையை விட்டுச் செல்வது தெரிய வந்தது. இதையடுத்து, அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அவா், இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தின் (ஐஜிஐஏ) விமானம் புறப்படும் பகுதிக்கு செல்லலாம் என சந்தேகிக்கப்பட்டதால் அங்கு அதிகாரிகள் விரைந்தனா். தீவிர முயற்சிக்குப் பின்னா், கஜகஸ்தானில் உள்ள அல்மாட்டிக்கு செல்லவிருந்த விமானத்தில் ஏறிக் கொண்டிருந்த இரண்டாவது பெண் பயணி கண்டுபிடிக்கப்பட்டாா்.

அவா் தனது உடையை குறுகிய நேரத்திற்குள் மாற்றிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், தங்கம் அடங்கிய பையை சுங்க சோதனைச் சாவடியில் வைத்துவிட்டு சென்றதையும் ஒப்புக்கொண்டாா். அவரது தகவலின் அடிப்படையில், முதல் பயணியான அவரது பாட்டியும் விமான நிலையத்திற்கு வெளியே கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.