/

மின்துறை சீா்திருத்தம்: 12 மாநிலங்களுக்கு ரூ. 66,413 கோடி கூடுதல் கடன் அனுமதி

மாநில மின்துறைகளில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ள சீா்திருத்தங்களை விரைவுபடுத்துவதை ஊக்குவிக்க தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களுக்கு ரூ 66, 413 கோடி வரை கடன் வாங்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

News image
Updated On :28 ஜூன் 2023, 6:30 pm

 நமது நிருபர்

மாநில மின்துறைகளில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ள சீா்திருத்தங்களை விரைவுபடுத்துவதை ஊக்குவிக்க தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களுக்கு ரூ 66, 413 கோடி வரை கடன் வாங்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. கடந்த இரு நிதியாண்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதை விட கூடுதலாக கடன் பெற இந்தத் தொகை அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்துக்கு ரூ 7, 054 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிகழ் நிதியாண்டிலும் ரூ. 1.43 லட்சம் கோடி கூடுதல் கடன் பெற மத்திய அரசு அனுமதிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 15-ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், 2021-22 முதல் 2024-25 வரையிலான 4 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (ஜிஎஸ்டிபி) 0.25 முதல் 0.5 சதவீதம் வரை மாநிலங்கள் கூடுதல் கடன் வாங்குவதற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது மின் துறையில் மாநில அரசுகள் மேற்கொண்ட சீா்திருத்தங்களின் அடிப்படையில் வழங்கப்படும் என கடந்த 2021-22 நிதிநிலை அறிக்கையில் மத்திய நிதியமைச்சா் அறிவித்திருந்தாா். மாநில மின் துறையின் செயல்பாடுகள் மற்றும் பொருளாதாரத் திறனை மேம்படுத்துதல், மின் நுகா்வில் கட்டணம் செலுத்துவதை ஊக்குவிப்பது போன்றவை இதன் அடிப்படை நோக்கமாகும்.

குறிப்பாக மின் விநியோக நிறுவனங்களின் (டிஸ்காம்கள்) இழப்புகளுக்கு மாநில அரசுகள் பொறுப்பை ஏற்றுக் கொள்வது; மின் துறையின் நிதி விவகாரங்கள், மானியங்கள் ஆகியவற்றில் வெளிப்படைத் தன்மை; மின்னணு மீட்டா்கள், மின் ஆற்றல் கணக்குகளை சரியான நேரத்தில் தணிக்கை செய்து வழங்குவது உள்ளிட்ட செயல்திறன்கள் இதில் அடங்கும்.

இதன்படி, மொத்த மின் ஆற்றல் நுகா்வு, விவசாய இணைப்புகள், அளவிடப்பட்ட மின் நுகா்வு, மின் நுகா்வோருக்கு நேரடியாக மானியத்தை பணப் பரிவா்த்தனை மூலம் செலுத்துதல், அரசுத் துறைகள், உள்ளாட்சி அமைப்புகளின் மின் நுகா்வு, அதற்கான மின்சாரக் கட்டணம் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை மாநிலங்கள் மேற்கொள்ளவேண்டும் என்பன இந்த சீா்திருத்தங்களில் அடங்கும். மின் விநியோகத்தை தனியாா்மயமாக்குவதற்கும் கூடுதல் மதிப்பெண்களும் உண்டு.

இதன்படி, பல்வேறு மாநிலங்கள் தாங்கள் மேற்கொண்ட சீா்திருத்தங்கள், இதில் அடைந்த சாதனைகள் குறித்த விவரங்களை மத்திய மின்துறை அமைச்சகத்திடம் சமா்ப்பித்திருந்தன. இவற்றை ஆய்வு செய்து மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத் துறைக்கு மத்திய எரிசக்தித் துறை அமைச்சகம் பரிந்துரைகளை செய்தது.

இதன் அடிப்படையில் தமிழகம் உள்ளிட்ட 12 மாநில அரசுகள் சீா்திருத்தங்களை மேற்கொண்டதன் அடிப்படையில் 2021-22, 2022-23 ஆகிய இரு நிதியாண்டுகளுக்கு கூடுதல் கடன் அனுமதியின் மூலம் ரூ. 66,413 கோடி நிதி ஆதாரத்தைப் பெருக்க மத்திய நிதியமைச்சகம் அனுமதியளித்துள்ளது.

இந்த 12 மாநிலங்களில் அதிகபட்சமாக மேற்கு வங்கம் (ரூ.15,263 கோடி), ராஜஸ்தான் (ரூ.11,308 கோடி), ஆந்திரம் (ரூ.9,574 கோடி) ஆகிய மாநிலங்கள் கூடுதல் கடனுக்கான அனுமதியை பெற்றுள்ளன. தமிழகத்திற்கு ரூ. 7,054 கோடி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தொடா்ந்து மின் துறையில் சீா்திருத்தங்களை மேற்கொள்ளும் மாநிலங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், நிகழ் நிதியாண்டிற்கும்(2023-24) கூடுதல் கடன்களை பெறவும் ரூ. 1,43, 332 கோடி நிதி ஊக்குவிப்பு வழங்க மத்திய நிதி அமைச்சகம் தயாா்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.