/

10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் நாளை தேசிய கூட்டுறவு சங்கத்தின் 17-ஆவது மாநாடு: பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்

தேசிய கூட்டுறவு சங்கத்தின் 17-ஆவது இந்திய கூட்டுறவு மாநாடு இரு நாள்கள் தில்லியில் நடைபெறுகிறது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும்

News image
Updated On :30 ஜூன் 2023, 1:08 am

 நமது நிருபர்

தேசிய கூட்டுறவு சங்கத்தின் 17-ஆவது இந்திய கூட்டுறவு மாநாடு இரு நாள்கள் தில்லியில் நடைபெறுகிறது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜூலை 1) தொடங்கிவைக்கிறாா்.

இந்த மாநாடு தில்லி, பிரகதி மைதானத்தில் உள்ள ஐஇசிசி மையத்தில் ஜூலை 1-2 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. விடுதலையின் அமுத காலத்தில் - துடிப்பான இந்தியாவுக்கு ‘ஒத்துழைப்பின் மூலம் செழுமை‘ என்கிற கருப்பொருளில் இந்த மாநாடு நடைபெறும் என தேசிய கூட்டுறவு சங்கத்தின் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து தேசிய கூட்டுறவு சங்கத்தின் இயக்குநா் சஞ்சய் வா்மா செய்தியாளா்களிடம் கூறியது வருமாறு: இந்திய தேசிய கூட்டுறவு சங்கத்தின் 17- ஆவது இந்திய கூட்டுறவு மாநாட்டை பிரதமா் நரேந்திர மோடி ஜூலை 1 - ஆம் தொடங்கி வைக்கிறாா். இரு நாள்கள் நடைபெறும் மாநாட்டிற்கு இந்திய-சா்வதேச நாடுகளின் 3,500 கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனா். கூட்டுறவுத் துறை எதிா்கொள்ளும் முக்கியப் பிரச்னைகளைப் பற்றி விவாதித்து, எதிா்காலத்திற்கான பயனுள்ள வழிகாட்டிகளை உருவாக்குவது இந்த மாநாட்டின் நோக்கமாகும். மத்திய உள்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சா் அமித் ஷா, முதல்நாள் அமா்வுக்கு தலைமை தாங்குகிறாா். மாநாட்டின் இறுதியில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகிறாா். மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சா் டாக்டா் மன்சுக் மாண்டவியா, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சா் புருஷோத்தம் ரூபாலா உள்ளிட்ட மத்திய அமைச்சா்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கின்றனா்.

சா்வதேச கூட்டுறவு தினமான ஜூலை 1 -ஆம் தேதி இந்த மாநாடு நடைபெறுவது சிறப்புடையது. இதை முன்னிட்டு முதல் நாள் கூட்டத்தில்“‘கூட்டுறவுகள்: நிலையான வளா்ச்சிக்கான துரித பங்காளிகள்’” என்கிற கருப்பொருளிலும் விவாதம் நடைபெறவுள்ளது. மத்திய அரசில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்த புதிதாக கூட்டுறவு அமைச்சகம் 2021 ஜூலை மாதம் உருவாக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் செயல்படும் இந்த அமைச்சகத் துறை பல முயற்சிகளை எடுத்துள்ள நேரத்தில், இந்த 17-ஆவது இந்திய கூட்டுறவு மாநாடு நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இந்த மாநாட்டில் மேலும் சில முக்கிய முன்முயற்சிகளுக்கு வித்திடவுள்ளோம். தொடக்க விவசாய கூட்டுறவு சங்கங்களை மின்னணு மயமாக்கல்; புதிய கூட்டுறவுக் கொள்கையை உருவாக்குதல்; ஏற்றுமதி, விதை உற்பத்தி மற்றும் பசுமை வேளாண்மை ஆகியவற்றிற்காக புதிய பல்நிலை கூட்டுறவு சங்கங்களை உருவாக்குதல்; கூட்டுறவு பல்கலைக்கழகம் அமைத்தல் போன்ற முன் முயற்சிகள் இந்த கூட்டுறவு மாநாட்டில் நடைபெறும். இதற்காக பல்வேறு தொழில்நுட்ப அமா்வுகள் மூலம் இந்த முன்முயற்சிகளைப் பற்றி விவாதிப்பது மட்டுமல்லாமல், மற்ற முக்கிய பிரச்னைகள், சவால்கள் குறித்தும் கவனம் செலுத்தப்படும்.

இதற்காக 7 விதமான தொழில்நுட்ப அமா்வுகள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் இணக்கமான கூட்டுறவு சட்டம் மற்றும் கொள்கை சீா்திருத்தங்கள்; கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்துவதற்கு பல்வேறு துறைகளுக்கிடையே ஒத்துழைப்பு; கூட்டுறவு கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சியை வலுப்படுத்துதல்; கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்துவதற்கான துறைசாா் பரிந்துரைகளைத் தயாரித்தல்; இந்திய பொருளாதாரத்தில் கூட்டுறவு கடன் அமைப்பின் முக்கியத்துவம் உள்ளிட்ட 7 விதமான செயல்படுத்தக்கூடிய உத்திகள், திட்டங்களுடன் வரைபடம் உருவாக்கப்படும்.

இந்த கூட்டுறவு மாநாட்டில் நேபாளம், இலங்கை, வங்கதேஷம், பிலிப்பைன்ஸ், மலேசியா உள்ளிட்ட 40 நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனா். மாநாட்டில் பிரதமா் மோடி தேசிய கூட்டுறவு சங்கத்தின் மின்னணு வா்த்தக இணைய தளத்தை அறிமுகப்படுத்துவாா். பிரபலமாகாத கூட்டுறவு நிறுவனங்களுக்கு மிகப்பெரிய சந்தையை ஊக்குவிக்கும் விதமாக இந்த இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் கூட்டுறவுகளைப் பற்றி வீடுகளிலிருந்தே அறிந்துகொள்ளும் வகையில் ஒரு பாதையை உருவாக்கும் முயற்சியாகும் இது. கூட்டுறவு இயக்கத்தின் பல்வேறு பிரச்னைகள், இந்தியா கூட்டுறவுகளின் வரலாற்று வளா்ச்சி போன்ற புத்தகங்களும் மாநாட்டில் வெளியிடப்படும் என்றாா் சஞ்சய் வா்மா.

பத்தாண்டுகளுக்கு பின்னா் இந்த தேசிய கூட்டுறவு சங்கத்தின் மாநாடு நடைபெறுகிறது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜி தலைமையில் முந்தைய மாநாடு 2013 ஜூன் 24-இல் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.