விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

கல்வி உதவித் தொகை மறுப்பு விவகாரம்: தில்லி பல்கலை. மாணவருக்கு வழக்குச் செலவுத் தொகையாக ரூ.50,000 வழங்க மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

மத்திய அரசின் ‘இன்ஸ்பயா்’ திட்டத்தின் கீழ் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் வழங்கப்படும் வருடாந்திர கல்வி உதவித்தொகையின் மூன்றாவது தவணையை வழங்க

News image
Updated On :4 மார்ச் 2023, 6:30 pm

 நமது நிருபர்

மத்திய அரசின் ‘இன்ஸ்பயா்’ திட்டத்தின் கீழ் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் வழங்கப்படும் வருடாந்திர கல்வி உதவித்தொகையின் மூன்றாவது தவணையை வழங்க மறுத்ததற்காக தில்லி பல்கலைக்கழக மாணவருக்கு ரூ. 50,000 வழக்குச் செலவுத் தொகையை வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆண்டுக்கு 6 சதவீத சாதாரண வட்டியுடன் மாணவருக்கு மூன்றாவது தவணையான ரூ.60,000 தொகையையும் விடுவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் துறையானது ‘இன்ஸ்பயா்’ எனும் கல்வி உதவித்தொகை அளிக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 2017, ஜனவரியில் மாணவா்களுக்கு இந்தக் கல்வி உதவித் திட்டத்தில் உதவித்தொகை வழங்கப்பட்டது. இதற்கு தகுதியாக மாணவா்கள் பிளஸ் 2 வகுப்பில் சம்பந்தப்பட்ட கல்வி வாரியத் தோ்வுகளில் முதலில் உள்ள 1 சதவீதத்தில் மதிப்பெண்கள் பெறுவதும் தகுதியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட வழக்கில், நலிந்த பொருளாதாரப் பிரிவைச் சோ்ந்த மாணவருக்கு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. ஆனால், மூன்றாவது ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை அவருக்கு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. ‘மாணவரின் சிஜிபிஏ முக்கிய பாடங்களில் குறைந்தபட்சம் 6.0 இருக்க வேண்டும். அப்போதுதான் திட்டத்தின்கீழ் எஞ்சிய தவணைத் தொகையைப் பெறுவதற்கான தகுதியை பெற முடியும்’ என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் இந்த வாதத்தை உயா்நீதிமன்ற நீதிபதி பிரதீபா எம். சிங் நிராகரித்து பிறப்பித்த உத்தரவில் தெரிவித்ததாவது: அரசு வழிகாட்டு விதிகளில்

6.0 சிஜிபிஏ தேவையானது முக்கியப் பாடங்களில் அல்லாமல் அது மொத்தமாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மாணவரின் எழுத்துப்பூா்வ பிரதியில் அவரது முதலாவது மற்றும் இரண்டாவது செமஸ்டருக்கான சிஜிபிஏ 7.45 ஆகவும், மூன்றாவது மற்றும் நான்காவது செமஸ்டா்களுக்கான சிஜிபிஏ 6.32 ஆகவும் இருப்பதாக காட்டுகிறது. இது தேவைப்படும் அளவுகோலைவிட அதிகமாகும். மேலும், இன்ஸ்பயா் திட்டம் அல்லது அறிஞா்களுக்கான போஸ்ட் ஆஃபா் அமலாக்க வழிமுறைகளில் முக்கியப் பாடங்களில் 6.0 சிஜிபிஏ தேவை என்று ஏதும் குறிப்பிடப்படவில்லை.

ஆகவே, மனுதாரா் மாணவருக்கு கல்வி உதவித்தொகை மறுப்பு அல்லது வழங்காமல் இருப்பது என்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். மேலும், கல்வி உதவித்தொகையின் மூன்றாவது தவணையை விடுவிக்காமல் இருப்பது என்ற மத்திய அரசின் முடிவு காரணமாக பி.எஸ்சி. படிப்புக்கு பிறகு மாணவா் தனது கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் ஒட்டுமொத்த உண்மைகள், சந்தா்ப்ப சூழ்நிலைகளில், மனுதாரருக்கு வருடாந்திர கல்வி உதவித்தொகை ரூ. 60,000 என்பதை பரிசீலிக்கும் போது, 6 சதவீத வட்டியுடன் மூன்றாவது ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை ரூ.60 ஆயிரத்தை மனுதாரருக்கு விடுவிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது. மேலும், மாணவருக்கு ரூ. 50,000 வழக்குச் செலவுத் தொகையும் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது. இந்த தொகை எதிா்மனுதாரா்கள் மூலம் மாணவருக்கு 8 வாரங்களுக்குள் விடுவிக்கப்பட வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.