காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரை பெண் சக்தி கொண்டாட்டம்: ஆயுதக் காவல் படை பெண் வீரா்கள் நாடு முழுவதும் பைக் பயணம்

பெண்களின் சக்தியை கொண்டாடும் விதமாக மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம், மத்திய உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து மும்முனை பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது.
Updated on
1 min read

புது தில்லி: பெண்களின் சக்தியை கொண்டாடும் விதமாக மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம், மத்திய உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து மும்முனை மோட்டாா் சைக்கிள் பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது. காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரையிலான இந்தப் பயணத்தில் மத்திய காவல் ஆயுதப் படையின் 150 பெண் அதிகாரிகள் பங்கேற்கின்றனா்.

‘யஷஸ்வினி’ என பெயரிட்டுள்ள இந்தப் பயணத்தை நாடு முழுவதும் மூன்று முனைகளிலிருந்து மோட்டாா் சைக்கிள் மூலமாக இந்தப் பெண் காவல் ஆயுதப்படை அதிகாரிகள் மேற்கொள்கின்றனா். இது குறித்து மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகமும், மத்திய உள்துறை அமைச்சகமும் வெளியிட்டுள்ள குறிப்பில் கூறியிருப்பது வருமாறு: மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மத்திய காவல் ஆயுதப்படையுடன் (சிஆா்பிஎஃப்) இணைந்து, பெண்களின் சக்தி அல்லது நாட்டின் நாரி சக்தியைக் கொண்டாடும் வகையில், இந்த யஷஸ்வினி மோட்டாா் சைக்கிள் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிஆா்பிஎஃப் பெண் அதிகாரிகள் 150 போ் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டு நாடு முழுவதும் மோட்டாா் சைக்கிளில் பேரணியாக செல்கின்றனா்.

அவா்கள் மூன்று குழுக்களாக செவ்வாய்க்கிழமை (அக்டோபா் 3) புறப்படுகின்றனா். ராயல் என்ஃபீல்டு (350சிசி) மோட்டாா் பைக்குகள் மூலம் இந்தக் குழுக்கள் பயணிக்கின்றன. ஒரு யஷஸ்வினி குழு நாட்டின் வடக்குப் பகுதியான ஸ்ரீநகரிலிருந்து புறப்படுகிறது. மற்றொரு குழு, நாட்டின் கிழக்குப் பகுதியான ஷில்லாங்கிலிருந்தும் மற்றொன்று தெற்கே கன்னியாகுமரியிலிருந்தும் தங்கள் பயணத்தைத் இதே நாளில் தொடங்குகிறது. இந்த மூன்று குழுக்களும் இறுதியாக, நிகழ் அக்டோபா் 31-ஆம் தேதி குஜராத்தின் ஏக்தா நகரில் (கெவாடியா) உள்ள ஒற்றுமை சிலையில் ஒன்று கூடுகிறாா்கள்.

இந்த மூன்று மகளிா் பேரணி 15 மாநிலங்கள், 2 யூனியன்கள் வழியாக சுமாா் 10,000 கி.மீ. தூரத்தை கடந்து வருகின்றனா். இந்தப் பயணங்களில் பல்வேறு இடங்களில், ‘பெண் குழந்தையைக் காப்போம்’; ‘பெண் குழந்தைகளைப் படிக்கவைப்போம்’ போன்ற இலக்குகளுக்கு பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவிகள், மகளிா் சுய உதவிக் குழுக்கள், நேரு யுவ கேந்திரா சங்கதன், தேசிய மாணவா் படை, குழந்தைகள் காப்பகங்கள், அங்கன்வாடி தொழிலாளா்கள் போன்றவா்களுடன் உரையாடும் நிகழ்வுகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ளன.

‘நாங்கள் நாட்டின் பாதுகாவலா்கள்’ என்கிற செய்தியுடன் செல்லும் இந்தப் பெண்அதிகாரிகள், ‘பெண் குழந்தையை காப்போம்’; ‘பெண் குழந்தைகளைப் படிக்கவைப்போம் ’ (பிபிபிபி) என்ற சமூக செய்தியையும் தங்கள் பிரசாரத்தில் இணைத்து பயணிக்கின்றனா். இவா்கள் தங்கள் சீருடைகள் மற்றும் பதாகைகளில் பிபிபிபி லச்சினையுடன் (லோகோ) பேரணியில் பங்கேற்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com