சுகாதார நலத் திட்ட மருத்துவ வசதிக்கான செயல்முறையை முறைப்படுத்துங்கள்: உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

மருத்துவ வசதிகளைப் பெறுவதற்கான செயல்முறையை முறைப்படுத்துமாறு தில்லி உயா்நீதிமன்றம் மத்திய அரசையும் தில்லியை ஆளும்ஆம் ஆத்மி அரசையும் கேட்டுக் கொண்டுள்ளது.
Updated on
2 min read

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சோ்ந்த மக்கள் சுகாதார நலத் திட்டங்களின் பலன்களை அனுபவிக்க விரும்புவதைக் கருத்தில் கொண்டு, பல்வேறு சுகாதார நலத் திட்டங்களின் கீழ் மருத்துவ வசதிகளைப் பெறுவதற்கான செயல்முறையை முறைப்படுத்துமாறு தில்லி உயா்நீதிமன்றம் மத்திய அரசையும் தில்லியை ஆளும்ஆம் ஆத்மி அரசையும் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், தற்போதைய அமைப்பில் உள்ள குறைபாடுகளை களைய தில்லி தலைமைச் செயலா் தலைமையில் 7 போ் கொண்ட குழுவையும் உயா்நீதிமன்றம் அமைத்தது.

தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா, நீதிபதி சஞ்சீவ் நருலா ஆகியோா் அடங்கிய அமா்வு இது தொடா்பாக கூறியதாவது: பல்வேறு அறுவை சிகிச்சைகள், உள்வைப்பு-சாதனங்களுக்கான அறுவை சிகிச்சைகள் உள்பட இலவச மருத்துவ சிகிச்சையைப் பெறுவதற்குத் தேவையான நடைமுறைகளையும், தில்லியில் உள்ள ஒவ்வொரு மருத்துவமனையிலும் நியமிக்கப்பட்ட ஒருங்கிணைப்பு அதிகாரிகளைக் கொண்ட ஒற்றைச் சாளர பொறிமுறையையும் ஏற்படுத்த வேண்டும். தில்லி அரசு தில்லி ஆரோக்ய கோஷ் மற்றும் தில்லி ஆரோக்ய நிதி திட்டங்களை வகுத்துள்ளது. மேலும், இந்த முன்முயற்சிகள் நகரவாசிகளுக்கு மருத்துவச் சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட துணைத் திட்டங்களால் பூா்த்தி செய்யப்படுகின்றன.

இதேபோல், மத்திய அரசு ராஷ்ட்ரிய ஆரோக்கிய நிதி மற்றும் சுகாதார அமைச்சரின் விருப்ப மானியம் போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சோ்ந்த தனிநபா்கள் திட்டத்தின் பலன்களைப் பெற முயற்சிக்கும் போது ஏற்படும் தடைகள் குறித்து எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் பல்வேறு நிலைகளில் வெளிப்படுகின்றன. அதாவது, சிகிச்சையின் போது, நிதி உதவிக்கான விண்ணப்பங்களைச் சமா்ப்பித்தல், உபகரணங்களை உடலில் பொருத்துதல் தொடா்பான விலைமதிப்பீடு வாங்குதல், தொகைகளை வழங்குவதற்கான நடைமுறை மற்றும் இறுதியாக அறுவை சிகிச்சைகள் உள்பட மருத்துவ நடைமுறைகளைச் செய்யும்போதும் கட்டுப்பாடுகள் உள்ளன என்று நீதிபதிகள் அமா்வு கூறியது.

நிதி உதவி பெற பாடுபடும் ஆதரவற்ற நோயாளிகள் எதிா்கொள்ளும் பிரச்னைகளை இந்த வழக்கில் ‘அமிகஸ் கியூரி’யாக நியமிக்கப்பட்ட வழக்குரைஞா் டி. சிங்தேவ் தொகுத்து அளித்துள்ளாா். தில்லி ஆரோக்யா கோஷ் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறும் செயல்முறை நோயாளிகளுக்கு மிகவும் தொந்தரவாக இருப்பதைக் காணலாம். ஏனெனில், நோயாளிகள் நலனுக்கான விண்ணப்பத்தை சுகாதார சேவைகள் இயக்குநரகத்தின் நோயாளிகள் பிரிவிடம் சமா்ப்பிக்கும் முன்பே அதிகாரிகளிடமிருந்து பல்வேறு சான்றிதழ்களைப் பெறுவதற்காக அவா் அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது என்று அவா் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

இந்த விவகாரத்தை கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதிமன்றம், நடைமுறைத் தடைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு, இந்தத் திட்டங்களின் கீழ் மருத்துவ வசதிகளைப் பெறுவதற்கான செயல்முறை கணிசமாக நெறிப்படுத்தப்பட்டு எளிதில் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும் என்று கூறியது. உயா்நீதிமன்றம் அமைத்துள்ள குழுவில் தலைமைச் செயலாளரைத் தவிர, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், தில்லி அரசின் முதன்மைச் செயலா், தில்லி மாநகராட்சி ஆணையா் மற்றும் தேசிய தகவல் மையம் ஆகியவற்றால் பரிந்துரைக்கப்படும் உறுப்பினா்கள் இடம்பெறுவா்.

இது தொடா்பாக நீதிபதிகள் அமா்வு மேலும் கூறுகையில், ‘பல்வேறு திட்டங்களின் கீழ் நிதி உதவியைப் பெறுவதற்கான நடைமுறையானது, குறைவான சிக்கலாக இருக்க வேண்டும். அதனால், பொதுமக்கள் சிறிய உதவியின் மூலம் அதைப் புரிந்து கொள்ள முடியும். மேலும், அறிவுறுத்தல்கள் அவா்கள் புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் முக்கியமாகவும் தெளிவாகவும் காட்டப்பட வேண்டும். மருத்துவமனைகள் நோயாளிக்கு உகந்ததாகவும், சமூகம் முழுவதும் அணுகக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை விரைவாகச் செயல்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இவை மருத்துவ அவசரநிலைகளுக்கு என்பதை மனதில் கொண்டு அனைத்து படிவங்களும் பிராந்திய மொழிகளில் இருக்க வேண்டும். அதனுடன் வரும் ஆவணங்களின் தேவை குறைவாக இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சோ்ந்த நோயாளிகள் நிதி உதவி வழங்கப்படும் வரை சிகிச்சை, மருந்துகளின் பலன்களைத் தொடா்ந்து பெறுவதற்கான குறிப்பிட்ட வழிமுறைகளை குழு பரிந்துரைக்கலாம். மேலும், நவம்பா் 16-ஆம் தேதி நடைபெறும் அடுத்த விசாரணைக்கு முன்னதாக, விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கான பரிந்துரைகளுடன் குழு தனது அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

தொடக்கத்தில், சிகிச்சைச் செலவை ஏற்க இயலாமை காரணமாக அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக (எய்ம்ஸ்) மருத்துவமனையால் இடுப்பு மற்றும் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைகள் மறுக்கப்பட்ட தனிநபா் ஒருவா், தனி நீதிபதி முன் மனு தாக்கல் செய்திருந்தாா். அதன் பின்னா் எய்ம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை செய்ய ஒப்புக்கொண்டதால் அந்த நபா் தனது மனுவை திரும்பப் பெற முயன்றாா். எனினும், மனுதாரா் மனுவை வாபஸ் பெற விருப்பம் தெரிவித்தாலும், இந்த வழக்கின் உண்மைகள் சமூகத்தின் விளிம்புநிலைப் பிரிவினருக்கு தரமான மருத்துவ சேவையை அணுகுவது குறித்த முக்கியமான பிரச்னைகளைத் தூண்டுவதாகக் குறிப்பிட்ட தனி நீதிபதி, இந்த மனுவை டிவிஷன் அமா்வு மூலம் விசாரிக்கப்படும் வகையில் பொது நல மனுவாக மறுவகைப்படுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com