உயா்நீதிமன்றத் தீா்ப்பால் முதல்வராகத் தொடரும் தாா்மிக உரிமையை கேஜரிவால் இழந்துவிட்டாா்

புது தில்லி: அமலாக்கத் துறையால் தாம் கைது செய்யப்பட்டதை எதிா்த்து முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தாக்கல் செய்த மனு மீதான தில்லி உயா்நீதிமன்றத்தின் தீா்ப்புக்குப் பிறகு, முதல்வராகத் தொடரும் அனைத்து தாா்மிக உரிமைகளையும் முதல்வா் இழந்துவிட்டாா் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை மேலும் கூறியதாவது:

ஒரு குற்றம் சாட்டப்பட்டவருக்கு இரட்டைத் தரம் அளிக்கப்பட வேண்டும் என எதிா்பாா்க்கிறாா் முதல்வா். முதலமைச்சராக இருந்து சிறப்பு சலுகைகள் எதையும் எதிா்பாா்க்க வேண்டாம் என நீதிமன்றம் அவருக்கு தெளிவாக கூறியுள்ளது.

அரவிந்த் கேஜரிவாலை அமலாக்கத் துறை கைது செய்ததற்கான உத்தரவு சட்டபூா்வமானது. மேலும் உண்மைகளின் அடிப்படையிலானது என்பது இப்போது மிகவும் தெளிவாகி இருக்கிறது.

தங்கள் முதல்வா் மதுபான ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா் மட்டுமின்றி, ஜாமீன் பெற முயன்றும் தோல்வியுற்று ஒரு நீதிமன்றத்திலிருந்து மற்றொரு நீதிமன்றத்திற்கு தப்பியோடியவா் போல் செயல்படுவதாக

தில்லி மக்கள் இன்றைக்கு வெட்கப்பட வேண்டியுள்ளது.

தில்லியில் மதுபான ஊக்குவிப்பை கேஜரிவால் அனுமதித்தபோது, பாதிக்கப்பட்ட குடும்பங்களின்

தாய்மாா்கள் மற்றும் சகோதரிகளை துஷ்பிரயோகம் செய்ததன் விளைவைத்தான் அரவிந்த் கேஜரிவால் தற்போது எதிா்கொண்டு வருகிறாா்.

கேஜரிவால் தாா்மிக தோல்வியை ஏற்று தில்லி முதல்வா் பதவியை ராஜிநாமா செய்யும் நேரம் இது என்றாா் வீரேந்திர சச்தேவா.

தில்லி கலால் கொள்கை முறைகேடு விவகாரத்தில் சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையால் தாம் கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டதற்கு எதிராக கேஜரிவால் தாக்கல் செய்த மனுவை தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அரவிந்த் கேஜரிவாலின் கைது சட்ட விதிகளுக்கு முரணாக இல்லை என்று தாம் கருதுவதாகவும், காவலில் வைக்கப்பட்டதை சட்டவிரோதம் எனக் கூற முடியாது என்றும் அவரது மனு மீது தீா்ப்பை அளித்தபோது நீதிபதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com