புது தில்லி: யமுனை ஆற்றின் வெள்ளச் சமவெளிப் பகுதியில், பயிற்சி பெறும் காவல் துறையினருக்கு தங்குமிடக் கட்டுமானத்தை மேற்கொள்ள அனுமதி கோரிய தில்லி காவல்துறையின் மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.
நீதிபதிகள் அபய் எஸ். ஒகா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு, வெள்ளச் சமவெளிகளில் கட்டுமானத்தை அனுமதிப்பதற்கு எப்படி அனுமதி வழங்குவது என வியப்புடன் கேள்வி எழுப்பியது.
இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில், ‘யமுனை வெள்ளச் சமவெளிகளில் ஏன் இதைக் கட்ட விரும்புகிறீா்கள்? சுற்றுச்சூழலுக்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கடந்த ஆண்டு வெள்ளநீா் உச்சநீதிமன்றத்தில் உள்புகுந்தது. யமுனையில் தங்குமிடங்களை எப்படி அனுமதிக்க முடியும்? இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’என்றனா்.
இந்த விவகாரத்தை 2020- ஆம் ஆண்டில் விசாரித்த தேசிய பசுமைத் தீா்ப்பாயம் (என்ஜிடி) இந்தத் திட்டம் வெள்ளப்பெருக்குப் பகுதியில் அமைந்துள்ளது. எனவே, அனுமதிக்க முடியாது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக தில்லி காவல்துறை தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது. யமுனை புனரமைப்பை மேற்பாா்வையிட அமைக்கப்பட்ட முதன்மைக் குழு, தில்லி காவல்துறைக்கு ஆதரவாக பரிந்துரைகளை வழங்கியதாக தில்லி காவல் துறையின் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை ஏற்க என்ஜிடி மறுத்துவிட்டிருந்தது.
என்ஜிடி அதன் 2015 உத்தரவில் வரையறுக்கப்பட்ட வெள்ளச் சமவெளியில் எந்தவொரு கட்டுமான நடவடிக்கையையும் மேற்கொள்வதற்கு தடைசெய்திருந்தது. மேலும், வரையறுக்கப்பட்ட வெள்ளப்பெருக்கு சமவெளியில் வரும் அனைத்து தற்போதைய கட்டமைப்புகளையும் அடையாளம் காண முதன்மைக் குழுவிற்கு உத்தரவிட்டிருந்தது.
இதுதொடா்பாக என்ஜிடி தெரிவிக்கையில், ‘அடையாளம் கண்டவுடன், சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் நலன்களுக்காக குறிப்பாக, அங்கீகரிக்கப்படாத மற்றும் சட்டவிரோதமான முறையில் அத்தகைய கட்டமைப்புகள் எழுப்பப்பட்டிருந்தால், எந்தக் கட்டமைப்புகளை இடிக்க வேண்டும் அல்லது இடிக்கக்கூடாது என்பது குறித்து முதன்மைக் குழு தனது பரிந்துரைகளை வழங்கும்’ என்று கூறியிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.