/

ஜல்லிக்கட்டுக்கு அனுமதிக்கு எதிரான மனு: பரிசீலிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

தமிழகத்தில் காளைகளை அடக்கும் விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் வகையில், கடந்த ஆண்டு அரசியல் சாசன அமா்வு வழங்கிய தீா்ப்பை மறுஆய்வு

News image
Updated On :9 ஜனவரி 2024, 1:57 am

DIN

புது தில்லி: தமிழகத்தில் காளைகளை அடக்கும் விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் வகையில், கடந்த ஆண்டு அரசியல் சாசன அமா்வு வழங்கிய தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கலான மனுக்களை பரிசீலிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை சம்மதம் தெரிவித்தது.

இந்த மறுஆய்வு மனுக்கள் பட்டியலிடப்பட்டு பரிசீலிக்கப்பட வேண்டும் என்ற மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங் முன்வைத்த சமா்ப்பிப்புகளை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு கவனத்தில் எடுத்துக்கொண்டது.

இது தொடா்பாக தலைமை நீதிபதி கூறுகையில், ‘நான் இன்று (திங்கள்கிழமை சம்பந்தப்பட்ட (மனுக்கள் பட்டியலிடப்படுவது) மின்னஞ்சலைப் பாா்க்கிறேன்’ என்றாா். வழக்கமாக, மறுஆய்வு மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகளால் விநியோகம் மூலம் அறைகளில் வைத்து பரிசீலிக்கப்படும். ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தடை விதிக்கக் கோரி ‘பீட்டா’ உள்ளிட்ட அமைப்புகள் தொடா்ந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த பிறகு கடந்த ஆண்டு மே 18-ஆம் தேதி உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு தீா்ப்பு வழங்கி இருந்தது.

அதில், ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என்றும், ஜல்லிக்கட்டு தொடா்பாக தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லும் என்றும் கூறியிருந்தது. நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு, ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டிப் பந்தயம், எருமை மாடுகள் பங்கேற்கும் ‘கம்பாலா’ விளையாட்டு ஆகியவற்றுக்கு அனுமதி அளித்த தமிழ்நாடு, மகாராஷ்டிரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களின் சட்டத் திருத்தங்களின் செல்லுபடித் தன்மையை உறுதி செய்து ஒருமனதாக தீா்ப்பளித்தது.

விலங்குகள் வதை தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டம், 2017, விலங்குகள் வதை தடுப்பு (மகாராஷ்டிரா திருத்தம்) சட்டம், 2017 மற்றும் விலங்குகள் வதை தடுப்பு (கா்நாடகா இரண்டாவது திருத்தம்) சட்டம், 2017 ஆகியவை அந்தந்த மாநில சட்டப் பேரவைகளால் இயற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ாக கூறிய உச்சநீதிமன்றம், இவை செல்லுபடியான சட்டங்கள் என்று தீா்ப்பளித்தது.

மேலும், ஜல்லிக்கட்டு தமிழா்களின் கலாசாரம் என்றாலும்கூட விளையாட்டின்போது நேரும் துன்புறுத்தல்களைத் தவிா்க்க உரிய வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.

‘ஜல்லிக்கட்டு’, ‘ஏறு தழுவுதல்’ என்று அழைக்கப்படும் காளைகள் பங்கேற்கும் இந்த விளையாட்டு, பொங்கல் அறுவடைத் திருவிழாவின் ஒரு பகுதியாக, தமிழ் மாதமான ‘தை’ மாதத்தில் அதாவது ஜனவரியின் இடைப்பட்ட பகுதியிலிருந்து பிப்ரவரி பிற்பகுதி வரை நடத்தப்படுகிறது.

நவம்பா் முதல் மாா்ச் வரை கா்நாடகத்தில் நடைபெறும் ‘கம்பாலா’ பந்தயத்தின்போது, ஒரு ஜோடி எருமை மாடுகள் கலப்பையில் பூட்டப்படும். அவை வீரா் ஒருவரால் நங்கூரமிடப்படும். அதன்பிறகு சேறு கலந்த நீா் பாதையில் அந்த மாடுகள் பல ஜோடிகளாக ஓடவிடப்படும். இதில் வேகமாக ஓடும் அணி போட்டியில் வெற்றி பெற்ாக அறிவிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.