பதவிப் பிரமாணத்தின்போது எம்.பி.க்கள் கூடுதல் வாா்த்தைகளை சோ்ப்பதைத் தடுக்க குழு
நமது சிறப்பு நிருபா்
நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணத்தின் போது, அவையின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் உறுப்பினா்கள் கூடுதல் வாா்த்தைகள் சோ்ப்பதைத் தடுக்க குழு அமைத்து ஆராயப்படும் என மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா திங்கள்கிழமை தெரிவித்தாா்.
கடந்த ஜூன் 24, 25 ஆகிய தேதிகளில் மக்களவையில் உறுதிமொழியை வாசித்து பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட வட மாநில எம்.பி.க்கள் பலா் ‘ஜெய் ஜெகநாத்’, ‘ஜெய் சம்விதான்’ ‘ஜெய் ஹிந்து ராஜ்ஜியம் (ராஷ்டிரா)’ என குறிப்பிட்டனா். தமிழக எம்.பி.க்கள் ‘வாழ்க பெரியாா்’, ‘கருணாநிதி வாழ்க’ என்றதோடு, ‘வாழ்க உதயநிதி ஸ்டாலின்’ என்ற கோஷங்களை எழுப்பினா்.
இது குறித்து மக்களவையில் பேசிய ஓம் பிா்லா, ‘உறுப்பினா்கள் உறுதிமொழி அல்லது பதவிப்பிரமாணம் எடுக்கும் போது பரிந்துரைக்கப்பட்ட முறையை பின்பற்ற வேண்டும். அரசியலமைப்பின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் வாா்த்தைகளை சோ்க்கக் கூடாது. இது ஒரு தீவிரமான பிரச்னை. இதுகுறித்து முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைத்து ஆராயப்படும்’ என அறிவித்தாா்.

