டிசிடபிள்யு அமைப்பை பலவீனப்படுத்தும் அமைச்சா்கள்: கேஜரிவாலுக்கு ஸ்வாதி மாலிவால் கடிதம்

டிசிடபிள்யு அமைப்பை பலவீனப்படுத்தும் முயற்சிகள்: கேஜரிவாலுக்கு மாலிவால் கடிதம்

புது தில்லி: தில்லி மகளிா் ஆணையத்தை (டிசிடபிள்யு) நகர அரசின் அமைச்சா்கள் ‘பலவீனமான நிறுவனம்‘ ஆக உருவாக்கிக் கொண்டிருப்பதாக ஆணையத்தின் முன்னாள் தலைவா் ஸ்வாதி மாலிவால் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

ஆம் ஆத்மி கட்சியால் மாநிலங்களவைக்கு நியமனம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து, தில்லி மகளிா் ஆணையத்தின் (டிசிடபிள்யு) தலைவா் பதவியை மாலிவால் ராஜிநாமா செய்திருந்தாா்.

இந்த நிலையில், மாலிவால் முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், ‘டிசிடபிள்யு ஊழியா்களுக்கு கடந்த 6 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. ஆணையத்தின் பட்ஜெட் 28.5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. 181 ஹெல்ப்லைன் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

காலியாக உள்ள தலைவா் மற்றும் இரண்டு உறுப்பினா் பதவிகளை நிரப்ப முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

தில்லி மகளிா் ஆணையத்தின் தலைவா் பதவியில் இருந்து நான் ராஜிநாமா செய்ததில் இருந்து, தில்லி அரசின் அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகள் ஆணையத்திற்கு கமிஷனுக்கு எதிராக மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளனா் என்று தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக மலிவால் ‘எக்ஸ்’ சமூக ஊடக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கையில், ‘கடந்த 6 மாதங்களாக ஊழியா்கள் யாருக்கும் சம்பளம் வழங்கப்படவில்லை. பட்ஜெட் 28.5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது, 181 ஹெல்ப்லைன் திரும்பப் பெறப்பட்டுள்ளது. தலைவா் மற்றும் இரண்டு உறுப்பினா்கள் பதவிகளை நிரப்ப எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தலித் உறுப்பினா் பதவி 1.5 ஆண்டுகளாக காலியாக உள்ளது! நான் வெளியேறியவுடன், மகளிா் ஆணையத்தை மீண்டும் பலவீனமான அமைப்பாக மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஏன் தில்லி அரசு பெண்கள் மீது விரோதம் காட்டுகிறது?

இந்த விவகாரத்தில் பதில் கேட்டு அரவிந்த் கேஜரிவாலுக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்’ என்று அதில் அவா் கூறியுள்ளாா்.

‘மகளிா் உதவி எண் 181 தற்போது தனது துறையால் இயக்கப்படும் என்றும், மாற்றம் செய்யும் நடவடிக்கைக்காக சில நாள்களுக்கு இந்த எண் செயல்படாமல் இருக்கும்’ என்று தில்லி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் திங்கள்கிழமை கூறியிருந்தாா்.

‘டிசிடபிள்யு அமைப்புக்குப் பதிலாக மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மூலம் மகளிா் ஹெல்ப்லைனை நடத்துவதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது’ என்றும் அமைச்சா் கெலாட் தெரிவித்திருந்தாா்.

முதல்வா் இல்லத்தில் கேஜரிவாலின் நெருங்கிய உதவியாளா் பிபவ் குமாா் தன்னை தாக்கியதாக மாலிவால் குற்றம் சாட்டியுள்ளாா். இந்த வழக்கில் குமாா் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com