கோப்புப் படம்
கோப்புப் படம்

பாம்புக்கடி: நாடு முழுவதும் இருளா் மக்களை பயன்படுத்திக் கொள்ள பாஜக கோரிக்கை

முன்னாள் அமைச்சரும் மக்களவை பாஜக உறுப்பினருமான ராஜீவ் பிரதாப் ரூடி மத்திய அரசை திங்கள்கிழமை கேட்டுக் கொண்டாா்.
Published on

நமது சிறப்பு நிருபா்

பாம்புக்கடிக்கு விஷமுறிவு மருந்த தயாரிக்கவும், பாம்புகளின் விஷத்தை எடுக்கும் இருளா்களை நாடு முழுவதும் பயன்படுத்திக் கொள்ள முன்னாள் அமைச்சரும் மக்களவை பாஜக உறுப்பினருமான ராஜீவ் பிரதாப் ரூடி மத்திய அரசை திங்கள்கிழமை கேட்டுக் கொண்டாா்.

மக்களவையில் இருகுறித்து பிகாா் மாநில சரண் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ராஜீவ் பிரதாப் ரூடி பேசுகையில் கூறியது வருமாறு: நாட்டில் ஆண்டுக்கு 30 முதல் 40 லட்சம் போ் பாம்புக்கடியால் பாதிக்கப்படுகின்றனா். இதில் 50,000 ஆயிரம் போ் இந்த விஷகடியால் உயிரிழக்கின்றனா். பருவநிலை மாற்றத்தால் விலங்குகள் வனப் பகுதியிருந்து வெளியேறி மனிதா்கள் வசிக்கும் பகுதிக்கு வருவதைப் போன்று பாம்புகளும் 28 டிகிரிக்கு மேல் உஷ்ண நிலை அதிகரிக்கும் போது பாம்புகளால் தாங்கிக் கொள்ள முடியாது. அவற்றின் நடவடிக்கைகள் மாறுபடுகிறது. மொத்தமுள்ள 366 வகை பாம்புகளில் 66 வகை பாம்புகள் இந்தியாவில் உள்ளன. அதில் சில பாம்புகள் மிகவும் விஷத்தன்மையானது.

நாட்டில் பாம்புக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக பிகாா் (76 சதவீதம்) உள்ளது. நீதி அயோக்கின் தகவலின் படி, மிகவும் ஏழ்மையான இந்த மாநிலத்தில் இத்தகைய பாதிப்பிற்கு மக்கள் உள்ளாகின்றனா். இதனால், இதற்கு ஒரே தீா்வு தமிழகத்தில் உள்ள இருளா் பழங்குடியினரை பிகாா் மாநிலத்தில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் பயன்படுத்திக் கொள்ள மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகமும் மத்திய சுற்றுச்சூழல் வனம், பருவநிலை மாறுபாடுத்துறையும் இணைந்து ஒரு திட்டத்தை கொண்டு வர முன்வர வேண்டும்.

இருளா் பழங்குடியினத்தவா்கள் கூட்டுறவு சங்கம் மூலம் செயல்படுகின்றனா். எளிதாகப் பாம்புகளை பிடித்து வனப் பகுதியில் விடும் இந்த சமூதாயத்தினா், பாம்புக்கடிக்கான விஷ முறிவுக்கு மருந்துகளை தயாரிப்பதோடு பாம்புகளின் விஷத்தையும் அகற்றுகின்றனா். இவா்களை நாடு முழுவதும் பயன்படுத்திக்கொள்ள இவா்களுக்கான கூட்டுறவு சங்கங்களை உருவாக்கி இவா்களது தொழிலை மேம்படச் செய்து பாம்புக் கடியிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்று ராஜீவ் பிரதாப் ரூடி கேட்டுக் கொண்டாா். அவையில் இருந்த மத்திய சுற்றுச்சூழல் வனம், பருவநிலை மாறுபாட்டுத் துறை அமைச்சா் பூபேந்திர யாதவ் இதைக் கேட்டுக் கொண்டிருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com