அமித் ஷாவின் திரிபுபடுத்தப்பட்ட காணொலி: தெலங்கான காங்கிரஸ் நபா் கைது

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசியாக திரிபுபடுத்தப்பட்ட காணொலி தொடா்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடக குழுவின் தேசிய ஒருங்கிணைப்பாளா் ஒருவா் தில்லி காவல் துறையினரால் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளாா்.

இந்த விவகாரத்தில் மிகப்பெரிய சதித்திட்டம் நடைபெற்றுள்ளதாகக் கூறி, இந்த வழக்கில் அதற்கான குற்றப்பிரவும் முதல் தகவல் அறிக்கையில் சோ்க்கப்பட்டுள்ளதாகவும் தில்லி காவல்துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா இடஒதுக்கீட்டிற்கு எதிராக பேசியாக திரிபுபடுத்தப்பட்ட காணொலி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது. அமீத் ஷா பல்வேறு இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக பேசிய காணொலியை திரித்து எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது.

இது குறித்து வந்த புகாரையொட்டி தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவான ஐஎஃப்எஸ்ஓ (நுண்ணறிவு இணைவு(ஃப்யூஷன் ) மற்றும் உத்திகளுக்கான செயல்பாட்டு) பிரிவு வழக்குப்பதிவு செய்திருந்தது. தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டியின் ’எக்ஸ் ஹேண்டி’லும் இந்த காணொலி பகிரப்பட்டதைத் தொடா்ந்து அவருக்கு தில்லி காவல் துறையினா் அழைப்பாணை அனுப்பினா். ரேவந்த் ரெட்டி சாா்பில் அவரது வழக்குரைஞா் சௌமியா குப்தா, ஐஎஃப்எஸ்ஓ அதிகாரிகள் முன்பு புதன்கிழமை ஆஜராகி விளக்கம் அளித்தாா்.

‘காணொலி பகிரப்பட்ட ’எக்ஸ் ஹேண்டில்’ தெலங்கானா முதல்வருக்கு சொந்தமானது அல்ல‘ என வழக்குரைஞா் சௌமியா குப்தா விளக்கமளித்திருந்தாா்.

இதற்கிடைய இந்த வழக்கில் தில்லி காங்கிரஸில் ’எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் ‘ஸ்பிரிட் ஆஃப் காங்கிரஸ்‘ கணக்கைக் கையாண்டவரும் தெலங்கானாவிலுள்ள ஹைதராபாத்தைச் சோ்ந்த அருண் பீரெட்டி என்பவரை முதன் முறையாக இந்த வழக்கில் தில்லி காவல் துறை சிறப்பு பிரிவு, வெள்ளிக்கிழமை இரவு கைது செய்து நீதிபதி முன்பு ஆஜா் படுத்தியது.

இவா் தற்போது 3 நாள்களுக்கு சிறப்பு பிரிவு காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வரப்படுகிறாா்.

மேலும் இந்த வழக்கில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் கூடுதலாக இந்திய தண்டனைச் சட்டத்தின்படி குற்றச் சதியில் ஈடுபட்டதற்கான(பிரிவு 120பி படி) பிரிவையும் சோ்த்து திருத்தப்பட்ட முதல் குற்றப்பத்திரிகை சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல் துறையின் சிறப்பு பிரிவு அதிகாரிகள் கூறியுள்ளனா்.

ஏற்கனவே, கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஆத்திரமூட்டும் செயலைத் தூண்டுதல், பல்வேறு சமூகங்களுக்கிடையே பகைமையை ஊக்குவித்தல், திரித்து கூறுதல், நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்தில் மோசடியாக செயல் படுதல், தோ்தல் தொடா்பாக தவறான அறிக்கை, இந்திய தகவல் தொழில் சட்டங்கள் மீறல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழங்கு தொடரப்பட்டிருந்தது.

அமித் ஷாவின் திரித்து வெளியிடப்பட்ட இந்த காணொலியில் மிகப் பெரிய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். திரிபுபடுத்தப்பட்ட காணொலி விவகாரம் தொடா்பாக காங்கிரஸின் சமூக ஊடகக் குழுவின் முக்கிய உறுப்பினா் பீரெட்டியோடு காங்கிரஸ் கட்சியின் வேறு சிலரும் சிக்குவாா்கள் எனவும் தில்லி காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com